‘சர்வம் தாள மயம்’



எல்லாம் இசைமயம்!

ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜி.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு நடிப்பு என்று பக்காவான டீமோடு களமிறங்கியிருக்கும் ‘சர்வம் தாளமயம்’ எப்படி என்பதை பார்ப்போம்.மிருதங்கம் செய்பவரின் மகன் மிருதங்கம் வாசிக்க ஆசைப்பட, அவருக்கு வரும் தடைகளும் அதை அவர் எப்படி முறியடித்து தனது ஆசையை நிறைவேற்றுகிறார் என்பதும் தான் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் கதைக்கரு.

மிருதங்கம் செய்யும் குமரவேலின் மகனான ஜி.வி.பிரகாஷ் சக இளைஞர்களைப் போல கல்லூரிப் படிப்பு, காதல், என்று ஊர் சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் மிருதங்க வித்வான் நெடுமுடி வேணுவிடம் மிருதங்கம் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். அதற்காக அவரிடம் சிஷ்யராக சேரும் முயற்சியில் ஈடுபட, அவருக்கு பல எதிர்ப்புகள் வருகிறது.

அதனைத் தகர்த்து அவரிடம் சிஷ்யராக சேர்ந்தாலும், அவரது முன்னேற்றத்தைப் பிடிக்காத சிலர் அவருக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்ய, அதில் சிக்கி சின்னாபின்னமாகும் ஜி.வி.பிரகாஷின் கனவு நிறைவேறியதா, இல்லையா, என்பது மீதிக் கதை.

பீட்டர் ஜான்சன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், கதைக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். அடிப்படையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் என்பதால் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். வேம்பு ஐயர் என்ற கதாபாத்திரத்தில் மிருதங்கக் கலைஞராக நடித்திருக்கும் நெடுமுடி வேணு, நடிப்பால் மட்டுமின்றி பார்வையாலும் ரசிக்க வைக்கிறார். நாயகி அபர்ணா முரளியின் நடிப்பில் குறையொன்றுமில்லை.

ஜி.வி.பிரகாஷின் தந்தையாக நடித்திருக்கும் குமரவேல் எப்போதும் போல் யதார்த்த நடிப்பில் கவர்கிறார். வில்லனாக வரும் வினித், தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவே நடித்திருக்கும் திவ்யதர்ஷினியும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். ‘சர்வம் தாளமயம்’ படத்தின் சர்வமும் நான்தான் என நிரூபித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

படம் முழுவதும் தன் இசை மழையால் நனையவைத்துவிடுகிறார். ரவி யாதவ்வின் ஒளிப்பதிவில் மிருதங்கம் வாசிப்பவர்களின் முக பாவனையுடன் அவர்களது விரல் பாவனைகளையும் ரசிக்க முடிகிறது. மொத்தத்தில், கர்நாடக இசையை யார் வேண்டுமானாலும் கற்கலாம் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் இப்படம், கர்நாடக இசைப்பிரி யர்களுக்கும், இசையை அறியாதவர்களுக்கும் கூட பிடிக்கும் படமாக உள்ளது.