பேட்ட



சிறப்பான தரமான சம்பவம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பதால் வெளியீட்டுக்கு முன்பே சூப்பர்ஹிட் ஆகிவிட்டது ‘பேட்ட’.பொதுவாக ரஜினி படங்களில் பிளாஷ்பேக் மிகவும் சிறப்பாக ‘பாட்ஷா’ கணக்கில் இருக்கும். ‘பேட்ட’யிலும் அதே மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

ஒரு கல்லூரி ஹாஸ்டலில் வார்டனாக பெரிய இடத்து பரிந்துரையுடன் பணியில் சேர்கிறார் ரஜினி. அந்தக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் மீது கூடுதல் அக்கறை காட்டுவதோடு, அவனுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார்.கல்லூரியில் அராஜகம் செய்யும் லோக்கல் தாதாவின் மகனான பாபிசிம்ஹாவால் அம்மாணவனுக்கு பிரச்சினை வருகிறது. ரஜினி, பாபிசிம்ஹா & கோவை பந்தாடுகிறார்.

இதற்கு பழிவாங்க பாபிசிம்ஹா கூடுதல் ஆட்களோடு வருகிறார்.ஆனால் -பாபிசிம்ஹா கும்பலோடு தாமாகவே கலந்து வேறொரு வன்முறை கும்பல் கல்லூரிக்குள் வெறியாட்டம் ஆடுகிறது.இதற்காகவே இத்தனை நாட்கள் காத்திருந்தது மாதிரி ரஜினி விஸ்வரூபம் எடுக்கிறார்.ரஜினி ஏன் வார்டனாக சேர்ந்தார். குறிப்பிட்ட ஒரு மாணவனை மட்டும் ஏன் கண்கொத்திப் பாம்பாக பாதுகாத்தார் என்கிற கேள்விக்கு விடையளிக்கிறது பரபரப்பான இரண்டாம் பாதி திரைக்கதை.

80களின் ரஜினியை பார்த்தது போல அப்படியொரு ஃப்ரெஷ்னஸ். ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்கிற கேள்வியோடு அறிமுகமாகும் படத்தின் டைட்டிலில் தொடங்கும் விறுவிறுப்பு, ‘எண்ட் கார்டு’ போடும் வரை எக்ஸ்பிரஸ் வேகம்.

‘மரணமாஸ்’ பாட்டுக்கு ரஜினி போடும் ஸ்டெப்ஸ் வேற லெவல். ரஜினி வரும் ஒவ்வொரு பிரேமையுமே இயக்குநராக இல்லாமல், தரை லோக்கல் ரஜினி ரசிகனாக ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதிலும் கிளைமேக்ஸில் ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டுக்கு ரஜினி போடும் குத்து, தெறி மாஸ்.

‘பாட்ஷா’ ஸ்டைல் ஆக்‌ஷன் மட்டுமில்லாமல், ‘புதுக்கவிதை’ பாணி ரொமான்ஸிலும் பின்னுகிறார் சூப்பர்ஸ்டார். சிம்ரனுடனான அவரது ஈர்ப்பு, அழகான ஹைக்கூ.காளி, ‘பேட்ட’ வேலன் என்று இரண்டு கெட்டப்புகளில் ஒன்றுக்கு ஒன்று ஏகத்துக்கும் நடிப்பில் வித்தியாசம் காட்டி விருந்து வைத்திருக்கிறார். ரஜினி பேசும் சின்னச் சின்ன டயலாக்குகளில் கூட ஏதாவது பொடி வைத்திருப்பாரோ என்று கடைசிவரை திரில்லாகவே படம் பார்க்க வேண்டியிருக்கிறது.

சிம்ரனுக்கு சின்ன வேடம் என்றாலும் ‘வாலி’ காலத்து துடிப்பை காட்டுகிறார். போலவே திரிஷா. பிளாஷ்பேக்கில் ரஜினிக்கு மனைவியாக வருபவர் ஹோம்லியாக கவருகிறார். அவரது முடிவின்போது படம் பார்க்கும் பெண்கள் கண் கலங்குகிறார்கள்.வழக்கமான ரஜினி படங்களைப் போலவே காட்சிக்கு காட்சி நட்சத்திரங்கள் தூவப்பட்டிருக்கிறார்கள்.

சசிகுமார், பாபிசிம்ஹா, இயக்குநர் மகேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம், ‘முனீஸ்காந்த்’ ராம்தாஸ், கார்த்திக் சுப்புராஜின் அப்பா கஜராஜ் என்று படம் நெடுகவே ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான முகங்கள். அனைவருக்குமே சில காட்சிகள்தான் என்றாலும், கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். சனந்த்ரெட்டி - மேகா ஆகாஷ் ஜோடியின் காதல் காட்சிகள் அதிகாலை ஊட்டி குளிருக்கு கிடைத்த சூடான ஃபில்டர் காஃபி மாதிரி செம டேஸ்ட்.

மெயின் வில்லனாக வந்திருக்கும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், தமிழுக்கு நல்வரவு. அடிப்படையில் பயந்தாங்கொள்ளியாக் காட்டப்படும் அவர் நரித்தந்திரத்தில் ஹிட்லரை மிஞ்சு கிறார். அவரது பாணியிலேயே சாணக்கியத்தனமாக அவரை ரஜினி மடக்கி போட்டுத்தள்ளுவதுதான் சிறப்பான தரமான சம்பவம்.

நவாசுதீன் சித்திக்கின் மகனாக அதகள கதாபாத்திரம் விஜய்சேதுபதிக்கு. கொடூரமான வில்லனாக அறிமுகமானாலும், தன்னுடைய தனித்துவமான நடிப்பாற்றலால் ரசிகர்களிடம் விசில் வாங்குகிறார். அவருடைய கதாபாத்திரத்தை வைத்து மதவாத, பிற்போக்கு சக்திகளை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்திருக்கும் கார்த்திக் சுப்புராஜின் சமூகநீதி உணர்வுக்கு சல்யூட் அடிக்கலாம். விஜய்சேதுபதிக்கு அடுத்தடுத்து ரஜினி கொடுக்கும் ட்விஸ்ட்டுகளுக்கு கைதட்டி கைதட்டியே எலும்புமுறிவு ஏற்பட்டு விடுமளவுக்கு எதிர்பாரா திருப்பங்கள்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையிலும் மிரட்டித் தள்ளியிருக்கிறார். ஒளிப்பதிவாளரின் பெயர் திரு என்பதாலோ என்னவோ திரை முழுக்க வண்ணமய திருவிழாக் கோலம்.

முதல் பாதி வரைக்கும் ரஜினி யாராக இருப்பார் என்கிற எதிர் பார்ப்பை உருவாக்கி, இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸை சரியான காட்சிகளோடு அவிழ்த்திருப்பது திரைக்கதையின் பெரிய பலம். ரஜினியின் பிரபலமான படங்களின் ரெஃபரன்ஸ்கள் (உதாரணத்துக்கு சின்னிஜெயந்தின் ‘ஹாஆங்...’) ஐம்பதைக் கடந்த ரஜினி ரசிகர்களையும் ஆனந்தக் கூத்தாட வைக்கிறது.

‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகம் பற்றி ரசிகர்கள் கேட்கும்போதெல்லாம் ரஜினி, கண்களில் மகிழ்ச்சி பொங்க ‘ஆண்டவன் சித்தம் எப்படியோ அப்படி நடக்கும்’ என்பார். முன்னறிவிப்பே இல்லாமல் ‘பாட்ஷா-2’வாக ‘பேட்ட’ யைக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.