மின்னுவதெல்லாம் பொன்தான்-15



தமிழ் சினிமாவின் முதல் ஆக்‌ஷன் ஹீரோ!

தமிழ் சினிமாவின் முதல் ஆக்‌ஷன் ஹீரோ யாரென்று கேட்டால் எல்லோரும் எம்.ஜி.ஆரைத்தான்  குறிப்பிடுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ரஞ்சன்தான் தமிழ் சினிமாவின் முதல் ஆக்‌ஷன் ஹீரோ. 1941ல் சினிமாவில் அறிமுகமானார் ரஞ்சன். சினிமாவுக்கு வந்த முதல் பட்டதாரி நடிகர். பாடல், நடனம், இசை, எழுத்து, ஓவியம் என சகலகலாவல்லவனாகவும் இருந்தார். தமிழ் சினிமாவில் இன்றைய தேதி வரைக்கும் விமானம் ஓட்டத் தெரிந்திருந்த ஒரே நடிகர் அவர்தான்.

‘ரிஷ்யசிருங்கர்’தான் ரஞ்சனுக்கு முதல் படம். முதல் படமே வெற்றிகரமான படமாக அமைந்தது. ‘மங்கம்மா சபதம்’ படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார். ‘சந்திரலேகா’, ரஞ்சனை மிகப்பெரிய கமர்ஷியல் நடிகராக உயர்த்தியது. இத்தனைக்கும் ‘சந்திரலேகா’வில் அவருக்கு வில்லன் வேடம். வில்லனுக்கும் நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியவர் ரஞ்சன்தான். இயல்பாக நடிப்பதைத் தாண்டி தனி ஸ்டைல், மேனரிசம் என ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வசூல் சக்ரவர்த்தியாகவும் ஆனார்.

ஜெமினியின் ‘நந்தனார்’ படத்தில் அவர் ஆடிய சிவதாண்டவத்தை அதன் பிறகு எந்த நடிகராலும்அவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியவில்லை. ‘நீலமலைத் திருடன்’ படம் வெளிவந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகர் ரஞ்சன்தான். தயாரிப்பாளர்கள் பணப்பெட்டியுடன் அவருக்காக வரிசையில் காத்துக் கிடந்தார்கள். முதன்முதலாக ஒரு நடிகர் பெயரிலேயே படம் வெளிவந்தது ரஞ்சனுக்குத்தான். ‘கேப்டன் ரஞ்சன்’ என்பது அந்தப் படத்தின் பெயர். அதுவே அவர் நடித்த கடைசிப் படமாகவும் ஆனது.

ரஞ்சன் அன்று வளர்ந்த வேகத்தை கணக்கிட்டால் எம்.ஜி.ஆர், சிவாஜியை விட உயர்ந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும். அல்லது அவர்கள் வரிசையிலாவது இருந்திருக்க வேண்டும். ஏன் காணாமல் போனார்?

அன்றைக்கு ரஞ்சனைக் கண்டு மிரண்ட முக்கியமான நடிகர் யார் தெரியுமா? எம்.ஜி.ஆர். தன்னை நிரூபிக்க அவரே சொந்தமாக ‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்கி நடித்தபோது, ரஞ்சனிடம் பத்து படங்கள் வரை கையில் இருந்தன. அதுவரை எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சாண்டோ சின்னப்பா தேவர், அவருக்காக உருவாக்கிய கதையில் ரஞ்சனை நடிக்க வைத்தார். அந்தப் படம் பிரும்மாண்ட வெற்றி பெற்றது. அதுதான் ‘நீல
மலைத் திருடன்’. எம்.ஜி.ஆர் கால்ஷீட் தராத கோபத்தில் ரஞ்சனை நடிக்க வைத்தார் தேவர். படமும் பெற்றி பெற்றதால் ரஞ்சன் மீது எம்.ஜி.ஆருக்கு இயல்பாகவே கோபம் உருவானது.

எம்.ஜி.ஆர் - ரஞ்சன் மோதல் போக்கு ‘நாடோடி மன்னன்’ படத்துக்கு முன்பே இருந்தது. இருவரும் இணைந்து ‘சாலிவாகனன்’ என்ற படத்தில் நடித்திருந்தனர். இருவரும் மோதிக்கொள்ளும் வாள் சண்டை காட்சியில் இருவரும் நிஜமாகவே மோதிக் கொண்டார்கள். இது தொடர்பாக இருவரும் மாறி மாறி புகார் கூறினார்கள். படத்தில் இடம்பெற்ற அந்த வாள் சண்டையில் ரஞ்சனின் வாள் சண்டையே ரசிகர்களிடம் சிறப்பாகப் பேசப்பட்டது.

இதுதான் எம்.ஜி.ஆர் - ரஞ்சன் மோதலுக்கு முதல்படி. ‘நீலமலைத் திருடன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்காக உருவாக்கப்பட்ட ‘சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’ என்ற பாடலில் ரஞ்சன் ஒய்யாரமாக வெள்ளைக் குதிரையில் வந்த காட்சி எம்.ஜி.ஆரின் ேகாபத்தை மேலும் அதிகப்படுத்தியது.

தமிழில் உருவான ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் ஆனபோது அதிலும் நடித்து பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டினார் ரஞ்சன். அதே நேரம் அவர் சறுக்கியதும் இங்கேதான். தமிழ்ப் படங்களை விட இந்திப் படங்கள்தான் அதிக வியாபாரம், அதிக ரீச், அதிக ரசிகர்கள். எனவே, சம்பளமும் அதிகம். எனவே, தமிழ்ப்படங்களை கைவிட்டுவிட்டு இந்திப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

யார் தனக்கு போட்டியாக வருவார்கள் என்று கருதினாரோ, அவரே இந்திப் பக்கம் ஒதுங்கியதில் எம்.ஜி.ஆருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ரஞ்சன் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துவிடாதபடி கவனமாகப் பார்த்துக்கொண்டார். பாலிவுட்காரர்களும் அவர் அங்கு வளர்ந்துவிடாதபடி பார்த்துக் கொண்டார்கள். ஒருகட்டத்தில் எல்லாமே விலகிப்போனதும், ரஞ்சன் வேறு வழியின்றி மீண்டும் சினிமா பக்கம் வராமல் அமெரிக்காவில் மகளுடன் செட்டிலானார்.

தமிழ் சினிமாவின் முதல் சகலகலாவல்லவன் ரஞ்சன். எம்.ஜி.ஆருடன் மோதியது தவறல்ல. ஆனால், இங்கே  இருந்து மோதி ஜெயிக்காமல் இந்திப் பக்கம் ஒதுங்கியதே ஒரு மாபெரும் கலைஞன் சினிமாவை விட்டு ஒதுங்குவதற்கும் காரணமாக அமைந்து விட்டது.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்