ரெஸ்ட் எடுக்கப் போறேன்! கீர்த்தி சுரேஷ் ‘ஷாக்’ கொடுக்கிறார்!!



தமிழ்த் திரையுலகில் அம்மா மேனகா எட்ட முடியாத இடத்தையும், புகழையும் வெறும் மூன்று ஆண்டுகளிலேயே பெற்றுவிட்டார் கீர்த்தி சுரேஷ். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இப்போது கீர்த்தியின் கீர்த்தியைத்தான் வாய் ஓயாமல் பாடிக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும். பெரிய நடிகர்கள், தங்களுக்கு கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், “கீர்த்தியோட கால்ஷீட் இருக்கான்னு பாருங்க” என்கிறார்கள்.

முன்னணி இயக்குநர்கள், கீர்த்திக்கு கதை சொல்ல அலைமோதுகிறார்கள். தயாரிப்பாளர்களோ, கீர்த்தி கேட்கும் சம்பளத்தை பேரம் பேசாமல் எடுத்து வைக்க தயாராக இருக்கிறார்கள். கமர்ஷியலாகவும், கலைரீதியாகவும் எடுபடும் நடிகைகள் மிகவும் அரிது. அரிதிலும் அரிதானவர் கீர்த்தி சுரேஷ்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளி ரிலீஸான ‘சர்கார்’, தமிழில் இவருக்கு பன்னிரண்டாவது படம்தான். இந்த பன்னிரண்டு படங்களுக்குள்ளாகவே விஜய் (2 படங்கள்), சூர்யா, விஷால், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் (3 படங்கள்), விக்ரம் பிரபு என்று தமிழின் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டுவிட்டார். நன்கு தமிழ் பேசுகிறார் என்றாலும், மலையாளத்தனமான மழலை இன்னமும் அவரிடம் மிச்சமிருக்கிறது.

“சினிமாப் பயணம் எப்படி இருக்கு?”

“நான் தமிழுக்கும், தெலுங்குக்கும் வந்துதான் மூணு வருஷம் ஆகுது. அதுக்கு ரெண்டு வருஷம் முன்னாடியே மலையாளத்தில் ஹீரோயினா ஆயிட்டேன். இன்னும் சொல்லப் போனா நான் கேமராவுக்கு முன்னாடி நிக்க ஆரம்பிச்சு பதினெட்டு வருஷம் ஆகுது.

எட்டு வயசுலே குழந்தை நட்சத்திரமா அப்பா தயாரிச்ச படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். இன்னும் சொல்லப்போனா மீராஜாஸ்மினும் நானும் அப்பாவோட விளம்பரப் படம் ஒண்ணு மூலமாகத்தான் அறிமுகமானோம். அந்த விளம்பரம்தான் மீரா, பெரிய ஹீரோயினா உருவெடுக்கக் காரணம்.

ஹீரோயினா நான் அறிமுகமானதில் இருந்து இந்த அஞ்சு வருஷமா நிக்க நேரமில்லாமே ஓடிக்கிட்டேதான் இருக்கேன். அதிலும் நான் அறிமுகமான ‘கீதாஞ்சலி’ ரொம்பவே ஸ்பெஷல். ஹீரோயினா நடிச்ச முதல் படமே டபுள் ரோல் யாருக்கு கிடைக்கும்? பிரியதர்ஷன் இயக்கம், மோகன்லால் லீட் ரோல்னு என்னோட என்ட்ரியே செமத்தியா அமைஞ்சது.

தமிழில் விக்ரம் பிரபுவோட ‘இது என்ன மாயம்?’ படத்தின் மூலமா ரொம்பவே எதிர்பார்ப்போட வந்தேன். அந்தப் படம் வணிகரீதியாக சரியா போகலைன்னதும் அப்செட் ஆயிட்டேன். ஆனா, அடுத்தடுத்து தெலுங்கு ‘நேனு சைலஜா’, தமிழில் ‘ரஜினி முருகன்’னு பெரிய ஹிட் படங்கள். தனுஷோடு நடிச்ச ‘தொடரி’ எனக்கு பர்சனலா பிடிச்ச படம். அதுவும் சரியா போகலைன்னு வருத்தப்பட்டேன். ஆனா, ‘தொடரி’யில் நான் பண்ணின பெர்ஃபார்மன்ஸ்தான் ‘நடிகையர் திலகம்’ வாய்ப்பை எனக்குக் கொடுத்தது.

தமிழ், தெலுங்கு ரெண்டுலேயும் இதுதான் என்னை முன்னணிக்குக் கொண்டு வந்த படம். ‘ரெமோ’, ‘பைரவா’, ‘பாம்பு சட்டை’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற படங்கள் என்னை கமர்ஷியல் ஹீரோயினாவும் நிலைநிறுத்துச்சி. கடந்த 5 வருடங்களில் 20 படம் பண்ணியிருக்கேன்னு நெனைச்சா எனக்கே ஆச்சரியமாதான் இருக்கு.”

“நீங்க ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்திரியா வாழ்ந்திருந்தீங்க. பெரிய விருதுகளுக்கு தகுதியான நடிப்பு அது. அப்படியிருந்தும் இனிமே பயோபிக் படங்களில் நடிக்க மாட்டேன்னு ஏன் சொன்னீங்க?”

“உண்மைதான். ‘நடிகையர் திலகம்’ மாதிரி வாய்ப்பெல்லாம் ஓர் இளம் நடிகைக்கு கிடைப்பது அபூர்வம். எனக்குக் கிடைச்சது. சரியாதான் பயன்படுத்திக்கிட்டேன். ஆனா, ஒரு பிரச்சினை. ஒருநாள் ஏர்போர்ட்டில் ஃபிளைட்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.

அப்போ ஒரு பாட்டி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து என்னையே உற்றுப் பார்த்தாங்க. என்னோட கன்னத்தைப் பிடிச்சி, ‘நீ சாவித்திரி தானேம்மா?’ன்னு கேட்டாங்க. ‘நான் சாவித்திரி இல்லை பாட்டி, அவங்க வேஷத்துலே நடிச்ச கீர்த்தி’ன்னு சொன்னேன்.

‘எனக்கு என்னவோ உன்னை சாவித்திரியாதான் பார்க்க முடியுது. நீ கீர்த்தி இல்லை’ன்னு சொன்னாங்க. அப்படியே ஜிவ்வுன்னு ஆயிட்டேன். எனக்குக் கிடைச்சிருக்கிற இந்த சாவித்திரி அடையாளத்தை எந்தக் காரணம் கொண்டும் விட்டுடக் கூடாதுன்னு தோணிச்சி.

வேற ஒரு பயோபிக் இவ்வளவு பர்ஃபெக்ட்டா பண்ணுவேனான்னு தெரியலை. இது ஒரு மேஜிக். திரும்பத் திரும்ப இதையே கிரியேட் பண்ண முடியாது. இந்த மேஜிக், கடைசிவரைக்கும் மக்கள் மத்தியிலே எனக்கு கன்டினியூ ஆகணும்னு விரும்புறேன்.”

“நீங்க தமிழில் அருமையா கவிதையெல்லாம் எழுதுவீங்கன்னு சொல்லுறாங்களே?”

“உங்களுக்கும் சொல்லிட்டாங்களா? என்னோட தாய்மொழி தமிழ்தானே? கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மொழியின் தொடர்ச்சிதானே நீங்களும், நானும். தமிழ் குறித்து எல்லாருக்கும் இருக்கிற பெருமிதம் எனக்கும் உண்டு.

மொழியோட விளையாடுறதுதான் கவிதை. சின்ன வயசுலே இருந்தே சின்னச் சின்னதா கவிதை எழுதுகிற வழக்கம் எனக்கு உண்டு. என்னை நான் கவிஞர்னு சொல்லிக்கத்தான் பிரதானமா விரும்புறேன். அடுத்துதான் நடிகை என்கிற அடையாளம்கூட.

இப்போகூட தொடர்ந்து கவிதை எழுதறேன். சில கவிதை நல்லா வரும். சிலது கொஞ்சம் சொதப்பிடும். அதுமாதிரி சரியா வராததை எல்லாம் கிழிச்சிப் போட்டுருவேன். நல்ல கவிதைகளைப் பத்திரப்படுத்துவேன்.

‘சண்டக்கோழி-2’ நடிக்கிறப்போ என்னோட கவிதை ஆர்வத்தை இயக்குநர் லிங்குசாமி சார் கவனிச்சார். அவரும் கவிஞர்தானே? ‘உன் கவிதையெல்லாம் கொடும்மா, நான் புக்கா போடறேன்’னு சொல்லியிருக்காரு. தமிழில் இப்போ வருகிற நிறைய கவிதைத் தொகுப்புகளை வாசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

என்னோட கவிதைகளை வாசிக்க கேரள ரசிகர்கள் சிலரும் ஆர்வத்தோட கேட்டாங்க. அவங்களுக்காக மலையாளத்துலே மொழி மாற்ற முயற்சித்தேன். அது சரியா வரலை.”“நீங்க எழுதின ஒரு கவிதையை, ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்காக சொல்லுங்களேன்...”

“பூமாலை யோசிக்கிறது
எங்கே செல்வது?
உயிர் மூச்சின்
வெப்பத்திலிருக்கும்
தேகத்திடமா?
உணர்வின்றி
சில்லிட்டிருக்கும்
உடலிடமா?
எங்கே சென்றாலும்
பூமாலை
தன் மணத்தை
மட்டும் இழக்காது”

“ரொம்பப் பிரமாதமா இருக்கு. உங்க குடும்பமே கலைக்குடும்பம்தான். குடும்பப் படம் ஒண்ணு எடுப்பீங்களா?”

“எங்களுக்கு அந்த யோசனை இருக்கு. என்னோட அக்கா ரேவதி சுரேஷ் நிறைய ஸ்க்ரிப்ட் எழுதி வெச்சிருக்கா. டைரக்டர் ஆகணும் என்பதுதான் அவளோட லட்சியம். அப்பா தயாரிப்பில், அக்கா இயக்க நான், அம்மா, பாட்டி நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. எங்க குடும்பத்துக்கும் அப்படியொரு திட்டமிருக்கு. சீக்கிரமா நடக்கும்னு நெனைக்கிறேன். பார்ப்போம்.”

“இப்போ ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கிறீங்களாமே?”

“அதுலே நான் ஹீரோயின் இல்லை. ‘குஞ்சாலி மராக்கர்’ என்கிற படம். என்னை ஹீரோயினா அறிமுகப்படுத்தின பிரியர்தர்ஷன் சார் இயக்கம். ஒரு முக்கியமான கேரக்டர். சீன இளைஞர் ஒருத்தருக்கு ஜோடியா நடிக்கிறேன். கேரளாவுக்கு பெருமை சேர்க்கப் போகிற மிகப்பெரிய வரலாற்றுப் படத்தில் என்னோட பங்கும் கொஞ்சமாவது இருக்கணும்னு இதுலே நடிக்கிறேன்.”

“கீர்த்தியோட கீர்த்தியெல்லாம் ஓக்கே. ஆனா, ஏகத்துக்கும் சம்பளத்தை ஏத்திட்டதா பேச்சு இருக்கே?”

“யார் இப்படி கிளப்பி விட்டதுன்னு தெரியலை. என்னை வெச்சி படமெடுக்கிற எந்தத் தயாரிப்பாளராவது அப்படி சொல்லுறாங்களா? என்னோட தகுதிக்கும், உழைப்புக்கும் எது நியாயமான சம்பளமோ, அதைத்தான் வாங்குறேன்.”

“சமீபத்தில் மனதைப் பாதித்த நிகழ்வு...?”

“சன் தொலைக்காட்சியில் விஷால் பங்கேற்கும் ‘நாம் ஒருவர்’ நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் பல வருடங்களாக கொத்தடிமையா அவலமான வாழ்க்கை வாழும் மக்களை சந்திச்சேன்.

வெறும் அஞ்சாயிரம், பத்தாயிரத்துக்கு அடிமைகளா விலை போன அவங்களை சந்திச்சப்போ அழுதுட்டேன். குறிப்பா அவங்களில் பெண்கள் படுகிற கஷ்டமெல்லாம் கற்பனையிலும் நாம நினைச்சுப் பார்க்க முடியாதது. இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும் என்கிற எண்ணம் எனக்கு வந்திருக்கு. செய்வேன்.”

“நெக்ஸ்ட்?”

“அஞ்சு வருஷமா ஓடிக்கிட்டே இருக்குறதாலே கொஞ்சம் டயர்ட் ஆகியிருக்கேன். கொஞ்ச நாள் நிம்மதியா ரெஸ்ட் எடுக்கணும். அதனாலேதான் சன் பிக்சர்ஸோட ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு பெருசா எதுவும் கமிட் பண்ணிக்கலை. இதுவரைக்கும் ஒரு இருபது கதைகளைக் கேட்டு ஃபைனலைஸ் பண்ணி வெச்சிருக்கேன்.

அதுலே இருந்து செலக்ட் பண்ணி நடிக்கணும். அதுவரைக்கும் வீட்டுலே தோட்டவேலைகளில் ஈடுபடணும். கிச்சனுக்குள்ளே புகுந்து நல்லா சமைக்கக் கத்துக்கணும். வயலின் பிராக்டிஸை பாதியிலேயே விட்டுட்டேன். அதை மறுபடியும் தொடங்கணும். சின்ன இடைவெளிக்குப் பிறகு முன்னைவிட மெச்சூரிட்டியா, ஃப்ரெஷ்ஷா திரும்பி வருவேன்.”

மீரான்