அஜித்துக்கு வெற்றி கொடுக்கும் வெற்றி!



கலர்ஃபுல் கமர்ஷியல் படங்களைப் பார்க்கும்போது அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்  நம்முடைய மனதில் ஒட்டிக்கொள்வார். அப்படி சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான  ‘விஸ்வாசம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி. படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் இருந்த வெற்றியிடம் பேசினோம்.

“தொடர்ந்து அஜித் படம் பண்ணுகிறீர்கள்... அதன் ரகசியம் என்ன?”

“எல்லாரும் இதைத்தான் கேட்குறாங்க. ‘வீரம்’, ‘வேதாளம்,’ ‘விவேகம்’, தொடர்ந்து அஜித் சாருடன் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்த வாய்ப்பு கிடைக்க காரணம் அவருக்கு எங்கள் ஒர்க் பிடிச்சிருக்கு. அதனால் கொடுத்தார். அஜித் சாருக்கு உண்மையா இருக்கிறவங்க, நல்ல சிந்தனையுடன் இருக்கிறவங்க, அன்பா இருக்கிறவங்களை பிடிக்கும்.

அதற்கு சிவா உண்மையா இருக்கிறான்னு நினைக்கிறேன். நானும் என் அளவில் நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பதால் அஜித், சிவா கூட்டணியுடன் டிராவல் பண்ண முடிந்தது. நாங்கள் எப்போதும் கடின உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் கடின உழைப்பு, நல்ல சிந்தனைக்கு கிடைத்த பரிசுதான் ‘விஸ்வாசம்’ படத்தோட விஸ்வரூப வெற்றி.”

“உங்களுக்கு ‘விஸ்வாசம்’ படத்துலே சவாலா அமைஞ்ச விஷயங்கள்?”

“பாத்ரூம் ஃபைட் சீன், மழை எபிசோட், க்ளைமாக்ஸ் காட்சி என்று ஆக்‌ஷன் ப்ளாக் அனைத்தும் சவால் நிறைந்ததாக இருந்தது. படம் முழுக்க கிரவுட் இடம் பிடித்திருக்கும். வில்லேஜ், சிட்டி என்று இரண்டு பின்னணியில் கதை அமைந்திருந்ததால் 500, 1000 பேர்  எப்போதும் இருப்பார்கள். இது மாதிரியான சிச்சுவேஷன் எல்லா பெரிய பட்ஜெட் படங்களிலும் இருக்கும் சவால்கள்.

தியேட்டரில் ரசிகர்கள் அஜித் சாரை கொண்டாடியதை பார்க்கும் போது மகிழ்ச்சியைக் கொடுத்தது. உற்சாகமா இருந்தது. அந்த வகையில் சிரமம் என்று எதுவும் சொல்ல முடியாது. அதற்கு தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். எதிர்பார்த்த லொகேஷன்ஸ் அமைந்ததால் திருப்திகரமா வேலை பார்க்க முடிந்தது.”

“அஜித்துக்கு போட்டோகிராபி பிடிக்கும் இல்லையா?”

“அஜித் சார் புரஃபஷனல் போட்டோகிராபருக்கான அனைத்து சென்ஸும் உள்ளவர். லைட்டிங், பிரேமிங்னு அனைத்து நுட்பங்களும் தெரியும். நான்கு படம் அவருடன் இணைந்து வேலை பார்த்துள்ளேன். அவருடைய ஆலோசனையா ஒரு ஷாட்கூட ஒரு படத்திலும் சொன்னது இல்லை. அந்த ஷாட்டை அப்படி எடுக்கலாம், இந்த ஷாட்டை இப்படி எடுக்கலாம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

அவருக்கு பிடிச்ச ஷாட்டை மனம் திறந்து பாராட்டுவார். கேமரா ஆர்வலர் என்பதால்  லென்ஸ், எக்ஸ்போஷர் போன்ற கேமரா சார்ந்த விஷயங்களை என்னிடம் மட்டுமில்லாமல் என் உதவியாளரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வார்.  மற்றபடி அவர் படமாக்குவதைக் குறித்து ஆலோசனை சொன்னதில்லை. ஒருவரிடம் நம்பிக்கை வைத்து ஒரு பொறுப்பை கொடுத்துவிட்டால் மீண்டும் அந்த ஏரியாவுக்குள் மூக்கை  நுழைக்கமாட்டார். அதுதான் அஜித்.

“டைரக்டர் சிவாவுடன் தொடர்ந்து டிராவல் பண்ணுகிறீர்கள்.... உங்கள் நட்பு குறித்து?”

“எங்கள் நட்பு திரைப் படக் கல்லூரியில் ஆரம்பித்தது. சிவா  இயக்கிய முதல் குறும் படத்திலிருந்து எங்கள் நட்பு  தொடர்கிறது. ‘சிறுத்தை’ மட்டும்தான் சிவாவுடன் சேர்ந்து வேலை செய்யவில்லை. மற்றபடி சிவா இயக்கிய அனைத்து தமிழ், தெலுங்கு படங்களுக்கும் நான் தான் கேமரா பண்ணியிருக்கிறேன்.

நண்பர் என்பதால் கதை உருவாக்கத்திலிருந்து டிராவல் பண்ண முடிகிறது. எங்கள் இருவருக்கிடையே பல விஷயங்கள் ஒத்துப்போகும். மற்ற இயக்குநர்களிடம் கிடைக்கும் சுதந்திரத்தை விட சிவாவிடம் கொஞ்சம் அதிகம் எதிர்பார்க்கலாம். நிறைய பேர், ‘எப்படி இவ்வளவு காலம் தொடர முடிகிறது?’ என்று கேட்கிறார்கள். கல்லூரிக் காலத்திலிருந்து நாங்கள் நண்பர்கள். எங்கள் நட்பு தொடர காரணம்  எங்களுக்கிடையே சிறந்த புரிதல் இருப்பதுதான்.”

“டிஜிட்டல் முறையால் ஒளிப்பதிவு எளிதாகியுள்ளதா?”

“டிஜிட்டல் வரவு வரவேற்கத்தக்க மாற்றம். விஞ்ஞானம் வளரும்போது நாமும் அதற்கு ஏற்ப மாறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் டிஜிட்டல் வந்ததால் ஒளிப்பதிவு எளிமையாகிவிட்டது என்பது தவறான கருத்து. சாதகம் என்றால் சின்ன கேமராவிலும் நல்ல குவாலிட்டி கிடைக்கிறது. பல பரிசோதனை முயற்சிகளைப் பண்ணிப் பார்க்க முடிகிறது.

கருவியை யார் வேண்டுமானலும் பயன்படுத்தாலம். ஆனால் திறமையைப் பொறுத்துதான் தரம் உறுதி செய்யப்படும். ஒரே கேமராவாக இருந்தாலும் அவரவர் பயன்படுத்தும்போது வித்தியாசத்தைப் பார்க்க முடியும். ஒளிப்பதிவு கேமாராவைச் சார்ந்தது என்பதைத்தாண்டி திறமையைப் பொறுத்துதான் சிறந்த ஒளிப்பதிவு வெளிப்படும். திறமைசாலிகளைப் பயன்படுத்தும் போது நல்ல தரம் கிடைக்கிறது.”

“இளம் ஒளிப்பதிவாளர்கள் பற்றி?”

“காலமாற்றத்துக்கு ஏற்ப இளைஞர்களை வரவேற்றுத்தான் ஆகவேண்டும். நான் சினிமாவுக்குள் வரும்போது எல்லோரும் வரவேற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்படி அவர்களும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

இப்போது தமிழில் ஒளிப்பதிவைக் கொண்டாடும் விதமாக நல்ல படங்கள் வருகிறது. 100 படங்கள் வந்தால் 90 படங்கள் திருப்தியாக உள்ளது. ஒருகாலத்தில் ஒளிப்பதிவாளராக வருபவர்களுக்கு கல்லூரிப் படிப்பு, உதவி இயக்குநர் என்ற சில ஸ்டேஜ் இருந்தது. நான்கூட  சரவணன், ஆர்தர் வில்சன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்துதான் கேமராமேனா வந்தேன்.

கல்லூரி தாண்டி உதவியாளராக வேலை செய்தபோது ஸ்பாட் ஒர்க் கற்க முடிந்தது. என்னைப் பொறுத்தவரை அதை நல்ல அணுகுமுறையாகப் பார்க்கிறேன். இப்போது யாரிடமும் உதவியாளராக வேலை பார்க்காமல் நேரடியாக வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு நம்மை விட அறிவுத் திறன் அதிகமா இருக்கலாம்.”

“அதிகமா எதிர்பார்த்த படம் தோல்வியடையும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?”

“கண்டிப்பா வலியைக் கொடுக்கும். ஏன்னா, எல்லா படத்துக்கு ஒரே உழைப்பைப் கொடுக்கிறோம்.  ஒரு வாழ்க்கை மாதிரிதான் ஒரு படத்துக்கு வேலை செய்கிறோம். இங்கு போட்டி அதிகம். தி பெஸ்ட் கொடுக்கவேண்டும் என்பதால் கடுமையா உழைக்கிறோம்.

நம் எதிர்பார்ப்புக்கு எற்ப படம் ஓடாதபோது வருத்தம் இருக்கத்தான் செய்யும். உழைப்பு, எதிர்பார்ப்பு தாண்டி ஒரு படம் ஓடும்போதோ, ஓடாதபோதோ மனதளவில் ஏற்படும் மாற்றத்தைத் தவிர்க்க முடியாது. வெற்றி கிடைக்காதபோது அந்தத் தருணத்தில் வருந்தினாலும் அதைக் கடந்து அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாகக் கொடுக்க முயல்வேன்.”

“நடிகர், இயக்குநர்களோடு ஒப்பிடும் போது ஒளிப்பதிவாளர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கிறதா?”

“நடிகர், இயக்குநர் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற ஏரியாவுக்குள் போக விரும்பவில்லை. என்னுடைய வேலைக்கு ஏற்ப எனக்கான ஊதியம் கிடைக்கிறது. என்னுடைய முதல் படத்துக்கு ஒண்ணேகால் லட்சம் சம்பளம் பேசினார்கள். ஆனால் அந்தப் பணம் முழுசா என் கைக்கு வந்து சேரவில்லை.

அதுக்காக எங்கிட்ட அதே சம்பளத்தை இப்போது யாரும் பேசப் போவதில்லை. வளரும் போது சம்பளமும் மாறுபடுகிறது. அந்த வகையில் ஒரு படத்தின் வெற்றி, தோல்விதான் சம்பளத்தை நிர்ணயிக்கிறது,மரியாதை கிடைக்கிறது. ‘விஸ்வாசம்’ படத்துக்கு எனக்கு பேசியபடி சம்பளம் கொடுத்தார்கள். யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.”

“இயக்குநர் வெற்றியை எப்போது எதிர்பார்க்கலாம்?”

“ஒளிப்பதிவு துறையில் நான் பண்ணவேண்டிய விஷயம் நிறைய இருக்கு. டைரக்‌ஷன் என்பது சாதாரண வேலை அல்ல. ஒளிப்பதிவாளருக்கான திறன் வேறு, இயக்குநருக்கான திறன் வேறு. எனக்கு இயக்குநருக்கான திறன் வரும்போது அதைப் பற்றி யோசிப்பேன். அதுவரை கேமராமேனாக சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன்.”

“வேறென்ன படம் பண்றீங்க?”

“லாரன்ஸ் ராகவேந்திராவின் ‘காஞ்சனா-3’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் படத்துக்கு கமிட்டாகியுள்ளேன். ‘மிஸ்டர் சந்திரமெளலி’ திரு இயக்குகிறார்.”

- சுரேஷ்ராஜா