நண்பனை டைரக்டராக்க தயாரிப்பாளர்களான 50 பேர்!



‘முஸ்தபா முஸ்தபா’ என்று தொடங்கி ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடலுடன்  பள்ளி, கல்லூரி நட்புகளுக்கு எண்ட் கார்டு விழுவதுதான் பெரும்பாலும் நம் வாழ்க்கைப் பயணம்.  அதையும் மீறி ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே வாழ்நாள் முழுக்க நம்மோடு பயணிப்பார்கள். ஒரு சிலிர்ப்பான சர்ப்ரைஸாக, தங்களுடைய வகுப்புத் தோழன், சினிமாவில் நல்லபடியா இயக்குநராக வரட்டுமே என்ற ஒரே காரணத்துக்காக 50 முன்னாள் மாணவர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள். அந்தத் தோழனின் பெயர் செல்வகண்ணன். படம் ‘நெடுநல்வாடை’.

2000 ம் ஆண்டு நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கில் படித்தவர் செல்வகண்ணன். இவருடன் படித்த நண்பர்களில் 90 சதவிகிதம் பேர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரு நிறுவனங்களில் பொறியாளர்களாக வேலை செய்கிறார்கள். ஏராளமான இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, மற்றவர்கள் போலத் தனியாகப் படம் இயக்க தயாரிப்பாளர்களின் அலுவலகப்படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார் செல்வகண்ணன்.

இதை அறிந்த அவரது வகுப்புத் தோழர்களில் இருவர் மற்றவர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொள்ளத் துவங்கி செய்தியைப் பரிமாற ஆரம்பித்தார்கள். உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குழு உருவாக்கி மொத்த மாணவர்களும் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை செல்வகண்ணன் இயக்கும் படத்துக்கு முதலீடு செய்வதாக உறுதி அளித்தார்கள். இது கதையல்ல, நிஜம்.

உறுதிமொழியில் இருந்து  கடந்த ஒரு வருடத்தில் ஒருவர் கூட பின்வாங்காத நிலையில், சினிமாவில் வழக்கமாக சந்திக்கும் சில சங்கடங்களைக் கடந்து ‘நெடுநல்வாடை’ ரிலீஸுக்கு ரெடியாகியுள்ளது. இறுதிக் கட்டப் பணிகளில் பிஸியாக இருந்த இயக்குநர் செல்வகண்ணனிடம் பேசினோம்.

“டைட்டில் நல்லா இருக்கே?”

“வாசிப்பு அனுபவம் தான் இப்படியொரு டைட்டில் வைக்க காரணமாக இருந்தது. எனக்கு சங்க இலக்கியங்கள் பற்றி முழுமையாகத் தெரியலைன்னாலும் சங்க இலக்கியங்கள் சொல்ல வரும் கருத்துக்களை அறிந்து வைத்திருந்தேன். பத்துப்பாட்டில் தலைவன் போருக்குச் செல்லும்போது தலைவன் - தலைவி பிரிவு பற்றிப் பேசும் பகுதிதான் நெடுநல்வாடை. இது எமோஷனல் படம். கதையின் அழுத்தத்தை வெளிப்படுத்துமளவுக்கு வலுவான டைட்டில் தேவைப்பட்டது. கதையில் உள்ள அழுத்தம் தலைப்பில் இருக்கணும் என்பதால் ‘நெடுநல்வாடை’ என்று தலைப்பு வைத்தேன்.”

“கதை?”

“ஒரு கிராமம். இரண்டு குடும்பங்கள் பற்றியகதை இதில் இருக்கிறது. மகள் வழி பேரனுக்கும் தாத்தாவுக்குமான உறவையும், அந்தப் பேரனுக்கும் காதலிக்குமான உறவையும் ஒரே பாதையில் இணைத்து கமர்ஷியலுக்கான அனைத்து பார்முலாக்களையும் பயன்படுத்தி இருக்கேன்.”

“நடிகர்கள்?”

“இந்தப் படத்தில் முக்கியமாக நான்கைந்து கேரக்டர்கள் இருக்கிறார்கள். ‘பூ’ ராமு சார் தான் டைட்டிலில் முதலாவது இடம் பிடித்திருப்பார்.   நாயகனாக இளங்கோ பண்ணியிருக்கிறார். இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் மைம் கோபி வர்றார். அவரை கமிட் பண்ணும்போது அவருடைய நடிப்பு பள்ளியிலிருந்து இருபது இளைஞர்களை ஆடிஷனுக்காக அனுப்பி வைத்தார். அங்கிருந்துதான் ஹீரோவைப் பிடித்தோம். நாயகி அஞ்சலி நாயர். மிகப் பெரிய இடத்துக்கு வருமளவுக்கு அவரிடம்  திறமை இருக்கு. பத்தொன்பது வயசுதான் ஆகுது. ஆனால் நாற்பது வயசுள்ள நடிகைக்கு என்ன மெச்சூரிட்டி இருக்குமோ அப்படியொரு அனுபவ நடிப்பைக் கொடுத்தார்.”

“சமூக வலைத்தளங்களில் பாடல்கள் வைரலாகியுள்ளதே?”

“வைரமுத்து சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அனைத்துப் பாடல்களையும் அவர்தான் எழுதியுள்ளார். நான் சினிமாவுக்கு வரக் காரணமே அவர்தான். என்னுடைய பள்ளிநாட்களில் அவர்தான் எழுத்துலகைப் பொறுத்தவரை அதிகம் கவனம் ஈர்த்தவர். அவர் தொகுப்புகளை வாசிக்கவில்லை என்றால் நான் சினிமாவுக்கு வந்திருக்கமாட்டேன்.

வாய்ப்பு தேடும் சமயத்தில் 6 மாதம் அவரிடம் அலுவலக உதவியாளராக இருந்தேன். அவர் இந்தப் படத்துக்கு பாடல் எழுதுமளவுக்கு இது பெரிய பட்ஜெட் படம் இல்லை. உண்மையை சொல்லணும்னா அவர் வாங்கும் சம்பளத்தில் 25 சதவீதம் கூட நாங்கள் கொடுக்கவில்லை.  கதை அவருக்கு பிடித்திருந்ததால் சம்பளம் பற்றி பேசவில்லை. ‘கருவாத் தேவா’ பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல் பட்டியலில் இடம் பிடிக்கும். இந்தப் பாடலுக்காக தேசிய விருது நிச்சயம் கிடைக்கும்.”

“இசை?”

“ஜோஸ் ஃபிராங்க்ளின் மியூசிக் பண்ணியிருக்கிறார். இளையராஜா சார் மாதிரி இசை தேவைப்படும் கதை இது.  ஆனால் அவரிடம் பரிச்சயம் இல்லாததால் அம்முயற்சி நடக்கவில்லை. அவருடைய சாயலில் இசையமைப்பவர்களைத் தேடினோம். அப்படி வந்தவர்தான் ஜோஸ் ஃபிராங்க்ளின்”
“மற்ற டெக்னீஷியன்ஸ்?”

“ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி. கேமராமேன் ஆர்.டி.ராஜசேகரின் உதவியாளர். வினோத்தும் நானும் உதவியாளராக இருக்கும் போதே நண்பர்கள். பல வருடங்கள் ஒன்றாக டிராவல் பண்ணியதால் கதைக்கு தேவையான விஷயங்களை சிறப்பாக படமாக்க முடிந்தது. எடிட்டிங் மு.காசி விஸ்வநாதன். ஆரம்பத்தில் ஒரு எடிட்டர் கமிட் பண்ணியிருந்தோம்.

ஆனால் நான் எதிர்பார்த்த குவாலிட்டி அவரிடமிருந்து கிடைக்கவில்லை. ஏதோ தப்பு நடக்குதுன்னு புரிந்தது. காசி சார் மாதிரி ஒரு எடிட்டர் இருந்தால் நல்லா இருக்கும்னு பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாள் துணிந்து அவரிடம் பேசினேன். அவரும் கதை கேட்ட பிறகு தன் முடிவை சொல்வதாக சொன்னார். இரண்டு நாளில் அவரே அழைத்து ஓக்கே சொன்னார். அவர் வழக்கமா வாங்கும் சம்பளத்தைவிட குறைவான சம்பளத்துக்கு பண்ணிக் கொடுத்தார்.”

“உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?”

“எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தெற்கு அச்சம்பட்டி. படிச்சது மெக்கானிக்கல்  என் ஜினியரிங். வீட்லே எல்லாருக்கும் சினிமா ஆர்வம் அதிகம். நாளடைவில்  ஸ்கூல் கட் அடித்துவிட்டு சினிமா பார்க்குமளவுக்கு சினிமா என்னை ஆக்கிரமித்தது. படிப்பு முடிந்ததும் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தேன்.

சென்னையில் எங்கள் உறவினர் பாக்யம் என்பவர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தார். அவருடன் சில சமயம் படப்பிடிப்புக்கு செல்லும் போது சினிமா என்னை முழுமையாக ஈர்த்தது.  இயக்குநர்கள் காந்தி கிருஷ்ணா, சாமி, ராஜேஷ் எம்.செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். ‘பருத்திவீரன்’ மதுரை வாழ்வியலைச் சொன்னது. ‘களவாணி’ தஞ்சை வாழ்வியலைச் சொன்னது.

‘அழகி’ போன்ற படம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் வாழ்வியலைச் சொன்னது. இது நெல்லை வாழ்வியலை முழுமையா சொல்லும் படமாக இருக்கும். சமீபத்தில் டீசர் வெளியிட்டோம். ஒரு மில்லியனுக்கும் மேல் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்துக்கும் அதே வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.

எனக்காக தாங்கள் சிறிது சிறிதாக குருவி மாதிரி சேர்த்துவைத்த சேமிப்பைக் கரைத்து இந்தப் படத்தை என்னோட கல்லூரி நண்பர்கள் எடுக்கிறாங்க. வாழ்நாள் முழுக்க அவங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் மீது அவங்க வெச்சிருக்கிற நம்பிக்கையை, நான் ரசிகர்கள் மீது வெச்சிருக்கேன்.’’

- சுரேஷ்ராஜா