கல்யாணத்துக்கு வீட்லே ஸ்டெப் எடுக்க மாட்டேங்கிறாங்க...



ஜெய் ஏக்கம்!

தன் படம் சார்ந்த விழாக்கள், பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் போன்ற பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத ஜெய், ‘வண்ணத்திரை’க்காக பிரத்யேகமாக நம்மை சந்தித்தார். சினிமா, காதல், திருமணம் என்று எல்லா விஷயங்களைக் குறித்தும் மனம் திறந்து பேசினார். இனி ஓவர் டூ ஜெய்...“நீங்கள் ஏன் உங்கள் பட நிகழ்ச்சிகளில்கூட கலந்து கொள்வதில்லை?”

“நான் கூச்ச சுபாவம் உள்ளவன். பொது மேடைகளில் பேசுவது என்றால் பயமும் கூச்சமும் கூடுதலாக ஒட்டிக் கொள்ளும். ஏதாவது ஏடாகூடமா பேசி விடுவேனோ என்கிற பயஉணர்வு எப்போதும் இருக்கும். அதுக்காகவே பொதுவான சந்திப்புகளைத் தவிர்த்து விடுவேன்.

‘ஆனால் இந்த விஷயத்தை நீ நினைப்பது போல் யாரும் இப்படி நினைக்க மாட்டார்கள், தவறாகப் புரிந்து கொள்வார்கள்’ என்று நண்பர்கள் கூறினார்கள். ‘வளர்ந்து வரும்போது இதற்கெல்லாம் இடம் தரக்கூடாது’ என்று அறிவுரை கூறினார்கள். அது நல்லதாகத் தோன்றியதால் தனி நபர் சந்திப்பாக மீடியாக்களிடம் பேசி வருகிறேன்.”

“இப்போது நடித்து வரும் படங்கள்?”

“வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’, ‘நீயா?-2’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாகத் தயாராக இருக்கின்றன. மம்முட்டி சாருடன் ஒரு மலையாளப் படம், ‘போக்கிரி ராஜா-1’, கோபி நயினார் இயக்கும் படத்துல புட் ஃபால் ப்ளேயரா வர்றேன். அந்தப் படத்துக்காக மூணு மாசம் கோச்சிங் போனேன். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம். அடிப்படையில் ஆண்ட்ரூ கிராபிக்ஸ் நிபுணர் என்பதால் ரசிகர்கள் வியக்கும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும்.”

“வெங்கட்பிரபு படம்னாலே நீங்க நிச்சயம் இருப்பீங்க...”“வெங்கட்பிரபு படம் என்றாலே அது எங்க படம் என்கிற உணர்வு படத்துல உள்ள எல்லாருக்குள்ளும் இருக்கும். அந்தப் படம் ஒரு டீம் ஒர்க் என்று உணர வைக்கும். ‘பார்ட்டி’ யில் ஹீரோவாகவும் இல்லாமல் வில்லனாகவும் இல்லாமல்  வித்தியாசமான வேடம் பண்றேன். வெங்கட்பிரபு கூப்பிடும்போது சீரியசான ரோல் என்று கூப்பிட்டார். படப்பிடிப்பின்போது காமெடி போலாகி விட்டது. இதில் எனக்கு ஒரு டீம் இருக்கும். அதில் ரெஜினா, சஞ்சிதா இருப்பார்கள். மற்றபடி வெங்கட் பிரபுவின் டிரேட் மார்க் படமாக இருக்கும்”

“பாம்பு படத்துலே பாம்புக்குத் தானே வேலை. அதுல நீங்க எப்படி ஹீரோ?”

“எனக்கு முக்கியத்துவம் இருக்காது என்பதை பாம்பு மாதிரி சுத்தி வளைத்துப் பேசுறீங்க என்பது புரியுது. கதைப்படி பாம்புக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அது ஒரு தனி அடுக்கு போல் இருக்கும். நாயகனா எனக்கு உரிய முக்கியத்துவமும் இருக்கும். டபுள் ஆக்‌ஷனில் நடிக்கிறேன். ஃப்ளாஷ்பேக் எல்லாம் உண்டு”

“மம்முட்டியுடன் நடித்த அனுபவம்?”

“ஸ்வீட் எக்ஸ்பிரியன்ஸ். மம்மூக்காவுடன் நடித்தது பிரேம்ஜி, வைபவ் என்று எங்க பசங்க கூட நடித்த மாதிரிதான் இருந்தது. சார் மிகப் பெரிய லெஜண்ட். அவரை அநாவசியமா தொந்தரவு பண்ணக்கூடாது என்று கொஞ்சம் ஒதுங்கியே இருப்பேன். அவர் கேஷுவலா பேசி நட்பாகிவிடுவார். ‘இந்தப் படத்துக்குப் பிறகு மலையாளத்தில் நீங்கள் பிஸியாகிவிடுவீர்கள்’ என்று வாழ்த்தினார். மம்மூக்கா படம் அங்குள்ள ரசிகர்களுக்கு ‘பேட்ட’ மாதிரி.

அது மலையாளப் படமாக இருந்தாலும் எனக்குத் தமிழ்ப்படம் போலத்தான் இருந்தது. கதைப்படி நான் தமிழில் பேசி நடிக்கிறேன். மம்முட்டி சாரும் நானும்  மதுரையிலிருந்து கேரளாவுக்கு ஷிப்ட்டான கதாபாத்திரங்களில் நடிக்கிறோம். படத்தில் அவரது தம்பியாக வர்றேன். மலையாளத் திரையுலகம் நம்மிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறது. அவர்கள் வேலை பார்க்கும் முறை வேறு மாதிரியாக இருக்கிறது.

‘பகவதி’யில் விஜய் சாருடன் தம்பியாக நடித்தது போல சில கால இடைவெளிக்குப் பின்  மம்முட்டி சாருக்குத் தம்பியாக நடித்ததில் மகிழ்ச்சி. இடையில் காலம் மட்டுமல்ல... நானும் மாறியிருக்கிறேன்.”

“மீண்டும் விஜய் தம்பியாக நடிக்க வாய்ப்பு வந்தால்?”

“ரொம்ப சந்தோஷம். ‘பகவதி’ என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை கொடுத்த படம். அந்தப் படத்தோட ரீச் அப்படி. அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் நானே விஜய் சாரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டேன்.  ஏன்னா அந்தப் படத்துக்குப் பிறகு நாலைந்து வருடங்கள் எந்தப் படமும் பண்ணவில்லை. விஜய் சார்தான் ‘தொடர்ந்து நீ எங்கூடவே பண்ணினா உன் மீது தம்பி ரோலுக்குதான் செட்டாவார் என்று முத்திரை வீழ்ந்துவிடும். ஹீரோவா பண்ணு. நல்லா வருவே...’ என்று உற்சாகப்படுத்தினார். அதன்பிறகு நடித்த படம்தான் ‘சென்னை 600028’. அதுதான் எனக்கு விசிட்டிங் கார்டாவே அமைஞ்சது.”

“ஏன் நீங்கள் இருவரில் ஒருவராக, பலரில் ஒருவராக நடிக்கிறீர்கள்? தனி கதாநாயகனாக வர விருப்பமில்லையா?”

“பாலிவுட்டில் பல நடிகர்கள் இணைந்து நடிப்பது சகஜம். அது பட வெற்றிக்கு உதவும் என்றே இணைகிறார்கள். ‘சென்னை 600028’ முதலே இப்படி டீமாக இணைவது, வெற்றி பெறுவது நடந்து வருகிறது. அப்போது யாரையும் முதன்மைப்படுத்தாமல் பட வெற்றி என்பதே எங்கள் மனதில் இருக்கும். ‘சுப்ரமணியபுரம்’ முதல் ‘ராஜாராணி’ வரை இதே போக்கில் வெற்றியும் கிடைத்தது. அதே நேரத்தில் நான் தனியாகவும் வளரவேண்டும், உயர வேண்டும் என்கிற முனைப்பும் இருக்கிறது. வெளிவர இருக்கிற படங்கள் அதை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்”

“தனி நாயகன் வாய்ப்பாக வந்த ‘வாலு’ பட வாய்ப்பைக் கூட நழுவ விட்டு விட்டீர்களே..?”

“அந்தக் கதையை இயக்குநர் என்னிடம் தான் முதலில் சொல்லியிருந்தார். அவர் என் நண்பர்தான். சிம்புவிடம் சென்றால் அதே கதை வேறு ஒரு நிலைக்கு உயரும் என்று நினைத்தார். நானும் விட்டு விட்டேன்.”“அட்லியோட ‘ராஜா ராணி’ போன்ற படங்களில் காதல் நாயகனாக வந்த நீங்க, பிறகு ‘ஜருகண்டி’ போல படங்களுக்குத் தாவியது ஏன்?”

“அதுக்கு முன்னாடியே ‘வல்லினம்’தான் என்னை ஆக்‌ஷன் பாதைக்கு மாற்றியது. அதன் பிறகு பல மாதிரியாக படங்கள் வந்தன. எல்லாப் படத்தின் போதும் இது தான் சிறந்தது என்று நினைத்து வேலை செய்கிறேன். அதன் முடிவு எப்படியோ போய் முடிகிறது. இப்போதும் ‘சுப்ரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’ படங்கள் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பாகின்றன.

அப்போதெல்லாம்  பலரும் ‘சுப்ரமணியபுரம்’ இரண்டாம் பாகம் எடுக்கலாமே என்று கேட்பதுண்டு. நானும் இது பற்றி சசிகுமார் சாரிடம் உங்கள் இயக்கத்தில்  மீண்டும் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். ‘அப்படிப்பட்ட வாய்ப்பு தானாக அமைய வேண்டும். காத்திருப்போம்’ என்று சொல்லியுள்ளார். இப்போது என் கைவசம் உள்ள அனைத்துப் படங்களும் என் மீதான கவனத்தை குவிக்கும்படியாக இருக்கும்.”

“கிசுகிசுக்களில் அதிகம் அடிபடும் நீங்கள் அதுபற்றிக் கவலைப் படுவதுண்டா?”

“ஆரம்பத்தில் ஒரு மாதிரியாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினர், நண்பர்கள் என்னைப் புரிந்து கொண்டு விட்டார்கள் என்று தெரிந்ததும் நிம்மதி. இப்போதெல்லாம் கிசுகிசு பற்றிக் கவலைப்படுவதில்லை.”“காதல் கிசுகிசுக்களில் ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசப்
பட்டீர்கள். இப்போது எப்படி உள்ளது அந்த  நட்பும் உறவும்?”

“அவர் தெலுங்கில் பிஸியாக இருக்கிறார். நேரில் சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டன. போன் தொடர்பும் இல்லை. ஆனால் எங்கள் இருவரையும் இணைத்து வருகிற கிசுகிசு மட்டும் புரியாத புதிராக இருக்கிறது.”

“உங்கள் திருமணம் காதல் திருமணமா?”

“அதைப்பத்தி இதுவரைக்கும் எனக்கே தெரியலை. நான் விரும்புகிற மாதிரியான  பெண் கிடைத்தால் நிச்சயம் காதல் திருமணம்தான். அவர் நடிகையா வெளிநபரா என்று தெரியாது. இல்லையேல் வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்துகொள்வேன். ஆனால் வீட்லே அப்படி ஸ்டெப் எடுப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியலை.”

“தேவா, சபேஷ்-முரளி, காந்த் தேவா... என்று இசைப்பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்துள்ளீர்கள்.

உங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டா?”

“இசைக் குடும்பதில் பிறந்தவன் என்பதால் இசை என்பது என் ரத்தத்தோடு கலந்துள்ளது. நடிகனாக வருவதற்கு முன்  அண்ணாவுடன் வேலை செய்துள்ளேன். அடிப்படையில் நான் கிடாரிஸ்ட். இப்போது நடிகனாக பிஸியாகிவிட்டதால் இசையமைப்பதைப் பற்றி யோசிக்கவில்லை. இன்னும் இரண்டு வருடம் கழித்து என்னை இசை யமைப்பாளனாக பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கு.”

“ரேஸர் ஜெய்யை பார்க்கமுடியவில்லையே?”

“சின்ன வயதிலிருந்து எனக்கு பைக் மீதும் ரேஸிங் மீதும் பிரியம் அதிகம். பொதுவா ரேஸிங் ரிஸ்க்கான விஷயம். பந்தய களத்தில் ரேஸிங் எளிது. அங்கு போட்டியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும். வண்டி தலைகீழ் வீழ்ந்தாலும் வீரர்களுக்கு ஒன்றும் ஆகாது.  ஆனால் நம்ம ரோட்ல ஓட்டுவது என்பது கஷ்டம். ரோட்ல ரேஸ் போவது என்பது... விளையாட்டு வினையாகிவிடும்.”

- சுரேஷ்ராஜா