டீச்சர் குடும்பத்திலிருந்து ஒரு ஹீரோயின்!



அக்கட தேசத்திலிருந்து வந்திருக்கும் அடுத்த அழகி  பல்லவி.  ‘தாதா 87’ படத்தில் என்ட்ரி கொடுத்திருப்பவர். ‘‘இவ்வளவு சீக்கிரத்தில் நடிகையாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுமளவுக்கு என்னுடைய சினிமா பயணம் இருக்கும்’’ என்று நம்பிக்கையுடன் பேச ஆரம்பிக்கிறார். ‘வண்ணத்திரை’ இதழுக்காக அவர் கொடுத்த சிறப்பு நேர்காணல்...

“ஸ்ரீபல்லவியின் பயோடேட்டா?”

“பிறந்தது, வளர்ந்தது விசாகப்பட்டிணம். அப்பா பிரபுதாஸ், கன்ஸ்ட்ரக்‌ஷன் பிசினஸ் பண்றார். அம்மா வினயசொரூப ராணி, உள்ளூர் பள்ளியில் வேலை பார்க்கிறார். தம்பி பிரசன்னகுமார், தங்கை மானசா  இருவரும் டுவின்ஸ். ஊர்லே எங்கள் குடும்பத்தையே டீச்சர்ஸ் குடும்பம்னு சொல்வாங்க. தங்கச்சி டீச்சர் டிரைனிங் முடித்து வேலைக்காகக் காத்திருக்கிறார். தம்பி டிராயிங் டீச்சர். தாத்தா தலைமை ஆசிரியர். அதனால் டீச்சர்ஸ் பின்னணியிலிருந்து மாற நினைத்து சிவில் என்ஜினியரிங் படித்தேன்.

படிக்கும்போது நடனத்தின் மீது ஆர்வம் வந்தது. தொடர்ந்து நடனத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். என்னுடைய நடனச் சிறப்பை வெளிப்படுத்த பள்ளி மேடை உதவியாக இருந்தது. ஒரு முறை ஸ்கூலில் நடைபெற்ற கலைவிழாவில் என்னுடைய நடனத்தைப் பார்த்த ஒரு உதவி இயக்குநர் நடிக்க ஆஃபர் கொடுத்தார். ஆரம்பத்தில் ஏதோ காமெடி பண்ணுகிறார் என்று நினைத்தேன். தொடர்ந்து அவர் ஃபாலோ பண்ணியதால் சரி என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று ஐதராபாத்துக்கு போனேன்.  ‘நேனோரகம்’ என்ற படம்தான் நான் நடித்த முதல் சினிமா.

படத்துல சரத்குமார் சார் மகளாக நடித்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. அப்பா, அம்மாவுக்கு நான் சினிமாவில் இருப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்தச் சமயத்தில் என்னுடைய தாய்மாமா சீனிவாஸ் என்னுடைய லட்சியத்துக்கு துணை நின்றதால் என்னால் சினிமாவுக்குள் வரமுடிந்தது.”

“தமிழுக்கு எப்படி வந்தீங்க?”

“தயாரிப்பு நிர்வாகியான சிரஞ்சீவி சார் மூலமாதான் ‘தாதா 87’ வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அறிமுகமாக வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்றாக இருந்ததால் யோசிக்காமல் ஃபிளைட் பிடித்து சென்னை வந்தேன். இயக்குநர் விஜய்  சொன்ன கதை பிடித்திருந்தது. கதை சொல்லும்போதே தமிழில் அறிமுகமாவதற்கு இதுதான் சரியான படம் என்றும், இந்தப் படத்தில் நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்பதாலும் உடனே ஓக்கே சொன்னேன்.

என்னைப் பொறுத்தவரை எண்ணிக்கைக்காக நடிக்காமல் ஒரு படம் மூலம் சமூகக் கருத்துக்கள் சொல்லும்போது மனநிறைவு ஏற்பட வேண்டும். ‘தாதா 87’ படத்தில் திருநங்கைகளின் கஷ்டங்களைக் காட்சிப்படுத்தி யிருப்பார்கள். இந்தியாவில் ஆண், பெண்ணுக்கு ஏட்டளவிலாவது மதிப்பு, மரியாதை இருக்கு. ஆனால் திருநங்கைகள் தங்களுக்கான மரியாதைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதையொட்டியே ‘தாதா 87’ படம் இருந்ததால் கேரக்டர் பற்றி கவலைப்படாமல் நடித்தேன்.”

“படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்தது?”

“ஆரம்பத்தில் பயமாக இருந்தது. இயக்குநருக்கு தெலுங்கு தெரிந்ததால் என்னால் சமாளிக்க முடிந்தது. ‘உங்களிடம் நடிப்பு திறமை இருக்கு பயப்பட வேண்டாம்’ என்று உற்சாகப்படுத்தினார். லொகேஷனில் எல்லாரும் தமிழில் பேசும் போது திரு திருன்னு முழிப்பேன். கொஞ்ச நாளைக்குள் தமிழ் மொழியைப் புரிந்துகொண்டு தட்டுத் தடுமாறிப் பேச ஆரம்பித்துவிட்டேன்.

தமிழ் மக்களின் அன்பு நெகிழ வைத்தது. படத்தில் மேக்கப் இல்லாமல்தான் நடித்தேன். ‘வித் அவுட் மேக்கப், பையன் கேரக்டர், சிகரெட் பிடிக்கணும், என்று இயக்குநர் சில கண்டிஷன் போட்டார். கண்டிஷன் போடும்போதே இந்தப் படம் கண்டிப்பா பெயர் வாங்கித் தரும் என்று நினைத்தேன். மேக்கப் இல்லை என்றாலும் கேமராமேன் என்னை அழகாகக் காண்பித்திருந்தார்.

சிலிண்டர் சுமக்கும் காட்சி சவாலாக இருந்தது. அந்த சிலிண்டரில் பாதி கேஸ் இருந்தது. அதை தூக்கும்போது வலி பின்னியெடுத்தது. தோள் பட்டை வீங்கி விட்டது. இரண்டு குடங்களை இரண்டு மாடிகள் சுமக்கும் காட்சியிலும் பெண்டு கழண்டுவிட்டது. ஷேவிங் சீன்ல பெரிசா கஷ்டம் தெரியல. அசால்ட்டா பண்ணிட்டேன். ஆனால் சிகரெட் பிடிக்கும் சீன்ல கஷ்டப்பட்டேன். முப்பது சிகரெட்டாவது ஊதித் தள்ளியிருப்பேன். அந்தக் காட்சியில் நடித்தபோது இரண்டு நாள் தலை வலியால் அவஸ்தைப்பட்டேன்.

கூவாகத்துல எடுத்த போர்ஷன் கொஞ்சம் ‘டப்’ஃபாக இருந்தது. லைவ்வாக எடுத்தார்கள். அங்கிருந்தவங்க எல்லாருமே திருநங்கைகள். நான் மட்டுமே பெண். என்னையும் திருநங்கை என்று நினைத்து பத்துப் பேர் பின்னாடியே வந்தார்கள்.”

“நடிக்க விரும்பும் ரோல்?”

“பெரிய படமா இருந்தாலும் சரி, சின்ன படமா இருந்தாலும் சரி, நடிப்புக்கு ஸ்கோப் இருக்கணும். ‘தாதா 87’ மாதிரியான படங்கள் பத்து படங்களுக்குப் பிறகு பண்ண வேண்டிய படம் அல்லது கிடைத்திருக்க வேண்டிய படம். அதேபோல் எல்லா படங்களிலும் எதிர்பார்க்க முடியாது. நான் நடிக்கும் படங்களில் எனக்குன்னு சின்னதா ஸ்பேஸ் இருந்தால் போதும். மற்றபடி பெரிய வேடம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.”

“கனவுல வரும் ஹீரோ யார்?”

“கனவில் எந்த ஹீரோவும் வந்து செல்வதில்லை. நிஜத்தில்தான் விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்னு நிறைய பேர் மனதில் மாறி மாறி வந்து போகிறார்கள். விரைவில் இரண்டு பெரிய இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகவுள்ளேன். அது நடக்கும் பட்சத்தில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது தெலுங்கில் ‘நீவாலே நேனுன்னா’ படம் ரிலீஸுக்கு ரெடியாகியுள்ளது.

டீஸருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அன்று சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அம்மா இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியா நடிக்கணும்னு சொல்லியிருக்கிறார். அம்மாவின் ஆசையும் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

“ஓவியா நடிச்ச ‘90 எம்.எல்.’ போன்ற படம் வந்தால் பண்ணுவீங்களா?”

“ம்ஹூம். ‘96’ மாதிரியான படங்கள் வந்தால் பண்ணுவேன். ஆனால் ‘90 எம்.எல்.’ போன்ற  படம் வந்தால் பண்ணமாட்டேன். நான் நடிக்கும் படங்களில் என்னுடைய கேரக்டரை ஆடியன்ஸ் ஏற்கவேண்டும். அப்படின்னா எனக்கு அந்தக் கேரக்டர் பிடித்திருக்கணும். என்னைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் என் குடும்பத்துடன் படம் பார்க்கும் போது கெளரவமாக இருக்கணும். சினிமாவின் தரமான பட வரிசையில் என்னுடைய படமும் இருக்கணும். மற்றபடி ‘90 எம்.எல்.’ படம் பற்றி கருத்து சொல்ல விருப்பமில்லை.”

“உங்க ஊர்க்காரர் ரெட்டியின் கருத்துகள் சரியா?”

“எனக்கு அந்த மாதிரி ஒரு சம்பவமும் நடக்கவில்லை. நடக்குமளவுக்கு இடமும் கொடுக்கமாட்டேன். ‘தாதா 87’ எனக்கு தமிழில் முதல் படம். அந்தப் படத்தைப் பொறுத்தவரை அதன் இயக்குநர் படத்தில் என்னுடைய நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில்தான் கவனமாக இருந்தார். தயாரிப்பாளர் பேசவில்லை. சினிமாவில் இப்படியும் கலைஞர்கள்  இருக்கிறார்கள். எனக்கு நடிப்பு பேஷன். அதுமாதிரி என்னுடைய முதல் படத்தில் பணியாற்றியவர்கள் அவரவரின் பேஷன் எதுவோ அதில் கவனம் செலுத்தினார்கள்.”“சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதி பற்றி?”

“மற்றவர்கள் பற்றி பேசுவதற்கு முன் என்னைப் பற்றியே சொல்ல வேண்டும். நான் முகநூலில் உறுப்பினர் இல்லை. ஆனால் என்னுடைய போட்டோவை வைத்து போலியான முகநூல் இயங்குகிறது. பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பது தவறில்லை. ஆனால் உங்களுடன் தொடர்பில் இருப்பவர் ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உண்மையா, பொய்யா என்பதை அறிய வீடியோ கால் பேசுங்கள். அதன் பிறகு உங்கள் சாட்டிங்கை தொடருங்கள். முகம் தெரியாத மனிதர்களிடம் உங்கள் சுய குறிப்புகளை, புகைப்படங்களை பகிர வேண்டாம்.

முகநூலில் காதலிப்பது தவறில்லை. ஆனால் காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை. அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் என்று எல்லாமே கலந்ததுதான் வாழ்க்கை. காதலும் காமமும் வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே.”

“நிஜத்தில் உங்கள் கேரக்டர்? ”

“எனக்கு ப்ரெண்ட்ஸ் யாரும் இல்லை. வீடுதான் எனக்கு சொர்க்கம். பார்ட்டி, பப் கலாச்சாரம் பற்றி  தெரியாது. என்னை வெளியே பார்ப்பதாக இருந்தால் குடும்பத்துடன் மட்டுமே பார்க்க முடியும். சின்ன விஷயத்துக்கே எமோஷனலாகிவிடுவேன். சமையல், நடனம் இரண்டிலும் தூள் கிளப்புவேன். ஆனால் ‘தாதா 87’ல் நடனத்துக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.”

- சுரேஷ் ராஜா