டைட்டில்ஸ் டாக்-98 - ப்ரண்ட்ஸ் கூல் ஜெயந்த்நம்மால் உறவினர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, ஆனால் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம். நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பவன் வாழ்க்கையில் தோல்வியே அடைய மாட்டான். என் வாழ்க்கையில் வீணை நாதம் போல இனிமையான நண்பர்கள் இருந்ததால்தான் ஜெயிக்க முடிந்தது.

பிறந்தது, வளர்ந்தது சென்னையில்தான். ஸ்கூல் படிக்கும் போது எனக்கு நண்பர்கள் வட்டம் அதிகம். நண்பர்களில் பலர் இசைத்துறையில் ஆர்வம் மிக்கவர்கள். தினமும் மாலையில் சந்திப்பு நடக்கும். அப்போது நான் பத்தாவது முடித்திருந்தேன்.

நண்பர்கள் இசைத் துறையில் நாட்டமாக இருந்தபோது நான் வித்தியாசமா எதாவது பண்ணணும்னு நினைத்தேன். மிமிக்ரி, தபேலா, நடனம் மூன்றையும் ஒரே கட்டத்தில் கற்றுக் கொண்டேன். டான்ஸ் பொறுத்தவரை எனக்கு குருநாதர் என்று யாரும் இல்லை. எங்க வீட்ல ‘டெக்’ இருந்தது. மைக்கேல் ஜாக்சன் வீடியோ கேசட்டை போட்டுப் பார்த்து கன்னாபின்னான்னு டான்ஸ் கற்றுக் கொண்டேன்.

நண்பர்கள் பார்ட் டைமாக இசைக் கச்சேரி பண்ணுவார்கள். ஒரு முறை என்னை டான்ஸ் ஆட அழைத்துச் சென்றார்கள். நாளடைவில் சொந்தமாக நானும் நண்பர்களும் சேர்ந்து நடனக் குழு ஆரம்பிக்குமளவுக்கு நடனத்தின் மீது ஆர்வம் அதிகமானது. நியூ இயர் கொண்டாட்டம் போன்ற விழாக்களில் நடனம் ஆடுவோம்.

அப்போது ஒரு முறை எங்களுக்கு ரெகுலராக நடனமாடக்கூடிய டான்ஸர் வரவில்லை.  என்ன பண்ணலாம் என்று யோசித்தபோது கவிதா என்ற சினிமா டான்ஸரை அழைத்து வந்தோம். அவர்தான் பின்னாளில் ‘காதலன்’ படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்தார். பிறகு முழு நேர நடிகையாகிவிட்டார்.

கவிதா தொடர்பு மூலம் சீனு என்ற நண்பரின் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னுடைய திறமையைப் பார்த்துவிட்டு புலியூர் சரோஜா மாஸ்டரிடம் அழைத்துச் சென்றார். அப்போது ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் இடம் பெற்ற ‘பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை’ என்ற பாடலுக்கு ஆடிஷன் நடந்து கொண்டிருந்தது. 50 பேர்ல ஒருவனாக செலக்ட் ஆனேன்.

சினிமாவுக்குள் சென்றதும் சினிமா என்னை முழுமையா ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனந்த்பாபு அப்போது இன்ஸ் பிரேஷனா இருந்தார். தொடர்ந்து ஏராளமான படங்களில் டான்ஸராக வேலை பார்த்தேன். அதற்கு காரணம் நண்பர் சீனு. ஒரு கட்டத்தில் சீனுவே நடன இயக்குநர் சங்கத்தில் சேர்ந்தால் இன்னும் அதிகமா சம்பாதிக்கலாம் என்று ஆலோசனை சொன்னார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றதும் அவருடைய செயினை அடகு வைத்து சங்கத்தில் சேர்த்துவிட்டார். கடன் அன்பை முறிக்கும் என்பதால் எவ்வளவு வேகமாக சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக சம்பாதித்து செயினை மீட்டுக் கொடுத்துவிட்டேன்.

‘கரண மொகுடு’ என்ற தெலுங்குப் படம். பிரபு தேவா டான்ஸ் மாஸ்டர். அந்தப் படம்தான் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிக்க ‘மன்னன்’ ஆக வந்தது. பிரபு மாஸ்டர் மாதிரி ஆடுவதற்கு ஆடிஷன் பண்ணினார்கள். அதில் எனக்கு கிடத்த நண்பர்கள்தான் நோபல், ஜானி போன்றவர்கள். இன்று அவர்கள் எல்லோரும் பிரபல டான்ஸ் மாஸ்டர்கள்.

தொடர்ந்து ராஜு சுந்தரம் மாஸ்டர் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். ‘கேப்டன்’ படத்தில் உதவி நடன இயக்குநராக வேலை பார்த்தேன். ராஜு மாஸ்டரிடம் 200 படங்கள் வேலை பார்த்தேன். அவ்வளவு காலமும் நண்பராக, சகோதரராகப் பழகினார். கே.பாலசந்தர் சார், ரஜினி சார், ஷங்கர் சார் போன்ற ஜாம்பான்களை அறிமுகப்படுத்தி வைத்தார். நான் பல மொழிகளில் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்ததற்கு  ராஜு மாஸ்டரின் நட்புதான் காரணம்.

 ‘காதல் தேசம்’ படத்தில் ராஜு மாஸ்டர் வேலை செய்ய முடியாதளவுக்கு அவருக்கு வேறு படத்தில் கமிட்மென்ட் இருந்தது. அச்சமயத்தில் ‘நீங்க மாஸ்டராகக் கூடாதா’ என்று இயக்குநர் கதிர் சார் கேட்டார். எனக்கு வந்த இந்த வாய்ப்பை ராஜு மாஸ்டரிடம் சொன்னேன். மாஸ்டருக்கு என் மீது அன்பு இருந்ததால் ‘நல்ல வாய்ப்பு, மிஸ் பண்ணாதே’ என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘கல்லூரிச் சாலை’ என்ற பாடல் செம ஹிட்.  தெலுங்கிலும் ‘பிரேம தேசம்’ என்ற பெயரில் டப்பாகி இருந்ததால் தெலுங்குப் படங்களிலிருந்தும் வாய்ப்பு வந்தது. நாகார்ஜுனா, வெங்கடேஷ், ஜெகபதி பாபு உட்பட முன்னணி நடிகர்களின் படங்களில் வேலை பார்த்தேன்.

தமிழில் எனக்கு வாய்ப்பு கொடுத்து உயர்த்திவிட்டதில் விஜய் சாருக்கு பங்கு உண்டு. நான் மாஸ்டராகிவிட்டேன் என்ற தகவலைத் தெரிவிக்க ஒரு முறை விஜய் சாரை சந்திக்க சென்றேன். உடனே ‘மாண்பு மிகு மாணவன்’ படத்தில் இடம் பெற்ற ‘கோடு போட்டா ரோடு போடு’ பாடல் வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து விஜய் சார் படங்களான ‘ஒன்ஸ்மோர்’, ‘லவ்டுடே’, ‘ நெஞ்சினிலே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘குஷி’, ‘ப்ரெண்ட்ஸ்’, ‘ப்ரியமானவனே’ உட்பட ஏராளமான படங்களில் வேலை கொடுத்தார்.

‘ஆசை’யில் ‘மீனம்மா...’ பாடலுக்கு நானும் ராஜு மாஸ்டரும் நடனம் ஆடியிருந் ததால் அஜீத் சார் பரிச்சயம் இருந்தது. அதன் அடிப்படையில் அஜித் சாருடன் ‘வாலி’, ‘பகைவன்’, ‘ராசி’, ‘ஜனா’ போன்ற படங்களுக்கு நடனம் அமைத்தேன். தவிர முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் நடனம் அமைத்துள்ளேன்.

சினிமாவில் திறமை முக்கியம். ஆனால் ப்ரெண்ட்ஷிப்பை தொடரும்போது வெற்றி நிச்சயம். என்னுடைய பெயருக்கு ஏற்ப எல்லா இடங்களிலும் கூலாக நடந்துகொள்வேன். ஏன்னா, உண்மையான நட்பு எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும். குடும்ப உறவுகளிடம் ஷேர் பண்ணாத விஷயங்களை நண்பர்களிடம் ஷேர் பண்ணலாம். ஆனால் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. எனக்கு அப்படி சீனு, சிவகுமார் போன்ற நண்பர்கள் கிடைத்ததால் வாழ்கையில் முன்னேற முடிந்தது.

நல்ல நண்பர்கள் தேடுபவர்கள் முதலில் தங்களை நல்ல நண்பர்களாக அடையாளப் படுத்த வேண்டும். நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனம் அவசியம். ஆயிரம் பேரிடம் அறிமுகம் நிகழ்ந்தாலும் ஆழமான நட்புக்கு உரியவர்கள் ஆறுபேர்கூட தேற மாட்டார்கள். இதுதான் இன்றைய அவசர உலகின் நிதர்சனம். சோதனை சமயத்தில் அன்பை வாரி வழங்கி புதுவசந்தத்தை வார்ப்பதே நட்பு. அப்படிப்பட்ட நட்பைப் போற்றுங்கள்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)