“அரசியலுக்கு எப்போ வருவேன்?”



 25 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி சொன்ன ஆரூடம்!

ரஜினியின் அரசியல் கட்சி வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்கும் காலம் இது. ‘சிஸ்டம் சரியில்லை’ என்று அவர் கூறியதிலிருந்து அரசியல் அரங்கம் பரபரப்பாகி இருக்கிறது. இந்தக் கருத்தை இப்போது அவர் புதுசாக சொல்லிவிடவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே சொல்லியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் இருந்து சில பகுதிகள்...“எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை. காரணம், யார் இங்கே முதல்வரா வந்து உட்கார்ந்தாலும் எதுவும் பண்ண முடியாது. நல்லது நடக்காது. நடக்க விடமாட்டாங்க. இந்த நிலைமையிலே புரட்சி வர்றதுதான் ஒரே வழி. மகாத்மா காந்தி மாதிரி நல்ல ஒரு தலைவர் இந்த தேசத்துக்கு வேணும். அப்போதான் எல்லாம் மாறும்.

இப்போதைய அரசியல் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கு. மருந்து, மாத்திரை கொண்டெல்லாம் சரிபண்ண முடியாது. அறுவை சிகிச்சைதான் செய்யணும். இந்திய அரசியல் அமைப்பு மொத்தமா மாறணும். அப்படி மாறினாதான் மாநில அளவில் ஏதாவது செய்ய முடியும்.

படிச்சவங்க வந்தாலும் இப்போதைய அரசியலை மாத்த முடியாது. ரொம்ப கெடுத்து வெச்சிருக்காங்க. இங்கே அரசியல்வாதிகள் மட்டுமில்லை. அரசு அதிகாரிகளின் போக்கையும் மாத்த வேண்டியிருக்கு. எல்லாத்துக்கும் ஏத்தமாதிரி அரசியல் சட்டங்களை மாத்துறதுதான் ஒரேவழி. அதனாலேதான் டோட்டல் சிஸ்டமே மாறணும்னு நான் சொல்லுறேன்.

நமக்கு ஒரு சர்வாதிகாரி வேணும். அவர் நல்லவரா, மக்களுக்கு பாடுபடக்கூடியவரா இருக்கிறது முக்கியம். மாநில அரசுகளுக்கு அதிகாரம் ரொம்ப கம்மி. இங்கே இருக்கிறவங்க நல்லது செய்ய நினைச்சாலும் முடியாது. டிசிப்ளின் வேணும்னா ஒரே வழி எமர்ஜென்ஸி. நாடு மொத்தமும் எமர்ஜென்ஸி கொண்டு வரணும்.

இந்த நிலைமை வரணும்னா மத்தியிலே முழுமையான மெஜாரிட்டி பலத்தோடு அந்த நல்ல டிக்டேட்டர் உட்காரணும்.அப்படியொரு நல்ல தலைவரிடம் இந்த நாட்டோட அதிகாரம் போனா, நான்தான் அவருக்கு முதல் ஆளா ஆதரவு தருவேன். அப்போ யாரும் கூப்பிடாமலே, தாராளமா அரசியலுக்கும் வருவேன்.”

- கேகே