ஹார்ட்டை கசக்கி துவைச்சி கிஸ் அடிப்பது எப்படி?தான் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே இரண்டாவது படமான ‘என் காதலி சீன் போடுறா’வை முடித்து இதையும் ரிலீஸுக்கு ரெடியாக்கி விட்டார் இயக்குநர் ராம்ஷேவா. படத்தின் ஆடியோ வெளியீட்டை சமீபத்தில் சிறப்பாக நடித்து முடித்திருப்பவரை ஓரம் கட்டி பேசினோம். சீன் போடாமல் சிம்பிளா பேச ஆரம்பித்தார்.

“எப்படி வந்திருக்கு உங்க இரண்டாவது படம்?”

“முதல் படமான ‘டீக்கடை பெஞ்ச்’ படம்தான் நான் இந்தப் படத்தை இயக்குவதற்கு காரணமாக இருந்தது. ‘டீக்கடை பெஞ்ச்’ படத்தின் பாடல்களைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஜோசப் பேபி இந்த வாய்ப்பை வழங்கினார். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளேன்.

நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும். சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லா விட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டுவிடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறேன்.”

“ஹீரோ?”

“மகேஷ். எப்படி அவருக்கு ‘அங்காடித் தெரு’ லேண்ட் மார்க் படம் போல் இருக்கிறதோ அதேபோல் இந்தப் படமும் அமையும். முதலில் இந்தப் படத்தை ‘கயல்’ சந்திரன், ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஆகியோரை வைத்து பண்ணுவதற்கு ப்ளான் பண்ணினேன். கால்ஷீட் போன்ற காரணங்களால் அந்த முயற்சி நடைபெறவில்லை.

மூன்றாவதாகத் தான் மகேஷை சந்தித்து கதை சொன்னேன்.  25 நாட்கள் ஒரே கட்டமாக தேதி கேட்டேன். அவரும் மேனேஜ் பண்ணி தேதி கொடுத்தார். ரொம்ப யதார்த்தமா பண்ணியிருக்கிறார். பக்கத்துவீட்டு பையன் போன்ற லுக் என்பதால் கதையை மீறி எந்த சீனும் இருக்காது. மகேஷுக்கு இந்தப் படம் வந்தால் திருப்பம் வரும்.”

“ஹீரோயின்?”

“ஷாலு. வட இந்தியாவைச் சேர்ந்தவர். சில தெலுங்குப் படங்கள் பண்ணியுள்ளார். தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் கனவு என்பதால் பறந்து வந்து கதை கேட்டார். 30, 40 பேரிடம் ஆடிஷன் பண்ணி டயர்டாகி இருந்த எங்களுக்கு ஷாலுவைப் பார்த்ததும் நிம்மதி வந்தது. கதைக்கு பொருத்தமா இருந்ததோடு அதிக இன்வால்வ்மென்ட்டுடன் நடித்தார். தமிழில் என்ட்ரி கொடுக்கணும் என்பதோடு ஜெயிக்கணும் என்பதற்காக ரொம்ப சின்ஸியரா தன்னுடைய கேரக்டரை பண்ணிக் கொடுத்தார்.”

“பிற நட்சத்திரங்கள்?”

“மனோபாலா சார் கதையோட அவுட்லைன் கேட்டதுமே ஓ.கே. சொன்னார். படப்பிடிப்பு சமயத்தில் அவருக்கு கடுமையான  மூட்டு வலி. அப்படியிருந்தும் மாடிப்படி ஏறி, இறங்கி நடித்தார். காமெடி காட்சியில் என்ஜாய் பண்ணி நடித்தார். ‘ஆடுகளம்’ நரேன் சார் பெரிய பலமா இருந்தார். எக்ஸ்பீரியன்ஸ்டு ஆர்டிஸ்ட் என்றாலும் நான் சொன்னதை பண்ணிக் கொடுத்தார். நான் கவனித்தவரை புதுசா வர்ற இயக்குநர்கள் ஜெயிப்பதற்கு சப்போர்ட்டாக இருக்கிறார்.

கோகுல் இன்ஸ்பெக்டரா வர்றார். அம்மா, தங்கை என்று குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பான அண்ணனாகவும் சென்டிமென்ட் காட்சியில் பின்னியிருப்பார். நிஷா, அஞ்சலி அம்மா, அம்பானிசங்கர், தியா, தென்னவன், வையாபுரி ஆகியோருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.”“டெக்னீஷியன்ஸ்?”

“ஒளிப்பதிவு வெங்கட் பண்ணியிருக்கிறார்.   நான் இயக்கியுள்ள ‘டீக்கடை  பெஞ்ச்’ படத்துக்கும் அவர்தான் கேமரா. ஒளிப்பதிவாளர் ப்ரியன் சாரின் உதவியாளர். சில படங்கள் பண்ணியிருந்தாலும் முதலில் இந்தப் படம்தான் ரிலீஸாகவுள்ளது. 25 நாள் ப்ளான் பண்ணி படப் பிடிப்புக்கு கிளம்பினோம்.

கேமராமேன்  23 நாளில் முடித்துக் கொடுத்தார்.இசை அம்ரேஷ். நிறைய பெரிய பட்ஜெட் படம் பண்றார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ பாடல்கள் கேட்ட போதே அவர்தான் மியூசிக் பண்ணணும்னு முடிவு பண்ணினேன். அவர் முதலில் சம்மதிக்கவில்லை. இரண்டு, மூன்று சந்திப்புக்குப் பிறகே பைனல் பண்ணினார். போகும்போது நான் எழுதிய ‘ஹார்ட்ட கசக்கி துவைச்சி கிஸ் பண்ணினேன்’ என்ற பாடலைக் காண்பித்தேன்.

அதில் இம்ப்ரஸ்ஸாகி உடனே டியூனும் போட்டுக் கொடுத்தார். ‘சின்னமச்சான்’ பாடலைத் தொடர்ந்து செந்தில்கணேஷ், ராஜலக்ஷ்மி இருவரும் இந்தப் படத்திலும் ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்கள். ‘நிலா கல்லுல செதுக்கிய சிலையா’ என்று துவங்கும் அந்தப் பாடல் மிகப் பெரிய ஹிட்டடித்துள்ளது.இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது ஹேப்பியா ஆரம்பித்தேன்.

ஆனால் இப்போது நான் ஹேப்பியா இல்லை.  பொதுவா தயாரிப்பாளர்- இயக்குநர் இடையே சில கருத்துவேறுபாடு வருவது சினிமாவில் சகஜம். பேசித் தீர்த்துக் கொள்ளும் விஷயங்களை சில மூன்றாவது மனிதர்கள்  ஊதிப் பெரிதாக்கிவிடுகிறார்கள்.

 ஒரு தயாரிப்பாளருக்கு நம்பிக்கை கொடுத்து அழைத்து வருவது இயக்குநர். அப்படி ஒரு இயக்குநர் படம் வெற்றியடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வதுண்டு. மூணாவது ஆள் தேவையில்லாமல் சீன் போடும் போது மனஉளைச்சல்தான் மிஞ்சுகிறது. அதையும் தாண்டி இந்தப் படத்தை சிறப்பாகக் கொண்டு வந்துள்ளேன்.”

“அடுத்து?”

“பக்கா கமர்ஷியல் கதை ஒண்ணு. விஷால் சாரை மனசுலே வெச்சி ரெடி பண்ணியுள்ளேன். அவரை நேரில் சந்தித்து என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்தேன். அந்தச் சந்திப்பில் அவர் என்னிடம் நடந்துகொண்ட விதம், அவருடைய அப்ரோச் ரொம்ப பிடித்துவிட்டதால் எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற வைராக்கியம் அதிகமாகியுள்ளது. கண்டிப்பாக அது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

- சுரேஷ்ராஜா