ரேவதி எனக்கு நல்ல நண்பர்! சுரேஷ்மேனன் சொல்கிறார்



நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று பன்முகம் கொண்டவர் சுரேஷ் சந்திரமேனன். சமூக சேவையில் அதிக நாட்டமுள்ள இவர் சமீபத்தில் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார். அதனைப் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அறிமுக விழா முடிந்து வெளியே வந்த சுரேஷ் சந்திர மேனனிடம் பேசினோம்.

‘‘என்னை ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, நடிகராக பார்த்திருப்பீர்கள். 40 வருடமாக இந்தத் துறையிலிருந்து வருகிறேன். ‘16 வயசு’ என்ற தெலுங்குப் படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக என் கேரியரை ஆரம்பித்தேன். ஸ்ரீதேவி நடித்த படம் அது. தொடர்ந்து ‘வாழ்வே மாயம்’, ‘தீ’, ‘மருமகள்’, ‘விடுதலை’, ‘பிரேம பாசம்’ என்று ஏராளமான படங்களில் வேலை பார்த்துள்ளேன்.‘புதிய முகம்’ படத்தை இயக்கி நடித்தேன். ஏ.ஆர்.ரஹ்மானின் இரண்டாவது படம் அது.

டிவி சீரியல்கள், பல்வேறு டாகுமென்டரிகள், ரேவதி இயக்கத்தில் ‘மித்ரு மை ஃப்ரெண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தயாரித்துள்ளேன். தயாரிப்பாளர் உள்பட மூன்று தேசிய விருதுகளை அந்தப் படம் பெற்றது. அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் விருது வழங்கினார்.நீண்ட நாட்களாக நடிப்புக்கு ஓய்வு கொடுத்தேன். சமீபத்திய தமிழ் படங்கள் என் மெளனத்தைக் கலைத்தன. இளைஞர்கள் மிகப் பிரமாதமாக வர்றாங்க.

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘சோலோ’வில் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமானது. தமிழில் சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஜய் சேதுபதியுடன் ‘ஜூங்கா’ போன்ற படங்கள் பண்ணினேன். நடிப்பதைத் தாண்டி பல்வேறு சமூக சேவையில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆர்வத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

கன்டெய்னர் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு கழிப்பிடம் கட்டிக் கொடுத்திருக்கிறேன். சென்னை காவல்துறைக்கு பல ட்ராஃபிக் கண்ட்ரோல் ஐடியாக்கள் செய்து கொடுத்திருக்கிறேன்.

ஒரு குடிமகனாக இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறேன். இந்த ஆப்பை உருவாக்க முக்கியக் காரணம் இந்த தலைமுறைக்கு பொது அறிவைப் பற்றிய புரிதலோ, ஈடுபாடோ இல்லை. அவர்களை ஈர்க்க மொபைலில் இந்த மாதிரி ஒரு ஆப் உருவாக்க நினைத்தேன். முழுக்க முழுக்க இது மொபைல் யுகம். ஆப் தான் எதிர்காலம். அதனால்தான் இதை தேர்ந்தெடுத்தேன்.

 இதில் எனக்கும் பயனாளிக்கும் மட்டுமே நேரடி தொடர்பு. நடுவில் எந்த ஏஜென்டும் கிடையாது. மக்கள் டிஜிட்டல் மணியை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மொபைலை மட்டுமே உலகம் என நினைத்திருக்கிறார்கள். கர்மா என்பது தேசிய அளவில் தெரிந்த ஒரு வார்த்தை. அதனால் இந்த அப்ளிகேஷனுக்கு அந்தப் பெயரை வைத்திருக்கிறோம்.

இந்த க்விஸ் விளையாட்டில் கேள்விக்கு 4 சாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இதை விளையாடுவதன் மூலம் தெரியாத விஷயங்களைக் கூட தெரிந்து கொள்ளலாம். Learn, Earn, Return என்பது தான் இந்த ஆப்பின் டேக்லைன். தினமும் இந்த விளையாட்டை விளையாடலாம்.

இதில் விளையாடி பொது அறிவை வளர்க்கலாம், பணம் சம்பாதிக்கலாம், பொதுச் சேவை செய்யும் தன்னார்வ அமைப்புகளுக்கு நீங்கள் உதவலாம். முதல் கட்டமாக அருணோதயா சேவை  அமைப்புக்கு நாங்கள் உதவியிருக்கிறோம்.

90% கேள்விகள் இந்தியாவைப் பற்றியதுதான். இதுவரை 4000 பேர் இந்த ஆப்பை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ஒரு சில நண்பர்களின் பொருளாதார பங்களிப்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். ஒருசில இளைஞர்கள் என்னுடன் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறோம்.

என்னைச் சந்திக்கும் நண்பர்கள் இளமையாகத் தானே இருக்கீங்க... இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளலாமே? என்கிறார்கள். ரேவதியுடன் சில வருடங்கள்தான் வாழ்ந்தேன். அதுவே  ஆயுசுக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்களாகப் பழகுகிறோம்.ரஜினி, கமல் போன்ற சினிமா ஜாம்பவான்கள் இப்போது அரசியலில் இறங்கியுள்ளார்கள். அவர்கள் கட்சியில் சேரும் எண்ணம் இல்லை என்றாலும் அவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் என்னிடம் ஏராளமான முற்போக்கான திட்டங்கள் இருக்கு.

சினிமாவைப் பொறுத்தவரை செலக்டிவ்வான படங்களில் நடித்து வருகிறேன். தற்போது மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘லூசிஃபர்’, ‘ஜெயம்’ ரவியின் ‘அடங்க மறு’, பரத்துடன் ‘காளிதாஸ்’, பிரபுதேவாவுடன் ‘பொன் மாணிக்கவேல்’, ஜி.வி.பிரகாஷுடன் ‘4ஜி’ ஆகிய படங்களில் நடித்துள்ளேன். சினிமாவில் இருக்கும் அதே ஆர்வம் சமூகத்துக்கு நல்லது பண்ணணும் என்பதிலும் இருக்கிறது’’ என்றார்.

- சுரேஷ்ராஜா