விஸ்வாசம்



‘தல’ பொங்கல்!

தூக்குதுரை என்கிற அஜித் குமார்அரிசி ஆலை அதிபர். ஊர் முழுக்க சொந்த பந்தங்கள். அவர்களுக்கெல்லாம் அவர்தான் ‘தல’. நின்றால் கூட்டம், நடந்தால் பேரணி என்று ஊரில் அசால்ட்டு செய்து கொண்டிருக்கிறார்.
ஊருக்கு மருத்துவ முகாம் அமைக்க வருகிறார் நயன்தாரா. ஆரம்பத்தில் தடாலடி தூக்குதுரையோடு அவருக்கு மோதல். இருப்பினும் ‘தல’யின் மாஸ் காரணமாக காதலில் விழுகிறார். கரம் பிடிக்கிறார்கள். காதல் கல்யாணத்துக்கு சாட்சியாக அழகான பெண் குழந்தை.

இப்படியே ‘லால்லலா.. லாலலால்லா’வாக இருந்தால் கதை எப்படி சூடு பிடிக்கும்?

தூக்குதுரையின் தடாலடி நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் எதிரிகளின் மூலமாக தங்கள் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று நயன்தாரா அஞ்சுகிறார். கணவர், அஹிம்சைப் பாதைக்குத் திரும்ப மறுப்பதால் ஊடல் ஏற்பட்டு அவரைப் பிரிந்து மும்பைக்கு குழந்தையோடு செல்கிறார்.

இப்படியே சில ஆண்டுகள் கழிந்த நிலையில் ஊரில் ஒரு திருவிழா. எல்லோரும் குடும்ப சமேதராக சந்தோஷமாக இருக்கும்போது, ஊர் தல அஜித் மட்டும் தனிமரமாக நிற்கிறார். “இப்படியே இருந்தா எப்படி?” என்று சொந்தபந்தங்கள் ஆலோசித்து குடும்பத்தைச் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அவர்களுக்கு மரியாதை கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துவர மும்பைக்குச் செல்கிறார் அஜித்.
அங்கே அவருக்கு கடுமையான அதிர்ச்சி.

அவரது மகள் அனிகாவைக் கொல்வதற்கு ஒரு கூட்டம் துரத்துவதை காண்கிறார். மனைவிக்காக அடிதடியைக் கைவிட திட்ட மிட்டிருந்தவர், மகளுக்காக மீண்டும் ஆக்ரோஷமாகிறார்.அஜித் - நயன்தாரா இணைந்தார்களா, மகளைக் கொல்ல முயற்சிக்கும் எதிரிகளை பந்தாடினாரா என்பதை நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியுமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா.

‘தல’ ரசிகர்களுக்கு பொங்கலோ பொங்கல். படத்தில் டைட்டிலில் தொடங்கும் அவர் களது உற்சாக மீட்டர் இறுதிவரை சூடு குறையாத வகையில் அமைந்திருக்கிறது படம். முதல் பாதி அதகளம். இரண்டாம் பாதி பாசப்போராட்டம். பொதுவாக அஜித் படங்களின் ரிலீஸ் நேரத்தில், சேவல் பண்ணை மாதிரி இருக்கும் தியேட்டர்களில் இம்முறை குடும்பங்களைக் காணமுடிகிறது.

நயன்தாராவின் அழகும், மிடுக்கும், நடிப்பும் அனைத்துத் தரப்பையும் கவர்கிறது. அஜித்தின் மகளாக வரும் அனிகாவும் சிறப்பு. பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, இதில் கார்ப்பரேட் வில்லனாக ஸ்டைல் காட்டுகிறார். ரோபோசங்கர், தம்பி ராமய்யா, யோகிபாபு, விவேக் உள்ளிட்டோர் கலகலப்பு ஏரியாவை குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றியின் ஒளிப்பதிவில் கிராமத்துப் பசுமையும், மும்பையின் மிரட்டலான ஆடம்பரமும் துல்லியமாகப் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக மழை சண்டையில் கேமராமேனின் உழைப்பு அசாத்தியமானது. திருவிழாவில் தொடங்கும் படம் என்பதால் வண்ணத்துக்கு ஆர்ட் டைரக்டர் குறையே வைக்கவில்லை. இமானின் இசையில் ‘வேட்டி வேட்டி வேட்டி கட்டு’ தியேட்டரையே எழுந்து ஆடவைக்கிறது. ‘கண்ணான கண்ணே’ பாடல், நீண்ட காலத்துக்கு ரேடியோ, டிவிகளில் ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் / பார்க்கப்படும்.

மகளுக்காக வேலைக்காரராக மாறும் அஜித், கருவுற்றிருப்பதை உணர்ந்தும் பலநாள் கனவை கசக்கிப் போடும் நயன்தாரா, ‘துரை அங்கிளைப் பார்க்கிறப்போ என்னவோ செய்யுது’ என்று உருகும் அனிகா ஆகியோரின் பாத்திரப் படைப்புகளில் இயக்குநர் சிவாவின் ஸ்பெஷல் டைரக்டோரியல் டச்சை உணரமுடிகிறது.

“குழந்தைகள் உங்கள் வழியாக உலகத்துக்கு வந்தார்கள், அவ்வளவுதான்” என்று குழந்தைகளின் மீதான நம்முடைய உரிமைகளுக்கு ஒரு வரையறை செய்திருப்பார் கவிஞர் கலீல் ஜிப்ரான். இந்தப் படம் மூலமாக அஜித் - சிவா கூட்டணியும் அதையேதான் சொல்கிறார்கள்.

குழந்தைகள் அவர்களது வாழ்க்கையை அவர்களே தீர்மானித்து வாழவேண்டும். பெற்றோரின் ஆசை, இலட்சியத்தையெல்லாம் அவர்கள் மீது திணிக்கக்கூடாது என்கிற காலத்துக்கு அவசியமான அருமையான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.