டைட்டில்ஸ் டாக்-94



ராட்சசன் இயக்குநர் ராம்குமார்

ராட்சசன் என்பவன் தீயவன், கொடூரமானவன்  என்பதைவிட அதீத சக்தி படைத்தவன், உழைப்பால் உயர்ந்தவன், ஜெயன்ட் என்கிற பதத்தில் புரிந்துகொள்ள வேண்டும். நான் இயக்கிய ‘ராட்சசன்’ படத்தில் ஹீரோைவவிட  வில்லனுக்கு குறைவான காட்சிகள் என்றாலும் ஹீரோவை டாமினேட் பண்ணுபவனாக இருப்பான். அந்த அர்த்தத்தில்தான் ‘ராட்சசன்’ என்ற டைட்டிலை தேர்வு செய்தேன்.

என்னுடைய வாழ்க்கையில் நான் வியந்து பார்த்த ராட்சசன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு சொந்த ஊர் திருப்பூர். சின்ன வயதில் என்னை அதிகமாக பாதித்த ராட்சசன் என் உடன் பிறந்த அண்ணன் குமார். நாங்கள் அவ்வளவு வசதியான குடும்பம் இல்லை. அப்பாவுக்கு டிரைவர் வேலை. அந்த வருமானத்தில்தான் குடும்ப வண்டி ஓடியது.

அந்தக் காலகட்டத்தில் படிக்கும்போதே என்னுடைய அண்ணன் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் சொந்தக் காலில் நிக்கணும்னு சுயதொழில் பண்ணுவதற்கு முயற்சித்தார். இது திருப்பூர் மண்ணுக்குரிய குணம் என்றும் சொல்லலாம். பொதுவாக மதுரையை தூங்கா நகரம் என்று அழைப்பதுண்டு. அதற்கு கொஞ்சமும் குறையாத சுறுசுறுப்பான நகரம் திருப்பூர்.

காலையில் ஆரம்பித்து அடுத்தநாள் காலை வரை இயங்கும்  பனியன் தொழில் கூடங்கள், தொழிலாளர்கள் அங்கு உண்டு. அந்த வகையில் என்னுடைய அண்ணனுக்கு சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை.
ஆரம்பத்தில் காளான் வளர்ப்பு, பேக்கிங் உணவு வகைகள் என்று சிறியளவில் தொழில் பண்ண ஆரம்பித்தார். ஆனால் எதிர்பார்த்தளவுக்கு அந்தத் தொழிலில் அவருக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை. தொழிலில் நஷ்டம் எற்பட்டாலும் தளராமல் முயற்சித்தார்.

ஒரு கட்டத்தில் தன் சேமிப்பை மூலதனமாக்கி பிரிண்டிங் பிரஸ் ஆரம்பித்தார். தனி மனிதராக அண்ணனால் ஆரம்பிக்கப்பட்ட அந்தத் தொழில் இன்று ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடம், நாற்பது, ஐம்பது தொழிலாளர்கள் என்று லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

நான் சினிமா முயற்சியில் இருந்தபோது என்னுடைய அண்ணன்தான் எனக்கு ஏடிஎம். நான் பணத்துக்கு அல்லாடும் போது பல சமயங்களில் அவர்தான் தோள் கொடுத்தார். அந்த வகையில் ஜீரோவில் ஆரம்பித்து ஹீரோவாக உயர்ந்து நிற்கும் குமார் அண்ணன்தான் இளம் வயதில் எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ராட்சசன்.

இன்று நான் ஒரு படைப்பாளியாக மாறியிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணமாக நான்கு மாமனிதர்களைச் சொல்வேன். படிக்கும் காலத்தில் எனக்கு ஓவியம், கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்வது மிகவும் பிடிக்கும். ஒரு முறை ஓவியப் போட்டியில் ஜெயித்தபோது பாரதியின் கவிதைத் தொகுப்பு, காந்தியின் சுயசரிதை புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.

அந்தப் புத்தகங்களை வாசித்த பிறகு அவ்விருவர் மீது எனக்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. இப்போது என்னுடைய ஃபேஸ்புக் புரோபைல் பிக்சராக பாரதி புகைப்படத்தைத்தான் வைத்திருக்கிறேன் என்றால் பாரதி எனக்குள் ஏற்படுத்தி யிருக்கும் தாக்கத்தை புரிந்து கொள்ளலாம். இவர்கள் இளம் வயதிலேயே சமூகத்துக்கான மாற்றங்களை தீர்க்கமாக கணித்தவர்கள்.

இந்தப் பட்டியலில் காமராஜர், சார்லி சாப்ளின், மைக்கேல் ஜாக்சன் ஆகியோருக்கும் இடமுண்டு. ஏனெனில், இந்த மாமனிதர்கள் அவரவர் துறையில் அசாதாரணமான உயரத்தைத் தொட்டவர்கள். இந்த ஆளுமைகள் எல்லோரும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர்கள். தங்கள் கடின உழைப்பால் மாற்றத்தை ஏற்படுத்திய ராட்சசனாக மாறியவர்கள்.  

மைக்கேல் ஜாக்சன் வெற்றி எவ்வளவு பெரியதோ அதுபோல் அவர் இளமையில் அனுபவித்த வலியும் அதிகம். சார்லி சாப்ளின் தன்னுடைய வாழ்க்கையில் பல துயரங்களைக் கடந்துதான் உச்சத்தைத் தொட்டார். ஒரு கட்டத்தில் சார்லி சாப்ளினை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுகிறார்கள்.

பிறகு ஆஸ்கர் வாழ்நாள்  சாதனையாளர் விருதுக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார். அந்த சமயத்தில் அவர் பணிபுரிந்த, ஜெயிக்க காரணமாக இருந்த ஸ்டூடியோ, வசிப்பிடம் போன்ற இடங்களை பார்வையிட்ட சம்பவங்களை உணர்வுபூர்வமாக விவரித்திருப்பார். அதை வாசிக்கும் போது என்னையும் அறியாமல் கலங்கினேன்.  

அந்தத் தருணத்தில் அவர் வேதனையின் உச்சத்தில் இருந்ததை புரிந்துகொள்ள முடிந்தது. கெளவரமாக வாழ்ந்த இடத்திலிருந்து விரட்டப்பட்ட நிலையில் மீண்டும் போய் பார்ப்பது எவ்வளவு கண்ணீர் வரவழைக்கும் சோகம் என்று அது போன்ற அனுபவத்தைக் கடந்துவந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு வாசகனாக நானே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தேன் என்றால் சார்லி சாப்ளின் பார்வையில் அந்த வலி எப்படி இருந்திருக்கும் என்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

சார்லி சாப்ளின் இயக்கி நடித்த ‘தி கிட்’, ‘லைம்லைட்’, ‘தி சர்க்கஸ்’ போன்ற படங்களில் அவருடைய ராட்சச உழைப்பு தெரியும். 100 வருடத்துக்குத் தேவையான டெக்னாலஜியாக இருக்கட்டும், சமூக மாற்றத்துக்கான கருத்தாக இருக்கட்டும் அதை  அப்போதே தன் படங்களில் சொல்லிவிட்டார்.

அவருடைய படங்களில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் பிரச்சினை, பாட்டாளி வர்க்கத்தினருக்கான உரிமைகளை மிக அற்புதமாக நகைச்சுவை எனும் மருந்து கலந்து  சொல்லியிருப்பார். சார்லி சாப்ளின் போன்ற கலைஞனின் இடத்தை நிரப்புவதற்கு இன்னொருத்தர் வருவதற்கு வாய்ப்பே இல்லை. சார்லி சாப்ளினை யார் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் அவர் போல் மாறமுடியாது.

படிப்பு முடிந்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சினிமாத் துறையில் ட்ரை பண்ணலாம் என்று முடிவு செய்தேன். நான் யாரிடமும் உதவியாளராக வேலை பார்த்ததில்லை.அந்த சமயங்களில் மணிரத்னம் தன்னுடைய ‘நாயகன்’, ‘தளபதி’ போன்ற படங்கள் மூலம் எனக்குள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

யாரிடமும் உதவியாளராக வேலை பார்க்காத மணி சார் இப்போதும் டிரெண்ட் செட்டராக இருக்கிறார். பாலாஜி சக்திவேல் சாரின் ‘காதல்’, ‘கல்லூரி’ போன்ற படங்களும் என்னை வியக்க வைத்தது. இந்தப் படங்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான் நான் சினிமாவுக்கு வருவதற்கு காரணமாக இருந்தது. தற்போது இரண்டு வெற்றிப் படங்கள் கொடுத்திருந்தாலும் நான் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம். அதற்கு ராட்சச உழைப்பு தேவைப்படுகிறது.

‘ராட்சசன்’ படத்தில் விஷ்ணு விஷால், ஜிப்ரான் போன்ற கலைஞர்கள் 100 சதவீத உழைப்பு கொடுத்தார்கள். எல்லோரும்  அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை பார்த்தார்கள். கதை மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்ததால் அவர்களின் தி பெஸ்ட் கொடுத்தார்கள்.
நடிகர் ராம்தாஸ் நடிப்பு ராட்சசன். எந்த வேலை கொடுத்தாலும் சின்சியராக வேலை பார்ப்பார். ‘முண்டாசுப்பட்டி’யில் இருந்து அவருடைய கடின உழைப்பை பார்க்கிறேன்.

வலி கொடுக்கும் வேதனையின் அளவுதான் நம்முடைய வெற்றியை தீர்மானிக்கும். செய்யும் தொழிலே தெய்வம் என்பது பழமொழி. எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையை மனப்பூர்வமாகச் செய்யவேண்டும்.அந்த எண்ணத்தில்தான் நான் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தேன்.

வேலைக்குத் தகுந்த உழைப்பு, அர்ப்பணிப்பு இருந்ததால்தான் எனக்கு வெற்றி கிடைத்தது. வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மமதையோ, அதீத நம்பிக்கையோ இருந்தால் சறுக்கல் நிச்சயம். இது எனக்குமட்டுமில்ல, எல்லாருக்கும் பொருந்தும்.

எந்தத் தொழிலாக இருந்தாலும் அந்தத் தொழிலுக்கு பயனுள்ள வகையில் புதுசா கற்றுக் கொள்வது அவசியம். மற்ற துறைகளைவிட சினிமா உலகில் போட்டி அதிகம். ஆடியன்ஸ் புதுசா சொல்லணும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கு இயக்குநர் எல்லா விதத்திலும் அப்டேட்டாக இருக்க வேண்டும். நம்மை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் ரேஸிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை வரும். இங்கு ராட்சச உழைப்பு இருந்தால்தான் சிகரம் தொட முடியும்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)