மாமியார் தேவயானி! மாப்பிள்ளை தினேஷ்!!



தொண்ணூறுகளில் ‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’,‘ நாடோடி மன்னன்’,  ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம், பதினேழு ஆண்டுகளுக்குப்  பிறகு ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம்  இயக்கியுள்ளார். படத்தின் ரிலீஸ் வேலையில் பரபரப்பாக இருந்த அவரிடம் பேசினோம்.

“படத்தை தயாரிச்சு இயக்குறது உங்க அப்பா ஸ்டைல். நீங்களும் அப்படியே களமிறங்கி இருக்கீங்க. படத்தோட கதை சொல்லும் பாணியும் அப்படியே இருக்குமா?”


“அப்பா, ஒரு சக்சஸ் பார்முலா வைத்திருப்பார். சின்னதா ஒரு கதையை வெச்சுக்கிட்டு அதுலே நிறைய கமர்ஷியல் எலிமென்ட்ஸ்,  காமெடி சேர்த்து ஃபேமிலி என்டர்டெயினராகக் கொடுப்பாரு. நானும் அதே ஃபார்முலாவை மெயின்டெயின் செய்யுறேன். பக்கா ஃபேமிலி  சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் பண்ணியிருக்கேன். வழக்கமாக மாமியார் மருமகள் கதைகள்தான் சினிமாவில் வந்திருக்கிறது.  ஜெயித்திருக்கிறது. ‘பூவா தலையா’, ‘மாப்பிள்ளை’ மாதிரி மாமியார் - மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும். அமோக வெற்றி  பெறும். அப்படித்தான் இது உருவாக்கப் பட்டிருக்கு.”

“உங்களைப் போன்ற இளம் இயக்குநர்கள் ஸ்டைலீஷ் கதைக்குத்தானே முக்கியத்துவம் தருவார்கள்?”

“என் முதல் படம் என்னுடைய விசிட்டிங் கார்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த விசிட்டிங் கார்டை கிரியேட்டிவ்வாக,  ஸ்டைலாக பண்ணுவதைவிட கலர்ஃபுல்லாக பண்ண நினைத்தேன். கலர் என்றாலே சிரிப்பு, சந்தோஷம், காதல், காமெடி என்று எல்லா  அம்சங்களும் வந்துவிடும். நான் கருத்து சொல்வதற்காக படம் இயக்கவில்லை. இது சிரிச்சிட்டு போகிற மாதிரி கமர்ஷியல் டிராமா.  படத்துல சின்ன லைன்தான் இருக்கும். ரிலாக்ஸ் மூட்ல படம் பார்க்க வரும் ரசிகர்கள் தலையில் பெரிய விஷயத்தைத் திணிக்க  விரும்பவில்லை. கொடுக்கும் காசுக்கு சிரிச்சிட்டு போங்க என்பதுதான் எங்க படத்தோட டேக் லைன்.அதை நோக்கியே படம் இருக்கும்.  எந்த ஒரு இயக்குநருக்கும் காமெடி கை கூடி வர வேண்டும். ஏன்னா, காமெடி படம் பண்ணத் தெரிந்தால் எந்த ஒரு ஜானர்லவேணும்னாலும்  படம் பண்ணலாம்.”

“உங்க ஹீரோ தினேஷ் என்ன  சொல்றாரு?”

“இதில் தினேஷை முழுக்க முழுக்க கலர்ஃபுல் ஹீரோவா காட்டியிருப்போம். அவருடைய படங்களில் இது வித்தியாசமாக இருக்கும்.  கதையைப் பொறுத்தவரை மூணு கேரக்டர் அவுட் ஆஃப் தி பாக்ஸ் என்று சொல்லலாம்.  அதில் ஒரு கேரக்டரைத்தான் தினேஷ் பண்றார்.  தினேஷ் இப்போது வேறு வேறு கதைகளைப் பண்ணிக் கொண்டிருக்கிறார். இந்தப் படம்  அவரை பி அண்ட் சி ஆடியன்ஸுக்கான  ஹீரோவாகக் கொண்டு வரும் முயற்சியாக இருக்கும். திருப்தியாகத்தான் இருக்காரு.”

“ஹீரோயின் அதிதி மேனன்?”


“ஹீரோயின் கேரக்டருக்கு கிளாமரும் கிடையாது; சோகமும் கிடையாது. சிரிப்பு, என்ஜாய்மென்ட் மட்டும்தான். அதிதி மேனன் வளர்ந்து  வரும் நடிகைகளில் முக்கியமானவர். எடுத்துக்கிட்ட கேரக்டருக்கு நியாயம் செய்வதற்கு அதிக முனைப்போடு உழைத்திருக்கிறார்.   அவருடையஅர்ப்பணிப்பு உண்மையானது. அது படத்துல அப்பட்டமாகத் தெரியும்.”

“மாமியார் கேரக்டருக்காக தேவயானி அதிகமாக மெனக்கெட்டு நடித்தார்களாமே?”

“ஆரம்பத்துல தேவயானி மேடம் மாமியார் ரோலுக்கு செட்டாவாங்களா செட்டாகமாட்டாங்களா என்ற கேள்வி இருந்தது. ஏன்னா, சார்மிங்  அண்ட்  க்யூட்டான ஹீரோயினை வித்தியாசமான ரோலில் காட்ட வேண்டும் என்ற சேலன்ஜ் இருந்தது. ஆனால் டே ஒன்லேயே  தேவயானி மேடம் மாமியார் ரோலுக்கு அடாப்டாகிவிட்டார். அவர் கமிட்டான பிறகு படத்துக்கு கூடுதல் அட்ராக்‌ஷன் கிடைத்தது.எனக்கு இது முதல் படம். அவரோ சீனியர் ஆர்ட்டிஸ்ட்.ரீடேக் என்ற பேச்சுக்கே இடமில்லை. முன்னதாகவே க்ரவுண்ட் ஒர்க் பண்ணுவோம்.  தப்பு வந்தால் ரீடேக் போகலாம் என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாக ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துப்போம். முழுக்க முழுக்க என்ன  அவுட் புட் வரப்போகுது என்பதை முன்பே பேசிவிடுவோம். அப்படி பேசும்போதே பைனல் டிசிஷன் எடுக்கமுடிந்தது. தப்பு வந்துட்டா  அவராகவே கம் பேக் என்று சொல்லி பண்ண ஆரம்பித்துவிடுவார். சீனியர் நடிகைக்கான மெச்சூரிட்டி, இயல்பான நடிப்பு என படம்  முழுவதும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.”

“பிற நடிகர்கள்?”


“ஆனந்த்ராஜ் முக்கியமான லீட் பண்றார். சமீப காலமாக ப்ளாக் ஹியூமர் பண்ணிக் கொண்டிருந்தார். இதில் லாஜிக்கல் ஹியூமர்  பண்ணியிருக்காரு. அதுமட்டுமில்ல. அப்பா இயக்கிய படங்களில் ஆனந்த்ராஜ் சாரின் பங்களிப்பு பெரியளவில் இருக்கும். அதே போல்  இந்தப் படத்திலும் அவருடைய கேரக்டர் பேசப்படும். தவிர, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ரேணுகா, சாம்ஸ், முனிஸ்காந்த் மகாநதி  சங்கர், கிரேன் மனோகர் என்று காமெடி காம்போவில் ஏராளமான நடிகர்கள் இருக்கிறார்கள்.”

“பாடல்கள் நல்லா இருக்கே?”


“இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவருடைய திறமையை ‘தென்மேற்கு பருவக்காற்று’  படத்திலேயே ப்ரூப் பண்ணியிருந்தார். அவரிடம் திறமை அதிகம். அதை நாம்தான் திருடிக்கொள்ள வேண்டும்.அப்புறம், கேமராமேன்   சரவணன் அபிமன்யு பற்றி சொல்லியாக வேண்டும். இந்தப் படத்துக்கு அவரை கமிட் பண்ணும்போது ‘நான் ஒர்க் பண்ணிய படங்களில்   சேஸிங், ஃபைட் என்று கொடுக்கிறார்கள். நீங்க மட்டும்தான் அவுட்டோர் அழைத்துச் செல்வதாகச் சொல்கிறீர்கள். சென்னையை விட்டு  வெளியூரில் ஒரு படம் பண்ணவேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்காகவே வருகிறேன்’ என்றார். அவர் உள்ளே வந்த பிறகு படம்  வேற லெவலுக்கு மாறியது.ஆர்ட் டைரக்டர் மாயபாண்டி பிஸியான மனிதர். ‘ஸ்கெட்ச்’ உள்பட பெரிய படங்களில் வேலை பார்த்தவர்.  மினிமம் பட்ஜெட்டில் எங்க படத்தை அழகாகக் காட்டியுள்ளார்.”

“இயக்குநரே தயாரிப்பாளராக இருப்பது வசதிதான் இல்லையா?”

“தயாரிப்பாளரே இயக்குநர் என்பதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. நாங்க இங்க தான் சம்பாதித்தோம். சினிமாவில் லாப நஷ்ட  விகிதங்கள் மாறிக் கொண்டே இருக்கும். பணம் நிரந்தரமில்லை என்ற மனப்பான்மையில் உள்ளவர்கள் மட்டுமே இங்கு படம் பண்ண  முடியும். அப்படி நினைக்கிறவர்களுக்கு இது வரம். இல்லை என்றால் சாபம்.”

“டைரக்‌ஷன் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?”


“அப்பாவின் கனவை நிறைவேற்றவே சினிமாவுக்கு வந்தேன். இல்லை என்றால் ஏதாவது ஒரு  வெளி நாட்டிலோ அல்லது ஐடி  கம்பெனியிலோ இருந்திருப்பேன். என்னுடைய அப்பாவை ரொம்ப சீக்கிரமே இழந்துவிட்டேன். லக்ஸரி வாழ்க்கை இருந்தால் பொறுப்பு  வராது. நம்மை உணரும்போதுதான் பொறுப்பு வரும். அப்படி எனக்கு என் அப்பாவின் இறப்புக்குப் பிறகே பொறுப்பு வந்தது என்பது  வருத்தமான விஷயம். இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் நிற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எம்.பி.ஏ, டி.எப் டி. முடித்த பிறகு ‘ரேணிகுண்டா’   பன்னீர்செல்வம் சாரிடம் வேலை பார்த்து சினிமா கத்துக்கிட்டேன்.”

“தமிழில் ‘மாப்பிள்ளை’, ‘களவாணி’ இரண்டுமே பெரும் வெற்றி பெற்ற படங்கள். இரண்டு தலைப்பையும் ஒண்ணாக்கிக் கொடுக்கிறீங்க...”

“இந்த இரண்டு படங்களையும் பிட்டு அடிச்சிருக்கேனான்னு நேரடியாகவே கேட்டிருக்கலாமே! நம்ம படத்துல கமர்ஷியல் விஷயங்களுடன்  ஒரு நல்ல விஷயத்தையும் சொல்லியிருப்பேன். அந்தப் படங்களில் இருக்கக்கூடிய கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் என் படத்துலேயும்  இருக்கும் என்பதைத் தவிர, அந்தப் படங்களுக்கும் இதுக்கும் எந்த ஒற்றுமையும் இருக்காது.”

“ரசிகர்கள் உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறீர்களா?”

“எந்தவொரு படத்துக்குமே எதிர்பார்ப்பு இல்லாம தியேட்டருக்கு வரும் ரசிகர்கள்தான் சினிமாவைக் காப்பாற்றுகிறார்கள். அவர்களால்தான்  ஒரு சினிமாவை ரசிக்கவே முடியும். இந்த நடிகர், இந்த இயக்குநரோட படம் இப்படித்தான் இருக்கும் என்கிற முன்முடிவோடு  வருகிறவர்களே ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் எல்லாப் படத்தையும் எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். சினிமா என்பது மேஜிக். லாஜிக்  பார்க்காம ரசிக்கணும்.”

“உங்க அப்பா, சினிமாவில் நிறைய பேருக்கு வாழ்வளித்தவர். அவருடைய நண்பர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள் உங்களுக்கு  உதவுகிறார்களா?”

“சினிமாத்துறையில் நன்றியை எதிர்பார்க்க முடியாது. வெற்றியோடு இருக்கிறவரைதான் மரியாதை. என் அப்பாவோட இறுதிச் சடங்குக்கு  பெயர் சொல்லும்படி யாரும் வரவில்லை. நாங்க அதை எதிர்பார்க்கவும் இல்லை. அதை ஒரு குறையாகவும் சொல்லவில்லை. ஆனா,  இங்கே வெல்லுபவனுக்குத்தான் மரியாதை என்கிற யதார்த்தத்தை எல்லாருமே புரிஞ்சுக்கணும். வெற்றிதான் நம்மை இங்கே  நிலைநிறுத்தும். என்னை நிலைநிறுத்திக்க என் அப்பாவைப் போலவே போராடுவேன்.”

- சுரேஷ்ராஜா