ராதாமகள்!ரோஜாமலர்!!



மின்னுவதெல்லாம் பொன்தான்! 3

 சில சந்தர்ப்பங்களில் அதீத எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து விடும். அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் துளசி. எண்பதுகளில் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த ராதாவின் இரண்டாவது மகள்.
ராதா, ‘அலைகள் ஓய்வதில்லை’ மூலமாக கார்த்திக்கின் ஜோடியாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர். அவரது மகள் துளசி, அதே கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கின் ஜோடியாக அறிமுகமாகிறார் என்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு முத்திரை இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கம் வேறு.

அந்தப் படம் ‘கடல்’.படம் வெளிவருதற்கு முன்பு இருந்த எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் படம் வெளிவந்து முதல் காட்சி முடிந்ததுமே தவிடு பொடியானதுதான் சோகம். ராதா அளவிற்கு துளசி அழகில்லை என்பது கூட பிரச்சினை இல்லை. நான்கைந்து வெற்றிகள் கண்டுவிட்டால் அழகு தானாக வந்து சேர்ந்துவிடும். முதல் படத்தில் அவருக்கு அமைந்த கேரக்டர்தான் ரொம்ப கொடுமையானது. ஒரு பிரபல நடிகையின் மகள் ஒரு படத்தில் அறிமுகமாகும்போது அந்தப் படம் கொண்டாட்டமாக இருக்கவேண்டும் என்று ரசிகன் எதிர்பார்ப்பது சராசரியான விஷயம்.

ஆனால்-மணிரத்னம் கொடுத்தது நாடகத்தனமான ஒரு கிறிஸ்தவப் படம். அதுவும் துளசி மனநலம் பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண். என்றாலும் கவுதமுடனான பாடல், லிப்லாக் முத்தம் என்று துளசி ஓரளவுக்கு காப்பாற்றப்பட்டார்.

ராதா, தன் வாழ்நாளில் தமிழில் டப்பிங் பேசியதில்லை. இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான் சொந்தக் குரலில் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் துளசியை சொந்தக் குரலில் பேச முயற்சித்து, அவரது குரல் திரையில் எடுபடவில்லை என்பது அடுத்த சோகம்.

முதல் படம் தோற்றாலும் அடுத்த படத்தில் எழுந்து விடலாம்  என்று உறுதியாக நம்பினார்கள் ராதாவும், துளசியும். அடுத்து, அவர் நடித்த ‘யான்’, நீண்டகாலம் தயாரிப்பில் இருந்து பல பிரச்சினைகளைச் சந்தித்து வெளிவருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

வெளிவந்த பிறகு அது ஒரு ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காப்பி என்கிற தகவல்கள் பரவி, படத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. படத்திலும்கூட துளசிக்கு ஜீவாவுடன் ஓடிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து பெரிய வேலை இல்லை.

பெரிய நடிகையின் வாரிசு. இரண்டு பெரிய படங்கள் இருந்தும் துளசி தோல்விக்குக் காரணம் என்ன?

முதல் மகள் கார்த்திகாவால் ஜெயிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில், 15 வயதிலேயே இளைய மகளை அவசர அவசரமாக சினிமாவுக்குக் கொண்டு வந்தார் ராதா. அடுத்து, மக்களைக் கவர்ந்திழுக்கும் கேரக்டரைக் கொடுக்காத மணிரத்னம்.

அதையடுத்து துளசி தேர்ந்தெடுத்த ஹீரோயினுக்கு முக்கியத்துவமில்லாத படம். இப்படியான காரணங்களால் துளசியின் கேரியர் ஆரம்பத்திலேயே அடிபட்டுப் போனது.

துளசி அழகானவர்தான். ‘கடல்’ படத்தில் நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். ‘யான்’ படத்தில் மாடர்ன் கேர்ளாக வித்தியாசம் காட்டியிருந்தார். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலை அவருக்கு சாதகமாக அமையவில்லை. இப்போது அவர் சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறார். நாளையே அவர் இன்னும் அழகாக இன்னுமொரு நல்ல படத்தின் மூலமாக திரும்பி வரலாம். சினிமாவில் எதுவும் நடக்கும்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்