என்னை நானே கலாய்ச்சிக்கிட்டா.. மத்தவன் கலாய்க்க மாட்டான்!ஆர்ஜே விக்னேஷ் பேசுகிறார்

“நான் கருப்பன், குண்டன். அதனாலேதானே என்னை கூடவே வெச்சு சுத்தறீங்க? என்கூட இருந்தாதான் நீங்க பளபளன்னு தெரியமுடியும்”, கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் டிரைலர் ஆர்ஜே விக்னேஷ் பேசும் இந்த டயலாக்குக்கு ஆர்ட்ஸ் காலேஜ் ஏரியாக்களில் அலப்பறையான வரவேற்பு.விக்னேஷ், கோடம்பாக்கத்துக்கு கிடைத்திருக்கும் அரிதான திறமைசாலிகளில் ஒருவர். யூட்யூப் சேனல்களில், லட்சக்கணக்கானோர் விரும்பி ரசிக்கும் சூப்பர்ஸ்டார்.

பிஸியான ஆண்ட்ராய்ட் ஸ்டாரை ‘வண்ணத்திரை’க்காக வடபழனி முருகன் கோயில் பக்கமாக ஓரங்கட்டி பேசினோம்.
“உங்க பேக்கிரவுண்டு?”

“பேக் மட்டும்தான் இருக்கு. கிரவுண்டெல்லாம் இல்லை. திருச்சி சொந்த ஊர். வழக்கமா எல்லா தமிழ் இளைஞர்களும் படிச்சி பாழாகிற என்ஜினியரிங்தான் படிச்சேன். படிக்கிறப்பவே ஒரு பத்திரிகையில் மாணவப் பத்திரிகையாளரா பயிற்சி பெற்றேன். மீடியா மீது இருந்த காதலால் சென்னைக்கு வந்தேன். என்னோட தோற்றத்துக்கு ரேடியோதான் செட்டாகும்னு டிவி சேனலில் வேலைக்கு ட்ரை பண்ணப்போ சொன்னாங்க.

ஒவ்வொரு ரேடியோ ஸ்டேஷனுக்கும் படையெடுத்து, பெரிய ரேடியோ நிறுவனத்தில் ஆர்ஜே ஆனேன். அப்படியே நாலு வருஷம் ஓடிச்சி.புதுசா ஏதாவது செய்யலாம்னுதான் யூட்யூபில் இறங்கினேன். இந்திக்கு கரண் ஜோஹர் மாதிரி, தமிழுக்கு ஆர்.ஜே.விக்னேஷ்னு உலகமே சொல்லணும்னு எனக்கு ஆசை. இப்போதைக்கு நான் மட்டும் அப்படி சொல்லிக்கறேன்”
“சினிமா?”

“ஹிப்ஹாப் ஆதிக்குதான் நன்றி சொல்லணும். என்னோட யூ ட்யூப் அலப்பறைகளை பார்த்துட்டு, ‘மீசைய முறுக்கு’ படத்துலே ஒரு நல்ல ரோல் கொடுத்தார். சினிமாவும் நல்லாதான் இருக்கு, நிறைய காசும் தர்றாங்கன்னு தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.”
“சினிமாவிலும் சரி, யூட்யூபிலும் சரி. உங்களை நீங்களே கலாய்ச்சிக்கிறீங்களே?”

“அப்போதான் மத்தவன் கலாய்க்க மாட்டான். நான் டிவி சேனல்களில் முயற்சி பண்ணப்போ, நேரடியாகவே இந்த உருவத்துக்கு உன்னை யாரும் பார்க்க மாட்டான், ரேடியோவில் ட்ரை பண்ணுன்னு சொன்னாங்க. அப்படிதான் ரேடியோவுக்கு போய், ஓரளவுக்கு பிரபலமானேன். ஆர்.ஜே.
பாலாஜிதான், டிவி சேனல் இல்லைன்னா என்ன, நீயே சேனலா மாறுன்னு சொல்லி யூட்யூப்பில் ஈடுபட உற்சாகப்படுத்தினார். ஸ்மைல் சேட்டை, பிளாக்‌ஷீப்னு சேனல்கள் மூலமா இப்போ லட்சக்கணக்கானோருக்கு அறிமுகமாகி இருக்கேன்.

நண்பர் சுட்டி அரவிந்தும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருக்காரு. பல நூறு வீடியோஸ் பண்ணிட்டோம். யூட்யூபில் என்னோட உருவத்தை கேலி பண்ணி சில நேரம் கமெண்டு போடுவாங்க. பொதுவா என்னை நானே கலாய்ச்சிக்கிறதாலே, இவனைப் போய் என்னத்தை கலாய்க்கிறதுன்னு விட்டுடுவாங்க.”

“ரொம்ப தைரியமா எல்லாரையும் கலாய்க்கிறீங்களே?”

“சினிமா பிரபலங்க இதை சகஜமா எடுத்துக்கிறாங்க. ஆனா, அரசியல் மிரட்டல்கள்தான் கொஞ்சம் பயமுறுத்துது. மேலிடத்துலே இருந்தெல்லாம் ‘அன்பா’ கூப்பிட்டுப் பேசியிருக்காங்கன்னா பார்த்துக்கங்களேன். இப்போ எங்களைவிட தில்லா பேசுறதுக்கு ஏகப்பட்ட பேர் யூட்யூப்புக்கு வந்துட்டாங்க. தனியா ஒருத்தன் மாட்டினா, கூப்பிட்டு கும்மலாம். ஒரு கும்பலே மீம்ஸ் போட்டு கலாய்க்குதுன்னா யாரைப் புடிச்சி என்னத்தை மிரட்ட முடியும்? நாங்க கலாய்க்காத அளவுக்கு நீங்க நடந்துக்கணும் என்பதே எங்க எதிர்பார்ப்பு.”

“இப்போ சின்னத்திரையிலேயும் வர்றீங்க போலிருக்கே?”

“யூட்யூபில் புரோகிராம் பண்ண அனுபவம் டிவிக்கு உதவுது. ஆனா, சினிமா கம்ப்ளீட்டா வேற மீடியம். அதுக்கான லேங்குவேஜே வேற. டைரக்டர் என்ன கேட்குறாரோ, அதை மட்டும்தான் கொடுக்கணும். டிவி, நம்ம ஹோம் பிட்ச் மாதிரி. இம்மீடியட் ரியாக்‌ஷனும் கிடைக்குது. நேத்து ஷூட் பண்ணதை இன்னைக்கே ஒளிபரப்பிடுவாங்க. சினிமான்னா, நாம நடிச்ச படம் ரிலீஸ் ஆகுறதுக்கு மாசக்கணக்குலே காத்திருக்கணும்.”

“கார்த்தியோட ‘தேவ்’ அனுபவம்?”

“இதுதான் எனக்கு ரெண்டாவது பெரிய படம். கதை முழுக்கவே கார்த்தி சாரோட வர்றமாதிரி கேரக்டர். நான் தடுமாறும்போதெல்லாம் அவர் சில நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்தார். யூட்யூபில் இவரையெல்லாம் கலாய்ச்சிருக்கோமேன்னு தயக்கமாதான் வந்தேன். ஆனா, ரொம்ப பிரெண்ட்லியா என்னை கார்த்தி சேர்த்துக்கிட்டார்.

உக்ரைனில் படப்பிடிப்பு நடந்தப்போதான் கார்த்தி சாரோட நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைச்சது.படத்தோட முதல் பாதி முழுக்க பேசிக்கிட்டே இருப்பேன். மத்தவங்க சும்மாதான் இருப்பாங்க. இயக்குநர் ரஜத் ரவிசங்கருக்கு இதுதான் பர்ஸ்ட் படம்னு சொன்னா நம்ப முடியாது. அவ்வளவு துல்லியமா, பிரம்மாண்டமா இயக்கி இருக்கார். விஷுவல்ஸ் அள்ளும். கதை ரீதியாகவும் கவனம் ஈர்க்கும் படமா இது இருக்கும்”
“நெக்ஸ்ட்?”

“ஏகப்பட்ட கமிட்மெண்ட் இருக்கு. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக்‌ஷீப் டீம் இயக்குகிற படம், ‘களவாணி-2’, ‘மெஹந்தி சர்க்கஸ்’, ‘நட்பே துணை’, அப்புறம் சித்தார்த்தோட படம்னு சொல்லிட்டே போகலாம்.”

“எப்பவும் காமெடி ரோல்தான் நடிப்பீங்களா?”

“இப்போ அந்தமாதிரி வாய்ப்புதான் வருது. ஆனா, மணிவண்ணன் சார் மாதிரி எல்லாவித வேடங்களிலும் நடிக்கணும்னு ஆசைப்படறேன். அவர்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அரசியல்,  நையாண்டி, குணச்சித்திரம் என்று படத்துக்கு படம் பின்னியெடுத்தார். என்னைப் பொறுத்தவரை திரையில் நான் அழுதால் ரசிகர்கள் அழணும். நான் சிரித்தால் சிரிக்கணும். அந்த இடத்துக்கு வரணும் என்பதுதான் என்னுடைய டார்கெட்”
“உங்களுக்கு ஏகப்பட்ட லவ் லெட்டர் வருதாமே?”

“ஆமாம். டெய்லி கனவுலேதான் எல்லாத்தையும் படிக்கறேன். நீங்க வேற சார். என்னைச் சுத்தி எப்பவும் மொட்டப் பயலுகதான் உட்கார்ந்திருக்காங்க. எங்கிட்டிருந்து லவ்வெல்லாம் வர்றது?”

“பெரிய விஐபிகள் அழைத்துப் பாராட்டி இருக்காங்களா?”

“யூட்யூபில் எங்களை ஃபாலோ பண்ணுற நிறைய பேர், செலிப்ரிட்டி வாய்ஸில் போன் பண்ணி கலாய்ப்பாங்க. ஒருநாள் பாரதி ராஜா சார் ஆபீஸில் இருந்து போன் வந்தது. வழக்கமான கலாய்ப்போன்னு நெனைச்சப்போ, ‘பாரதிராஜா சார் நடத்துற போராட்டத்தில் கலந்துக்கணும்’னு சொன்னாங்க. இமயம் நமக்குக் கொடுத்த அங்கீகாரமா அதை எடுத்துக்கிட்டேன்.

அதேமாதிரி ரஜினி சார் வாய்ஸில் ஒரு கால். என்னாலே நம்பவே முடியலை. அது ரஜினி சார்தான். ‘சார், நிஜமாவே நீங்கதானா?’ன்னு திரும்பத் திரும்பக் கேட்டுக்கிட்டிருந்தேன். அதனாலேயோ என்னவோ, என்னை நேரிலேயே கூப்பிட்டுப் பேசினார். இன்டர்நெட், யூட்யூப், மீம்ஸ்-னு நிறைய விஷயங்களைப் பத்தி எங்கிட்டே பேசி தன்னை அப்டேட் பண்ணிக்கிட்டார் அப்படின்னு எல்லார் கிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்கேன். ஆக்சுவலா, அவருக்கு எல்லாமே தெரியும். ஆனா, தெரியாதமாதிரி கேட்டுக்கிட்டார்னுதான் நெனைக்கிறேன்.”

“பத்திரிகை, ரேடியோ, யூட்யூப், டிவி, சினிமா தவிர்த்து?”

“தமிழ்நாடு முழுக்க நாடகம் போடுறோம் சார். இப்போ கொஞ்ச காலமாதான். ‘நவயுக ரத்தக்கண்ணீர்’ என்கிற எங்க நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்குது. பழைய ‘ரத்தக்கண்ணீர்’ பாணியிலே லேட்டஸ்ட் விஷயங்களைச் சேர்த்து பண்ணுறோம். இதுவரை பதினஞ்சுக்கும் மேற்பட்ட முறை மேடையேறிட்டோம். கார்த்தி, சிவகார்த்திகேயன், ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நாடகத்தை நேரில் பார்த்து பாராட்டித் தள்ளிட்டாங்க.”

- சுரேஷ்ராஜா