‘பேட்ட’யில் நடிக்கும் பழுவேட்டரையர்!



சமீபத்தில் வெளியான ‘திமிரு புடிச்சவன்’, ‘சீமத்துரை’ ஆகிய படங்களில் அதிரிபுதிரியான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஆதேஷ் பாலா. இவர் பாக்யராஜ் படங்களில் வரும் சிவராமனின் கலையுலக வாரிசு.
அவரிடம் பேசினோம்.“நான் ‘திமிரு புடிச்சவன்’ படத்துல இரண்டு சீன்ல நடித்திருந்தாலும் என்னுடைய கேரக்டருக்கு ஓப்பனிங், முடிவு இருந்தது. அந்தப் படத்தில் நடிக்கும் போதே ‘‘நல்லா பண்றீங்க’’ என்று விஜய் ஆண்டனி சார் பாராட்டியதோடு பிற படங்களுக்கும் சிபாரிசு பண்ணினார்.

‘சீமத்துரை’ படத்தில் நெகடிவ் கேரக்டர் பண்ணியிருந்தேன். தஞ்சை நேட்டிவிட்டி படம் என்பதால் தஞ்சை வட்டார மொழியைப் பேசி நடித்தது புது அனுபவமாக இருந்தது. ஒரு நடிகனுக்கு கேரக்டருக்கான சேலஞ்ச் இருந்தால் வழக்கத்தைவிட அதிக முனைப்புடன் வேலை செய்யமுடியும். அந்த வகையில் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன் சொல்லிக் கொடுத்த வசனங்களைப் பேசி நடித்தேன்.

குறிப்பாக ‘நாங்களும் ஆம்பளதான்யா... அவுத்துபோட்டு அம்மணமா திரியலை…’ என்ற டயலாக் ஆடியன்ஸ் மத்தியில் செம ரீச்.தற்போது ‘பேட்ட’, ‘கள்ளபார்ட்’ பண்றேன். ரஜினி சார் படத்தைப் பற்றி ரிலீஸுக்குப் பிறகே பேசமுடியும். ‘கள்ளபார்ட்’ படத்தில் அரவிந்தசாமி சாருடன் நடித்தது சூப்பர் அனுபவம். அரவிந்த்சாமி சாரை முதன் முறையாக யார் சந்தித்தாலும் அவர்களுக்குள் ஒரு தயக்கம் இருக்கும். காரணம், அவருடைய ரிச் தோற்றம்.

ஆனால் நெருங்கிப் பழகும் போதுதான் அவர் ஜென்டில்மேன் என்று தெரிந்தது. ‘ரோஜா’ போன்ற படங்களில் அவரைப் பார்த்து பிரமித்து இருக்கிறேன். படப்பிடிப்பு சமயத்தில் ஃப்ரெண்ட்லியாகப் பழகினார். பொதுவாக படப்பிடிப்பு சமயத்தில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும்போது இறுக்கமான சூழ்நிலை இருக்கும்.

அவர்களை அடிக்கும்போதோ, டயலாக் பேசும்போதோ கொஞ்சம் தயக்கம் இருக்கும். ஆனால் அரவிந்த் சாமியின் அப்ரோச்சால் எளிதாக நடிக்க முடிந்தது.‘இங்கிலீஷ்காரன்’ படத்தில் வடிவேல் சாரும், ‘மம்பட்டியான்’ படத்தில் பிரசாந்த் சாரும் தங்களுடன் நடிக்கும் நடிகர்களுடன் சகஜமாகப் பேசி பழக்கம் ஏற்படுத்திக் காட்சி சிறப்பாக வருவதற்கு முயற்சிப்பார்கள்.

சினிமாவில் ஜெயிக்க பின்னணி இருந்தாலும் அதைவிட முக்கியம் அதிர்ஷ்டம். ஏன்னா, அதிர்ஷ்டம் இருந்தால்தான் இங்கு ஜெயிக்கமுடியும். அது என் வாழ்க்கையிலே நடந்துள்ளது.‘பொன்னியின் செல்வன்’ என்ற வெப் சீரிஸில் ‘பெரிய பழுவேட்டரையர்’ கேரக்டர் எனக்குக் கிடைத்தது. யானை மீது உட்கார வைத்து காட்சிகளும் எடுத்தார்கள். ஆனால் ட்ராப் ஆகிவிட்டது.

திறமை எல்லாரிடமும் இருக்கு. கமல் சார் ஒரு முறை ‘வாய்ப்பு உள்ளவர்கள், வாய்ப்பு இல்லாதவர்கள் என இரண்டு பிரிவுகள்தான் சினிமாவில் இருக்கு’ என்றார்.எனக்கான திருப்புமுனை அமையவில்லை என்றாலும் என் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது நடிக்கும் படங்கள் அந்த நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. வெற்றிக்கு ஒரு படம் தேவை. அது அமைந்தால் தொடர்ந்து சினிமாவில் டிராவல் பண்ணமுடியும்.

என்னுடைய வளர்ச்சி ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக உள்ளது. 15 வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ரஜினி சார் படம் எதிர்பாராதது. அதுபோல் நல்ல வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடிகர்களில் கார்த்திக் சாரின் தீவிர ஃபேன். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும். என்னுடைய விருப்பத்தை அவரிடமும் தெரிவித்துள்ளேன்.

வில்லன் என்றில்லாமல் ஹீரோ, காமெடியன் என்று அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க ரெடி. இயக்குநர்கள் என்னை வில்லனுக்கான கோணத்தில் பார்க்காமல் இருப்பது எனக்குக் கிடைத்த கிஃப்ட்’’ என்றார்.

- ராஜா