மச்சத்தை காட்டு காட்டுன்னு காட்டப் போறாங்க!



ஜிலுஜிலு ஸ்டில்களால் கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படம். ஹீரோ விமலுக்கு மச்சம் இருப்பதால்தான் எப்போதும் கைநிறைய படங்களை வைத்திருக்கிறார் என்பது நமக்கும் தெரியும். இருந்தாலும் ‘அவருக்கு எங்கே மச்சம்?’ என்கிற கேள்வியோடு படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முகேஷைச் சந்தித்தோம்.

“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?”
“மறந்துட்டீங்களா தலைவா? 15 வருஷத்துக்கு முன்னாடி ‘இன்று முதல்’ படத்தோட பிரஸ்        மீட்டில் பார்த்தோம். அப்போ முருகேஷா இருந்த நான், இப்போ முகேஷா ரீ-என்ட்ரி ஆகியிருக்கேன்.”

“ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?”

“என்னோட ரெண்டாவது படமா ‘ஆயுதம்’ வந்தது. பிரசாந்த் - சிநேகா நடிச்சி நல்ல பட்ஜெட்டுலே வந்த படம். ரசிகர்களும் வரவேற்றாங்க. இருந்தாலும் எனக்கு அடுத்தடுத்து இங்கே சரியா பிராஜக்ட் அமையலை. அதுக்கு அப்புறம் கன்னடத்துக்கு போய் படம் பண்ணினேன். என்ன இருந்தாலும் தமிழில் பண்ற திருப்தி வராதுன்னு மறுபடியும் இங்கே வந்திருக்கேன்.”

“ஹீரோயினோட ‘மச்சம்’னா கூட ரசிகர்கள் கொஞ்சம் குஷி ஆயிடுவாங்க. நீங்க ஹீரோவோட மச்சத்தை துணிச்சலாகக் காட்ட முடிவெடுத்தது எப்படி?”

“பொதுவா பேச்சுவழக்குலே ஒருத்தன் பெருசா சாதிச்சிட்டான்னா, ‘இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்குடா’ன்னு சுத்தி இருக்கிறவங்க பொருமுறதைப் பார்த்திருக்கோம். இதை பாராட்டாகவும் கூட எடுத்துக்கலாம். இல்லைன்னா நம்ம கூடவே சுத்திக்கிட்டிருந்த செவ்வாழை எங்கேயோ போயிட்டானேங்கிற வயித்தெரிச்சலாவும் எடுத்துக்கலாம்.

ஆனா, இந்தப் படத்தைப் பொறுத்தவரை இந்த மச்ச சமாச்சாரத்தை நான் பாசிட்டிவ்வாகத்தான் பார்க்குறேன். அப்புறம், ஹீரோயினோட மச்சம்னு ஏதோ கேட்டீங்க. ஸ்டில்ஸை பாருங்க. ரசிகர்கள் திருப்தியடைகிற அளவுக்கு நம்ம படத்துலே வாலிபத்தனமான விஷயங்கள் நிறைய இருக்கு. படமே சும்மா கலகலகலன்னு தியேட்டருலே களை கட்டும்.”

“ஹீரோ விமலுக்கு மச்சம் எப்படி ஒர்க்கவுட் ஆகுது?”

“நம்ம விமல் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் இளைஞர். அவரை மடக்கிப்போட ஏகப்பட்ட பெண்கள் வலை வீசுறாங்க. நீங்க வேற என்னவோன்னு நெனைச்சுக்கப் போறீங்க. லவ் பண்ணுறதுக்குத்தான்.

காதலே கிட்டாத பிரம்மச்சாரிகள் சிலர் இதைப் பார்த்து கடுப்பு ஆவுறாங்க. விமலுக்கு ஏற்பட்ட டிமாண்டுக்கு அவங்க சொல்லுற காரணத்தைத்தான் டைட்டிலா வெச்சிருக்கேன். இது தவிர விமலுக்கு வேற வேற விஷயங்களில் கிடைக்கக்கூடிய வெற்றிகளைப் பார்த்து ரசிகர்களே, அவருக்கு மச்சமிருக்குன்னு சொல்லுற அளவுக்கு சம்பவங்கள் நடக்கும்.”
“இன்டரஸ்டிங்கா இருக்கே?”

“இன்னும் நிறைய இன்டரஸ்டிங்கான விஷயங்கள் நம்ம படத்துலே இருக்கு. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், நயன்தாரா மகள் மானஸ்வி கிட்ட செமையா டோஸ் வாங்குவாரே போலீஸ்காரர் வெற்றிவேல்ராஜா. அவர்தான் இந்தப் படத்துலே மருந்துக்கடை ஓனரா நடிக்கிறார். அவர்கிட்ட ஒர்க் பண்ற விமல், சிங்கம்புலி ரெண்டு பேரும், சம்பளம் அதிகமாக கிடைக்கலைன்னு வருத்தப்பட்டு, தொடர்ந்து அதிகமான வருமானத்துக்காக சின்னச் சின்ன பொருட்களைத் திருட ஆரம்பிக்கிறாங்க.

இந்த நேரத்தில், ஆனந்தராஜுக்குச் சொந்தமான விலைமதிப்பில்லாத ஒரு கடத்தல் பொருள் விமல், சிங்கம்புலி கோஷ்டி கிட்ட சிக்கி, ‘இவனுங்களுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ன்னு சொல்ல வைக்குது. ஆனா, அவங்க ரெண்டு பேரையும் ஆனந்தராஜ் குரூப் விரட்ட, அந்த வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரி மன்சூர் அலிகானும், சப்-இன்ஸ்பெக்டர் பூர்ணாவும் துரத்த ஆரம்பிக்கிறாங்க.

‘என்ன தைரியம் இருந்தா, என் கடையில் வெச்சே கொள்ளையடிப்பாங்க’ன்னு ஆவேசப்படும் வெற்றிவேல்ராஜா குரூப், இன்னொரு பக்கம் விமலையும், சிங்கம்புலியையும் துரத்திக்கிட்டு ஓடுறாங்க. இப்படி படம் முழுக்க ஒரே துரத்தல் மயம்தான். எல்லாரும் ஏதோ ஒரு விஷயத்துக்காக ஓடிக்கிட்டே இருப்பாங்க. இதை கிளாமர் பிளஸ் ஹியூமர் கலந்து சொல்லியிருக்கேன்.”

“கதையைக் கேட்டா ஹியூமரா இருக்கு... ஸ்டில்ஸைப் பார்த்தா கிளாமரா இருக்கு...”
“சமூகம் இப்ப இருக்கிற அழுத்தமான சூழ்நிலையில், தியேட்டருக்கு வரும் ஜனங்க, கலகலன்னு வாய்விட்டுச் சிரிக்க ஆசைப்படறாங்க. அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கேன். கிளாமர் + ஹியூமர், என்னிக்குமே ஹிட்டடிக்கிற ஃபார்முலாதான். எனக்கு இப்போ ஒரு ஹிட்டு ரொம்பவே அவசியம்.”

“ஆஷ்னா ஜாவேரி?”
“விமல் ஜோடியா ஆஷ்னா ஜாவேரி நடிக்கிறாங்க. ரொம்ப திறமையான நடிகை. சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தாங்க. எங்க படம் அந்த சரியான வாய்ப்பை அவங்களுக்கு உருவாக்கும். காட்டு காட்டுன்னு செம காட்டு காட்டுவாங்க. ஆனா, அவங்க கிளாமர் வரம்புமீறாம, ரொம்ப நாகரீகமா இருக்கும்.”

“பூர்ணாவைப் பத்தி சொல்லவே மாட்டேங்கறீங்க?”
“சஸ்பென்ஸ் கேரக்டர். இப்பவே சொன்னா பெப் போயிடும்.”
“மற்ற விஷயங்கள்?”

“சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் தயாரிக்கிறாங்க. கோபி ஜெகதீஸ்வரனின் கேமரா லண்டன், குற்றாலம், சென்னை ஏரியாக்களில் புகுந்து விளையாடியிருக்கு. நடராஜன் சங்கரன் மியூசிக்கில் விவேகா பாடல்கள் எழுதியிருக்கார். பிரபலமான பாடகர், பாடகிகள் பாடியிருக்காங்க. எல்லாமே கதைக்குப் பொருத்தமான பாட்டுகள்தான். ரீமிக்ஸ் சாங் வைக்கலை. ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க் நடந்துக்கிட்டிருக்கு. தீபாவளிக்குப் பிறகு படத்தை ரிலீஸ் பண்றோம்.”

- தேவராஜ்