யாரு யாரை போடறது?



டைட்டில் பஞ்சம் கோலிவுட்டில் தலைவிரித்து ஆடுகிறது. ஐந்து கதாநாயகிகளுடன் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் படம் ‘ஒங்கள போடணும் சார்’. நாயகி களாக சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி நடிக்கிறார்கள். ஒளிப்புதிவு எஸ். செல்வகுமார், இசை ரெஜிமோன். தயாரிப்பு ஸிக்மா பிலிம்ஸ் மனோஜ். இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி, ஸ்ரீஜித் இயக்குகிறார்கள். போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் இருந்த இயக்குநர் ஆர்.எல்.ரவியிடம் படத்தைப் பற்றிக் கேட்டோம்...

‘‘இது திரில்லர் ஜானர். நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் இவர்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர்.

அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பதை கலகலப்பான திரில்லராக சொல்லி இருக்கிறோம்.வழக்கமாக படங்களில் ஆண்கள்தான் பெண்களை கிண்டல் கேலி செய்வதை பார்த்திருப்போம். மாறாக, இப்படத்தில் பெண்கள், ஆண்களை கிண்டல் செய்வதும் கலாய்ப்பதும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

‘ஜித்தன்’ ரமேஷ் திறமையான நடிகர். கதைக்கு பொருத்தமா இருந்ததால் அவரைச் சந்தித்து கதை சொன்னோம். தயாரிப்பாளர் மகன் என்பதால் இன்னொரு தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்தவராக எல்லா வகையிலும் படப்பிடிப்புக்கு உதவியாக இருந்தார். படத்துல மொத்தம் 7 நாயகிகள் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார்கள். நாயகிகள் அதிகமாக இருந்தாலும் கிளாமர் கதைக்கு தேவையான அளவுக்கே இருக்கும்.

கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப்படம் நிச்சயமாக ஜித்தன் ரமேஷுக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இந்தப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கும்போது ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நயன்தாரா பேசிய ‘ஒங்கள போடணும் சார்’ வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி’’ என்றார்.

- ரா