சின்ன மச்சான் பேசுறாரு...



“என்னுடைய இசையுலக வாழ்க்கையை ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடலுக்கு முன்னும், பின்னும் என்று தனித்தனியா பிரித்துச் சொல்லலாம். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் பண்ணிய போது ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே’ ரீமிக்ஸ் பாடல் எனக்கான  அங்கீகாரத்தைக் கொடுத்தது.
‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் சித்திக் போன்ற பெரிய இயக்குநருடன் வேலை பார்த்திருக்கிறேன் என்ற டாக் கிடைத்தது. ஆனால் மக்கள் மத்தியில் இவர்தான் மியூசிக் டைரக்டர் அம்ரீஷ் என்று என்னை கொண்டு போய் சேர்த்தது ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் இடம் பெற்ற ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடல்.

அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் இப்போதுவரை பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். பொது இடங்களில் சந்திக்கும் போது மனம் திறந்து பாராட்டுகிறார்கள். செல்ஃபி எடுக்கிறார்கள். இது எனக்கே மிகப் பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் வெளிவந்துள்ள
‘சத்ரு’, ‘பொட்டு’ படங்கள் அந்த உற்சாகத்தை அதிகமாக்கியுள்ளது.

தற்போது  த்ரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’, ‘பரமபத விளையாட்டு’, சன்னி லியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’, ஆண்ட்ரியா நடிக்கும் ‘கா’. பிரபுதேவா சார் நடிக்கும் ‘எங் மங் சங்’னு ஏகப்பட்ட படங்கள் பண்றேன்’’ நம்பிக்கையோடு பேசுகிறார் இசையமைப்பாளர் அம்ரீஷ். இந்த இசைக் கலைஞனுக்கு  ஜெயசித்ராவின் மகன் என்பது கூடுதல் அடையாளம்.

“நடிகனாகத்தான் உங்கள் கேரியர் ஆரம்பித்தது. மீண்டும் நடிக்க அழைத்தால் நடிப்பீர்களா?”

“கண்டிப்பாக நோ. இசையமைப்பாளனாக எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது. அப்படி நடிப்புக்கான அழைப்பு வரும்போது கவனம் சிதறி
விடுமோ என்று பயப்படுகிறேன். நான் இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்தாலும் இசையமைப்பாளர் அம்ரீஷைத்தான் மக்களுக்கு தெரிந்திருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில்தான் தொடர்ந்து ஈடுபடுவேன். அதனால் ஒரு பாட்டுல தலையைக்காட்டுறது,  ஒரு சீன்ல வந்து போறது என்று எப்படிப்பட்ட வாய்ப்பு வந்தாலும் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.”

“இசைத்துறையில் நீங்கள் எதிர்பார்த்த திருப்தி கிடைத்துள்ளதா?”

“நூறு படங்கள் பண்ணினால்தான் ஒரு துறையில் முழுமையான நிலையை அடைய முடியும் என்றில்லை. அந்த வகையில் இதுவரை நான் பண்ணிய படங்கள் மூலம் எனக்கு முழு திருப்தி கிடைத்துள்ளது. அதுக்கு காரணம் நான் எடுத்துக்கொண்ட வேலையை முழுமையாக செய்துள்ளேன். அதனால் என்னுடைய தனித்துவத்தை காண்பிக்க முடிந்தது.

நடிகனாக இருந்தால் அம்மாவுடன் ஒப்பீடு செய்து எனக்கு அம்மா அளவுக்கு நடிப்பு வரவில்லை என்று விமர்சனம் செய்திருப்பார்கள். இசை என்பது எங்க குடும்பத்துக்கே புதுசு. அந்த வகையில் இறைவன் எனக்குக் கொடுத்த ஞானத்தைக் வைத்து அதில் என்னுடைய கிரியேட்டிவிட்டியைக் கலந்து இசையமைக்கிறேன்.”

“உங்களுடைய கம்போஸிங் ஸ்டைல் எப்படி இருக்கும்?”

“பகல், இரவு என்று மாறி மாறி இருக்கும். ஷக்தி சிதம்பரம் சாருக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு நாள் உட்கார்ந்தா, அன்னைக்கே அந்தப் பாட்டை முடிச்சுடணும்னு நினைப்பார். அதே சமயத்தில் அவசர அடியாக இருக்காது. அவரும் சில ஐடியாவோடு வருவார். அந்தக் கால இசையில் தொடங்கி இந்தக் கால இசை வரை இசையில் நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வெச்சிருக்கார்.

‘எங் மங் சங்’ படத்தில் பிரபு தேவா சார் வரிகளுக்கு இசையமைத்ததும் வித்தியாசமான அனுபவம். டியூன் கொடுத்த கொஞ்ச நேரத்திலேயே வரிகளைக் கொடுத்துவிட்டார். ‘என் காதலி சீன் போடுற’ படத்தில் ஒரு ரொமான்ஸ் பாடல் வரும். ‘ஹார்ட்  கசக்கி தொவச்சி புழிஞ்சி காயப் போடுறா’ என்ற அந்தப் பாடலின் ட்யூனைக் கேட்டுவிட்டு அதன் இயக்குநர் ராம்சேவா அரை மணி நேரத்தில் பாட்டை எழுதிக் கொடுத்துட்டு ஷூட்டிங் கிளம்பிட்டார்.”

“ராயல்டி, இசையமைப்பாளருக்கு மட்டுமே சொந்தம் என்ற கருத்துக்கு உங்களுடைய பதில்?”

“ஒரு படத்துக்கு ஆதாரமே தயாரிப்பாளர்தான். அவருடைய முதலீட்டால் மட்டுமே ஒரு படைப்பு உருவாகிறது. அந்த வகையில் ஒரு பாடலுக்கு உரிமை கொண்டாடும் போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என்று எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. IBRS என்ற அமைப்பில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு இந்த ஷேர் கிடைக்கும். மற்றபடி யாரையும் யாரும் குற்றப்படுத்த முடியாது.”

“புது பாடகர்கள் இப்போது நிறைய பேர் வருகிறார்களே...?”

“டிக் டாக் போன்ற செயலிகள் வந்துள்ளதால் ஏராளமான திறமைசாலிகளை அடையாளம் காணமுடிகிறது. புதுப் பாடகர்களைப் பாட வைக்கும்போது இசையமைப்பாளருக்கு சுதந்திரம் இருக்கும். அவர்களும் அந்தப் பாடலை மெருகேற்றுவதற்கு எத்தனை முறை அழைத்தாலும் அழைத்த குரலுக்கு ஓடி வருவார்கள். வளர்ந்த கலைஞர்களிடம் இந்த சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஒத்துழைக்க விரும்பினாலும் அவர்களுடைய பிஸி ஷெட்யூல் ஒத்துழைக்காது.”

“நடிகர், நடிகைகள் பின்னணி பாடுவது அதிகமாகியுள்ளதே?”

“பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் பெரும்பாலான கலைஞர்கள் சொந்தக் குரலில் பாடி நடித்திருக்கிறார்கள். கதை நாயகனோ, நாயகியோ பாடும் போது கூடுதல் பலம் கிடைக்கிறது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் லாரன்ஸை பாடகராக்கினேன். ‘கா’ படத்தில் ஆண்ட்ரியாவை ஒரு பாடல் பாட வைத்துள்ளேன். ‘கர்ஜனை’, பரமபத விளையாட்டு’ படங்களில் த்ரிஷாவை பாட  வைக்க முயற்சி செய்தேன்.

அவரோ அதற்கான நம்பிக்கை இன்னும் தனக்கு வரவில்லை என்றார். சன்னி லியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’யில் அவரைப் பாட வைக்க திட்டமிட்டுள்ளேன்”“வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய் போன்ற பாடலாசிரியர்களுடன் ஒப்பிடும்போது புதுசா வர்ற பாடலாசிரியர்களிடம் தனித்துவம் இல்லாமல் போனது ஏன்?”

“புதியவர்கள் சினிமாவுக்கு பாட்டெழுத வருவது வரவேற்கத் தக்கது. ஒரு பாடல் ஹிட்டாகும் போது அவர்கள் அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட வகையில் அவர்களுக்கு பிரச்சனை இருந்தாலொழிய  மற்றபடி அவர்களால் தொடர்ந்து பாடலாசிரியராக இயங்க முடியும்.”

“அம்மா என்ன சொல்கிறார்?”

“அம்மாவுக்கு என்னுடய பாடல்கள் பிடிக்கும். ஆனால் அவங்க ஓல்ட் இஸ் கோல்ட் என்று சொல்லக் கூடிய ரகம். நான் இசையமைப்பாளராக ஜெயிக்க வில்லை என்றால் மீண்டும் நடிக்க வைப்பேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். அதற்காகவே இசையில் அதிக கவனம் செலுத்துகிறேன்.”

“ரீமிக்ஸ் கலாச்சாரம் முடிந்துவிட்டதா? ஒரு படத்துக்கு எந்த விதத்தில் ரீமிக்ஸ் தேவைப்படுகிறது?”

“அது இயக்குநரின் தேவையைப் பொறுத்தது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ‘எம்.ஜி.ஆர். ஐயாவின் ‘ஆடலுடன்’ பாடலை ரீமிக்ஸ் பண்ணினேன். அந்தப் பாடல் பண்ணும் போது பயமாக இருந்தது. நல்லா தரவில்லை என்றாலும் பாடலைக் கெடுத்துவிட்டால் எம்.ஜி.ஆர். ஐயாவின் புகழுக்கு களங்கம் கற்பித்த மாதிரியாகி விடும். நல்ல வேளையாக அந்தப் பாடல் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது.

ஒரு இசை ரசிகனாக ரீமிக்ஸ் பண்ணுவதை  வரவேற்கிறேன். ஏன்னா, இப்போதுள்ள ஜெனரேஷனுக்கு தரமான இசை எப்படி இருக்கும் என்று தெரிவதற்கு அது உதவியாக இருக்கும்.”

- சுரேஷ் ராஜா