சத்ரு



குடும்பத்தைக் காப்பாற்ற போராடும் போலீஸ்!

தமிழ் சினிமா இருக்கும் வரை போலீஸ் கதையும் இருந்தே தீரும் என்கிற வழக்கத்துக்கு ஏற்ப இன்னொரு போலீஸ் கதை. வழக்கமாக போலீஸ் கதையில் இருக்கும் அதே விறுவிறுப்பு, இந்தப் படத்திலும் இருக்கிறது.நேர்மையான சப்-இன்ஸ்பெக்டர் கதிர். உயரதிகாரி சொன்னாலும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்ய மாட்டார். இவருக்கு ஓர் அழகான காதலி சிருஷ்டி டாங்கே. அப்பா, அண்ணா, அண்ணி, குழந்தை என அழகான குடும்பமும் இருக்கிறது. இவரின் கடமைக்கு சவால் விடும் வகையில் ஒரு வழக்கு வருகிறது.

வில்லன் லகுபரன் தலைமையிலான கும்பல் பெரிய பணக்கார வீட்டுக் குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்க முயல்கிறது. ஒரு குழந்தையைக் கடத்தி ஐந்து கோடி பணம் கேட்கிறார்கள். குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் அந்த கும்பலில் உள்ள ஒருவனைக் கொன்று விட்டு குழந்தையையும் பணத்தையும் மீட்டு வருகிறார் கதிர்.தங்கள் நண்பனை கதிர் கொன்றதால், அவரின் குடும்ப உறுப்பினர்களை 24 மணி நேரத்திற்குள் கொல்ல திட்டமிடுகிறார் வில்லன் லகுபரன். இந்த சவாலில் வில்லனிடமிருந்து குடும்பத்தை கதிர் காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.

கம்பீரம், நேர்மை என மிடுக்கான போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார் கதிர். பன்ச் டயலாக் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரியாகவும் அதே சமயம் கண்ணியம் தவறாத அதிகாரியாகவும் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார்.‘ராட்டினம்’ படத்தில் நாயகனாக நடித்த லகுபரன் தான் இந்தப்படத்தில் வில்லன். பழிவாங்கத் துடிக்கும் அவரின் கண்கள், நண்பன் மீது பாசம் என நடிப்பில் தெறிக்க விட்டுள்ளார். இனி லகுபரனுக்கு வில்லன் வேடங்கள் அதிகம் வந்தாலும் ஆச்சரியமில்லை.

கதாநாயகி என்று ஒருவர் இருக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக வந்து போகிறார் சிருஷ்டி டாங்கே. மாரிமுத்து, பவன், நீலிமா ராணி, சுஜா வாருணி ஆகியோர் தங்கள் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.அம்ரீஷ், சூர்ய பிரசாத் இருவரின் இசை படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் பிரமாதம். போலீஸ் குடும்பத்தை வில்லன் மிரட்டுவது என வழக்கமான டெம்ப்ளேட் கதையாக இருந்தாலும் பரபர திரைக் கதையில் கவனிக்க வைத்துள்ளார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டன்.