சகா



நட்பு கற்பு மாதிரி!

நட்புக்கு நல்லது கெட்டது தெரியாது. குடும்ப உறவுகளுக்குப் பாதிப்பு என்றால் பொங்குவதைப்போல சகாவுக்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்று சொல்ல வந்திருக்கும் படம்.சரணும், பாண்டியும் குழந்தைப் பருவத்திலிருந்தே நண்பர்கள். உறவு என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வேறு உறவுகள் கிடையாது. அவர்களை அரவணைத்து ஆதரிக்கும் பெண்மணி திடீரென கொலை செய்யப்படுகிறார். கொலையாளியைக் கொன்றுவிட்டு நண்பர்கள் சிறைக்குப் போகிறார்கள்.

சிறையில் குற்றவாளிகளுக்கிடையே பணத்தை முன் வைத்து பெட்டிங் நடக்கிறது. அப்போது நடக்கும் பிரச்சனையில் பாண்டியை அநியாயமாக இழக்கிறார் சரண். அதற்குக் காரணமானவனைப் பழிவாங்கத் துடிக்கும் நேரத்தில் சிறையில் புதுநட்பாக கிஷோர் கிடைக்கிறார்.

எதிர்முகாமில் ஸ்ரீராம் இருக்கிறார். இவர்கள் மூவரும் சேர்ந்து சிறையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். சிறுவர்கள் சிறையிலிருந்து தப்பினார்களா? நண்பனைக் கொன்ற பிரித்விபாண்டியராஜனை சரண் பழிவாங்கினாரா? என்பது மீதிக் கதை.

சிறுவர்கள் என்றும் சொல்லமுடியாத இளைஞர்கள் என்றும் சொல்லமுடியாத இரண்டுக்கும் இடைப்பட்ட பருவ வயதினர் கதாபாத்திரங்களுக்கு சரண், பாண்டி, கிஷோர், ராம், வில்லனாக நடித்திருக்கும் பிரித்வி ஆகிய எல்லோருமே பொருத்தமான தேர்வு.

சரணின் துடிப்பும் பாண்டி யின் நெகிழ்வும் கிஷோரின் அன்பும் ஸ்ரீராமின் ஆக்ரோஷமும் பிரித்வியின் வில்லத்தனமும் மிகச்சரியாக அமைந்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. கிஷோரின் முடிவு கலங்க வைக்கிறது. சிறுவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு சான்று.

ஆக்‌ஷன் கதைக்கு அழகிகள் தேவையில்லை என்றாலும் நீரஜா, ஆய்ரா ஆகிய இரண்டு நாயகிகள் அழகு. தீனா, தென்ன வன் ஆகியோர்  கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

நிரன் சந்தரின் ஒளிப்பதிவும், சபீரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ‘யாயும்...ஞாயும்... யா... ராகியரோ’ பாடல் தென்றலிலே மிதுந்து வந்த தேவ மங்கைப் போல் மனதை வருடிச் செல்கிறது. பாடிய நரேஷ் ஐயர், ரீட்டா ஆகியோரின் ஸ்வீட் வாய்ஸுக்காகவே பாடலை இன்னொரு முறை கேட்கலாம்.

பழைய பழிவாங்கும் கதை என்றாலும் சின்னச் சின்ன திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாகப் படத்தைக் கொண்டு சென்றிருப்பதோடு ஏராளமான இளம் நடிகர்களை நன்றாக நடிக்க வைத்து அனைவருக்கும் பாராட்டுகளைத் தேடித்தந்திருக்கும் இயக்குநர் முருகேஷ் பாராட்டுக்குரியவர்.