நோட்டா



அரசியல்

ஒருநாள் முதல்வர் என்று சொல்லி ‘முதல்வன்’ படத்தில் அரசியலை விமர்சித்தார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தில் பதினைந்து நாள் முதல்வர் என்று சொல்லி சமகால அரசியலை சகட்டுமேனிக்கு விளாசியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த்சங்கர். முதலமைச்சராக இருக்கும் முன்னாள் நடிகர் நாசர் மீது ஊழல் வழக்கு நடக்கிறது. அதிகாரத்தை இழக்க விரும்பாத நாசர் பதவியைத் தக்க வைக்க ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் தன்னுடைய மகன் விஜய்தேவரகொண்டாவை முதலமைச்சராக்குகிறார்.

முதல்வர் ஆனபின்னும் பொறுப்பில்லாமல் இருக்கும் அவர் நாட்டில் நடக்கும் ஒரு நிகழ்வைப் பார்த்து மனம் மாறி பொறுப்பான முதல்வராக நடக்கிறார். இதற்கிடையே விஜய் பதவிக்கு சில சிக்கல்கள் வருகிறது. அதை எப்படி எதிர்கொள்கிறார், அதைச் செய்வது யார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள்.

டோலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ள விஜய்தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ்ப்படம். அதனால் தெலுங்கு டப்பிங் படம் என்கிற எண்ணம் வரலாமென்கிற கருத்து இருந்தது. அதை அசாத்தியமான நடிப்பு, வசன உச்சரிப்பால் பொய்யாக்கியிருக்கிறார்.
பணக்காரத் திமிர் கொண்ட இளைஞராக நடிப்பது எளிதாக இருக்கலாம். ஆனால் பொறுப்பான முதல்வர் பதவிக்கும் நாயகன் பொருத்தமாக இருக்கிறார் என்பது சிறப்பு.

அரசியல்வாதிகளால் நிரம்பி வழியும் திரைக்கதையில் நாயகி மெஹ்ரீனுக்கு அதிக வேலையில்லை.  சஞ்சனா நடராஜன் ஒரு கட்டத்தில் நாயகனுக்கு உறுதுணையாக இருப்பதால் கவனிக்க வைக்கிறார்.பத்திரிகையாளராக வரும் சத்யராஜ், அரசியல்வாதிகளாக நடித்திருக்கும் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பொறுப்பில்லாத அரசியலையும் அரசியல்வாதிகளையும் தங்களால் இயன்றவரை அம்பலப்படுத்துகிறார்கள்.
சாம்.சி.எஸ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையும் பொருத்தம்.

பரப்பரப்பான அக்ரஹார சிறை, அப்பல்லோ மருத்துவமனை, கூவத்தூர் விடுதி, முதல்வர் காலில் விழும் அமைச்சர்கள், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, தர்மபுரி பேருந்து எரிப்பு போன்ற நிகழ்வுகள் தமிழக அரசியலைச் சொன்னாலும் ஒரு சாமியாரை வைத்துக்கொண்டு அகில இந்திய அரசியலையும் போட்டுத்தாக்குகிறார் இயக்குநர். தற்கால ஆட்சியாளர்களை விமர்சித்திருக்கும் துணிச்சலுக்காகவே படத்தில் இருக்கும் குறைகளைத் தாண்டி படக்குழுவைப் பாராட்டலாம்.