அரைச்ச மாவை அரைப்போமா! : சீமராஜா விமர்சனம்




‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ போன்ற படங்களில் வெட்டி ஆபீஸராக ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் வேடத்தை  சிவகார்த்திகேயனுக்குக் கொடுத்த இயக்குநர் பொன்ராம், அவரை ‘சீமராஜா’வாக சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்க்க  ஆசைப்பட்டிருக்கிறார். சிவகா, ராஜாவாக கம்பீரமாக ஆட்சி செய்தாரா என்பதைப்பார்ப்போம். இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டியில்  வலம்வந்து, கும்பிடு போடுகிறவர்களுக்கெல்லாம் கிம்பளம் கொடுக்கும் வள்ளலாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருடைய கணக்குப்பிள்ளையாக சூரி. இருவரும் வழக்கம்போல நக்கல், நையாண்டி என எல்லாவற்றையும்  செய்கிறார்கள்.

பல இடங்களில் சிரிப்பு, சில இடங்களில் கடுப்பு. இது சக்ஸஸ் காம்பினேஷன், அதை சட்டுனு பிரிக்கமுடியாது என்று,  கேள்வி கேட்கும் ரசிகர்களின் வாயை சூரியே வசனத்தால் அடைத்துவிடுகிறார்.  ராஜாவாக இருந்தாலும் ராணி வேண்டுமென்றால் அவர்  பின்னால் சுற்றியாக வேண்டும். பள்ளிக்கூடத்தில் PT மாஸ்டராக  வேலை பார்க்கும் சமந்தா பின்னால் சுற்றுகிறார் சிவகார்த்திகேயன்.  அந்தக் காதலுக்குச் சோதனைகள், அதே நேரம் தங்கள் சமஸ்தானத்தில் வாழும் மக்களுக்கு ஏற்படும் கொடுமைகளிலிருந்து அவர்களைக்  காப்பாற்ற வேண்டிய கடமை. காதலையும், கடமையையும் எப்படி கண்ணியம் காத்து சீமராஜா எதிர்கொள்கிறார் என்பதுதான் படம்.

முந்தைய படங்களைக் காட்டிலும் நன்றாக மெருகேறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். வழக்கமான ஆட்டம், பாட்டங்களுடன், 14 ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்த மன்னர் கடம்பவேல் ராஜாவாக அவர் வருகிற காட்சிகளில் முற்றிலும் புதிய பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார்.  மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறவன் தலைவன் அல்ல, மக்களுக்குக் கேடயமாக இருக்கிறவனே தலைவன் என்று சீறும்  சிவகார்த்திகேயன், கடல் கடந்த தமிழர்களின் வீரத்தை நினைவுபடுத்துகிறார்.

சமந்தா அழகு என்று புதிதாகச் சொல்லவேண்டியதில்லை, இந்தப் படத்தில் லாவகமாகக் கம்பு சுற்றி அதிரடியும் காட்டியிருக்கிறார்.  ‘நடிகையர் திலகம்’ கீர்த்தி சுரேஷை ஊறுகாய் மாதிரி பயன்படுத்தியிருப்பது கொடுமை. நெப்போலியன், சிம்ரன், லால் ஆகியோரும்  கொடுத்த வேடங்களை கச்சித்தமாகச் செய்திருக்கிறார்கள். பெருந்தன்மை உள்ளவர்கள் மட்டுமே சிம்ரனின் உடல்மொழியையும்  குரல்மொழியையும் ரசிக்க முடியும்.  இமானின் இசையில் யுகபாரதியின் வரிகளில் ‘வரும் ஆனா  வராது’ பாடல் உள்பட அனைத்து  பாடல்களும் சிறப்பு. பின்னணி இசையும் பிரமாதம். பாலசுப்பிரமணியெத்தின் ஒளிப்பதிவு படத்தை கலர்ஃபுல்லாகக் காட்டியிருக்கிறது.  கலை இயக்குநர் முத்துராஜுக்கு கொலக்குத்து. புகுந்து விளையாடியிருக்கிறார்.

யோகிபாபுவை கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைக்கிற அளவுக்கு படத்தில் நிறைய நடிகர்கள். ஒவ்வொரு காட்சியிலும் பெருங் கூட்டம்  என பிரம்மாண்டமான செலவில் தயாரித்திருக்கிறார்கள். காற்றாலையை ஒரு பீடித்துண்டில் எரியவிடுவதில் நிலமிழந்த விவசாயிகளின்  கோபம் தெரிகிறது. நாற்பது வயசாகியும் இன்னும் கல்யாணம் ஆகல, ஏன்னா விவசாயிக்கு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறாங்க  என்று கலங்கி அழும் விவசாயியை வைத்து விவசாயிகளின் இன்றைய நிலையை விளக்கியிருப்பது இயக்குநரின் சமூக அக்கறையை  வெளிப்படுத்துகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நான் அரைச்ச மாவையே அரைக்கிறேன் என்று  ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டால் மக்கள் மன்னிப்பார்கள் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம். அரைத்த மாவு ஓக்கே.  ஆனால் புளித்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கலாமா?