பாட்டுத் தலைவன் பேசுகிறார்!



அடுத்த தலைமுறை பாடலாசிரியர்களில் நம்பிக்கை மிகுந்த புதிய வரவாக இருக்கிறார் பாடலாசிரியர் அருண் பாரதி. ‘விஸ்வாசம்’ படம் இவருக்கான அடையாளத்தை இன்னும் அதிகமாக்கியுள்ள நிலையில் தன் பாடல் பயணம் பற்றி அவர் நம்மிடம் பேசினார்.“எனக்கு ‘அண்ணாதுரை’ மூலம்தான் பெரிய வெளிச்சம் கிடைச்சது. தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களால் மிகுந்த நம்பிக்கையோடு என் திரையுலகப் பயணம் நகரத் துவங்கியுள்ளது. மிகுந்த உற்சாகமான ஆண்டாகவே கடந்த ஆண்டு அமைஞ்சது.

‘காளி’, ‘திமிருபுடிச்சவன்’,‘சண்டக்கோழி-2’, ‘விஸ்வாசம்’, ‘களவாணி-2’, ‘தில்லுக்கு துட்டு-2’, ‘அசுரன்’, ‘கட்டுச்சேவல்’, ‘வால்டர்’, ‘சிதம்பரம் ரயில்வேகேட்’, ‘மரகதக்காடு’, ‘எட்டு’, ‘மறந்துட்டியா’, ‘பேயில கண்டம்’ உட்பட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 40க்கும் மேற்பட்ட பாடல்கள். அது மட்டுமில்லாமே சன் டிவியில் ‘பாமா ருக்மணி’, ‘ரோஜா’, ‘விநாயகர்’, ‘அனுமான்’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு முகப்பு பாடல்களும், மற்றும் தனி ஆல்பங்களுக்கு பாடல்களும் என போன வருஷம் ரொம்பவே பிஸியான ஆண்டு.

இதில் சில படங்கள் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன. இன்னும் சில படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. 2018ஆம் ஆண்டு ‘நகநகநக நகுனநகுன’, ‘கண்ணாடி சில்லாகி’, ‘திமிருக்கே புடிச்சவன்’ (திமிருபுடிச்சவன்), ‘மீச வச்ச வேட்டகாரன்’ (சண்டக்கோழி-2), ‘அம்மா அழுவுகிறேன்’ (காளி), ‘நூறாய் யுகம் நூறாய்’ (காளி) ஆகிய பாடல்களும், ‘விஸ்வாசம்’ படத்தில் ‘டங்கா டங்கா’, ‘தல்லேதில்லாலே’ ஆகிய பாடல்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவை.

2018 போலவே 2019ம் உற்சாகமான ஆண்டாக ‘விஸ்வாசம்’ படம் மூலம் துவங்கியுள்ளது. இந்தத் தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், என் பாடல்களைப் பாடிய பாடகர்கள், பாடகிகள், மற்றும் என் பாடல்களை பிரபலமாக்கிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாடல்களை எழுதும்போது பட்ஜெட் பார்க்காமல் எழுதுவதுதான் என் பழக்கம். பாடல்களுக்குள் ஒரு வாழ்க்கை இருக்கணும் என்பதில் கவனமா இருக்கிறேன். ஒரு இயக்குநர் காட்சிகளை வடிவமைப்பது போல், ஒளிப்பதிவாளர் கோணங்கள் பார்ப்பது போல், கதையில் பாடல்கள் இயல்பாக ரத்தமும் சதையுமாகக் கலந்து இருக்கணும்னு நினைப்பேன். அப்படிப்பட்ட பாடல்களை வருங்காலங்களில் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு’’ என்றார்.

- எஸ்