மின்னுவதெல்லாம் பொன்தான்-14



நெஞ்சம் மறப்பதில்லை.. உன் நினைவை இழப்பதில்லை!

1950 களில் கன்னட சினிமாவில் நம்ம ஊர் எம்.ஜி.ஆர் - சிவாஜி மாதிரி ராஜ்குமார் - உதயகுமார் என்ற இரு பெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இடையில் ஜெமினி கணேசன் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நடித்த மாதிரி கன்னடத்தில் நடித்தவர் கல்யாண்குமார்.

சரோஜாதேவி, சவுகார் ஜானகி, கல்பனா, ஜெயந்தி, பாரதி என அன்றைக்கிருந்த முன்னணி நடிகைகள் பலரும் கல்யாண்குமார் ஜோடியாக நடித்தார்கள். கன்னட சினிமாவின் பரப்பு மிகவும் குறைவு. இதனால் கன்னட நடிகர்கள், தமிழ் சினிமாவிலும் நடிக்க விரும்புவார்கள். அப்போது கன்னடப் படங்கள் தயாரானதும் சென்னையில்தான். கன்னட நடிகர்கள் பலரும் வாழ்ந்ததும் கூட சென்னைதான்.

அப்படித்தான் கல்யாண் குமாருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை. சின்னச் சின்ன வேடங்களில் தமிழில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு 1962ல் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, 1963ல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று அடுத்தடுத்து திருப்புமுனை படங்களாக அமைந்தன. இரண்டு படத்தையும் அன்றைக்கு நம்பர் ஒன் இயக்குநராக விளங்கிய ஸ்ரீதர் இயக்கியிருந்தார். இரண்டிலுமே கல்யாண்குமாருக்கு ஜோடி தேவிகா.

இரண்டுமே வெள்ளி விழா படங்கள். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, சமீபத்தில் வெளிவந்த ‘96’ படம் மாதிரியான கதை யமைப்பு. நோயுற்ற கணவனுக்கு முன்னாள் காதல னான டாக்டர் மருத்துவம் செய்கிற மாதிரியான கதை. ‘எங்கிருந்தாலும் வாழ்க...’ என்கிற காதல் தோல்வியாளர்களின் தேசிய கீதம் இந்தப் படத்தி–்ல்தான் இடம்பெற்றது. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஃபேன்டஸி கதை.

காதலைப் பிரிக்க நினைக்கும் வில்லன் ஜென்மங்கள் கடந்தும் அந்த வேலையைச் செய்கிற கதை. அந்த காதலர்களாக கல்யாண்குமாரும், தேவிகாவும் நடித்தார்கள். ‘நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை...’ என இப்போதும் மனதை உருக்கும் பாடல் இடம்பெற்ற படம் இதுதான்.

ஸ்ரீதர் படங்களில் நடித்தவர்கள் அதன் பிறகு டாப்புக்கு வருவார்கள் என்பது அன்றைய நிலை. ஆனால் கல்யாண்குமாருக்கு ஏனோ அந்த மேஜிக் நடக்கவில்லை. ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படங்களில் கல்யாண்குமாரை ரசிகர்கள் அந்த கேரக்டராகத்தான் பார்த்தார்களே தவிர அவரை ஒரு மனம் கவர்ந்த ஹீரோவாக ஏற்கவில்லை. மேலும் அந்தக் காலகட்டத்தில் தமிழ் ரசிகர்கள் கன்னட நடிகைகளை ஏற்றுக்கொண்ட அளவிற்கு நடிகர்களை ஏற்கவில்லை. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ் குமாரே தமிழ் சினிமாவில் தடம் பதிக்க முடியவில்லை.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படங்களுக்கு முன்பும், பின்பும் ‘பிஞ்சுமனம்’, ‘சவுக்கடி சந்திரகாந்தா’, ‘தாயின் கருணை’, ‘சீமான் பெற்ற பிள்ளை’ என ஏராளமான படங்களில் நடித்தார்.

ஆனால் அது எதுவுமே கவனிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் கன்னட சினிமாவுக்குத் திரும்பி விட்டார் கல்யாண்குமார். சில காலம் ஹீேரா, அதன் பிறகு குணச்சித்திர நடிகர் என்றே அவர் திரைப் பயணம் முடிவுற்றது. இப்போது அவரது வாரிசுகள் சின்னத்திரை நடிகர் களாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்டு களாகவும் இருக்கிறார்கள்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்