மின்னுவதெல்லாம் பொன்தான்-19



don’t believe in comebacks!

இரவு நேர பேருந்துப் பயணத்தில், “உனக்கென இருப்பேன்... உயிரையும் கொடுப்பேன்...” என்கிற பாடல் ஒலித்தால் கல்லாத மனமும் கரையாதோ?
ஒரு மெக்கானிக் பையன், “தொட்டு தொட்டு என்னை வெற்றுகளி மண்ணை சிற்பமாக யார் செய்ததோ” என காதலியை பார்த்துப் பாடுகிற அந்தப் பாடல், காதலில் விழுந்துக் கிடக்கிறவனின் மனவோட்டத்தை அச்சு அசலாகக் கொண்டு வந்தது.

‘காதல்’ படத்தில் மறைந்த மகத்தான கவிஞன் நா.முத்துக்குமார் எழுதிய எட்டு அருமையான பாடல்களிலும், இசையின் அத்தனை பரிமாணங்களையும் இறக்கி வைத்த இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர். இத்தனைக்கும் ‘காதல்’தான் அவருக்கு முதல் படமே. ‘காதல்’ படத்தின் பாடல்களை இப்போதும் கேட்டுப் பாருங்கள். முப்பது வயது இளைஞன் இசைத்த இசையா இது என்று ஆச்சரியப்படுவீர்கள்.

இசைக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர்தான் ஸ்ரீதர். இளையராஜாவின் மாய இசை அவரை இசைத் துறை நோக்கி நகர்த்தியது. அவர் குழுவில் எப்படியாவது இணைந்துவிட வேண்டும், தானும் இளையராஜா மாதிரி ஆக வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் லட்சியமாக இருந்தது.

பத்தாம் வகுப்பு முடித்து விட்டு பியானோ கற்றார். மேற்கத்திய இசை மீது ஆர்வம் வந்தது. அந்த நேரத்தில் ‘ரோஜா’ படம் வெளிவந்து, பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க, ஸ்ரீதரின் கவனம் ரகுமான் பக்கம் திரும்பியது.

‘மரகதமணி’, ‘மணிஷர்மா’ ஆகியோரிடம் பணியாற்றி அனுபவம் பெற்று, அதன் பிறகே ஏ.ஆர்.ரகுமானிடம் அவரால் வந்து சேர முடிந்தது. ரகுமானிடம் மூன்று வருடங்களில் 15 படங்களுக்கு கீ போர்ட் பிளேயராக தனது பங்களிப்பை கொடுத்தார்.

‘பாய்ஸ்’ படத்தில் பணியாற்றியபோது இயக்குனர் ஷங்கரின் அறிமுகம் கிடைத்தது. ஸ்ரீதரின் திறமைய கவனித்திருந்த ஷங்கர், தனது தயாரிப்பான ‘காதல்’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக்கினார்.ஷங்கர் ஒருவரை அறிமுகப்படுத்தினால் அவர் மிகத் திறமைசாலியாகத்தானே இருக்க வேண்டும்?

அப்படிதான் காதல் படத்திற்கு இசை அமைத்தார் ஸ்ரீதர். அடுத்த ரகுமான் என்றே அனைவரும் கணித்தார்கள். பாடல்கள் அனைத்தும் ஹிட் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் படத்தின் பின்னணி இசையயும் பெரிதாக பேசப்பட்டது. பரத், சந்தியாவை பைக்கில் பின் தொடரும் காட்சிளில் எல்லாம் தனதனதனதனதன... என்றே பின்னணி இசை கோர்த்திருப்பார். அற்புதமாக இருந்தது அது.

‘அன்னக்கிளி’ வந்தபோது அத்தனை பேரும், “யார் இந்த புதுப்பையன்?” என்று இளையராஜாவை ஆச்சரியமாக நோக்கியது மாதிரியேதான், ‘காதல்’ வந்தபோது ஜோஸ்வா ஸ்ரீதரையும் பார்த்தார்கள்.‘காதல்’ படம் வெளிவந்து பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஸ்ரீதரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான புயல் வீசிக் கொண்டிருந்தது. அவருக்கு வந்த இரண்டாவது காதலும், அதனால் வந்த பிரச்சினைகளும் அவரை துரத்தித் துரத்தி அடித்தன.

பெரிய பெரிய பட வாய்ப்புகள் வரிசைகட்டி நின்றபோது அவர் மனரீதியான பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்தார். சத்தமே இல்லாமல் வாய்ப்புகள் கைமாறி போய்க்கொண்டே இருந்தன. சினிமா வாய்ப்பு என்பது மெட்ரோ ரயில் மாதிரி. பயணிகள் ஏறுகிறார்களோ இல்லையோ, அது பாட்டுக்கும் போய்க்கொண்டே இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமே ஜோஸ்வா ஸ்ரீதர் தவறவிட்டது கிட்டத்தட்ட பதினைந்து பெரிய வாய்ப்புகள் என்கிறார்கள்.

தன் பிரச்சினைகளை முடித்துக்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நாட்டம் செலுத்தத் தொடங்கினார். அவருக்கு கிடைத்தப் படங்கள் பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள்தான். அவை வெளியான சத்தமே இல்லாமல் போனது.

‘காதல்’ இயக்குநர் பாலாஜி சக்திவேலின் அடுத்த படமான ‘கல்லூரி’க்கும் ஜோஸ்வா ஸ்ரீதர்தான் இசை. முந்தையப் படம் மாதிரி இது பெரிய வெற்றியை பெறாமல் போனதால் பாடல்களும் கவனிக்கப்படாமல் போனது.இதன் பிறகு கன்னடத்தில் அவருக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் வந்துக் கொண்டிருந்தன. தமிழில் அவருக்குக் கிடைத்ததெல்லாம் ரொம்பவும் சுமாரான படங்களே.

தமிழில் அவ்வப்போது ‘வெப்பம்’ மாதிரி படங்களிலும் மிகச்சிறப்பான இசையைக் கொடுக்க ஜோஸ்வா ஸ்ரீதர் தவறவில்லை. “மழை வரும் அறிகுறி விழிகளில் தெரியுதே” மாதிரி பாடல்களில் பழைய ‘காதல்’ ஸ்ரீதர் தெரிந்தார்.  ஆனாலும் ஏனோ, அவரை பயன்படுத்திக்கொள்ள இயக்குநர்கள் தவறிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில் கூட ‘ஒரு குப்பைக்கதை’ படத்தின் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருந்தார்.

இப்போது ஜோஸ்வா ஸ்ரீதர், அவருடைய பழையப் பிரச்சினைகளிலிருந்து முற்றிலுமாக மீண்டு விட்டார். ஆனால், இசையில் அவர் மீண்டும் வரவில்லை. வரவேண்டும். அவருக்கான இடம் காலியாகவே இருக்கிறது.முன்பொருமுறை அவர் ஆங்கில ஏடு ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் சொன்னார்.

“I don’t believe in comebacks”அவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அவருக்கு ஒரு comeback movie அமைய வேண்டுமென்று இசை ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்