நேர்கொண்ட பார்வைக்கு சொந்தக்காரி!



எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்?

அறிமுகமாகும் முதல் படமே சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன். இருபத்தியொரு வயதிலேயே தன் லட்சியத்தை எட்டிவிட்டதாக மகிழ்ந்தார் வித்யா பாலன்.‘சக்ரம்’ என்று பெயரிடப்பட்ட அந்தப் படம் குறித்த அறிவிப்பு வந்ததுமே, கேரளாவே பரபரப்பானது. மோகன்லாலின் புதிய ஹீரோயின் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசியது.

கட்டு கட்டாக பணம் அடங்கிய மஞ்சப்பையோடு தயாரிப்பாளர்கள் மும்பை நகரின் செம்பூரில் இருந்த வித்யாவின் வீட்டுக்கு காவடி எடுத்தார்கள். ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கே போகாத புதுமுக ஹீரோயின் ஒருவர் அடுத்தடுத்து பன்னிரண்டு படங்களுக்கு ஒப்பந்தமாகி அட்வான்ஸ் வாங்கினார் என்றால் அந்த சாதனைக்கு சொந்தக்காரர், உலகிலேயே வித்யா பாலன் மட்டும்தான்.

வித்யாவின் அப்பா பாலன், டிவி துறையில் பணிபுரிபவர். எனவே, அவருக்குத் தெரிந்தவர்கள் அடிக்கடி டீனேஜ் வித்யாவை டிவி சீரியல்களில் நடிக்கவைக்க கேட்டுக் கொண்டிருந்தார்கள். சில சீரியல்களில் அப்படித்தான் வித்யா நடித்திருந்தார்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு போவதுதானே வளர்ச்சி? அவர் சினிமாவில் நடிக்க ஆசைப் பட்டபோது அப்பா சொன்னார். “உன்னால் எப்போது வேண்டுமானாலும் மிகச்சிறந்த நடிகையாக வரமுடியும். ஆனால் கல்லூரிப்படிப்பு என்பது இந்த வயதில் மட்டும்தான் சாத்தியம். படிப்பை முடித்துவிட்டு உனக்கு விருப்பப்பட்டதைச் செய்.”

நியாயமான ஆசைதானே?

மும்பை செயிண்ட் சேவியர் கல்லூரிக்கு சமூகவியல் படிக்கப் போனார்.கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு அருகே ஒட்டப்பள்ளம் என்கிற ஊரில் 1978ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்தார் வித்யா. ஒரே அக்கா ப்ரியா. ‘பருத்தி வீரன்’ பிரியா மணி கூட இவருக்கு சொந்தம்தான். தங்கை முறை. அப்பாவின் வேலை காரணமாகத்தான் மும்பைக்கு இடம்பெயர்ந்தார்கள்.

சிறுவயதில் ஷாருக்கான் ரசிகை. மாதுரி தீட்சித்தையும், ஷபனா ஆஸ்மியையும் ரொம்பவும் பிடிக்கும். ‘ஆர்த்’ படத்தில் ஷபனா பேசும் டயலாக்குகளை கண்ணாடி முன்பாக நின்று பேசிப்பழகுவார். இப்படி சின்ன வயதிலேயே நடிப்பு ஆசை உள்ளுக்குள் பற்றியெரிந்துகொண்டிருந்ததால்தான் டிவியில் நடிக்க வாய்ப்பு வந்ததுமே அதைப் பயன்படுத்திக் கொண்டார்.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், தன்னுடைய போட்டோ ஆல்பங்களை கோ ஆர்டினேட்டர்கள் உதவியோடு மார்க்கெட்டில் உலவ விட்டார். மும்பைக்கு ஹீரோயின் தேடிவந்த இயக்குனர் ஒருவரால்தான் முதல் படமே மோகன்லாலோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தென்னிந்தியாவை ஒரு கை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பியவருக்கு முதல் அதிர்ச்சி திருவனந்தபுரத்தில் கிடைத்தது. மோகன்லாலுக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் ஒத்துவரவில்லை என்பதால் ‘சக்ரம்’ திரைப்படத்தின் தயாரிப்பு அப்படியே நின்றுபோனது.

சரி. ஒப்பந்தமான மற்ற படங்களை முடித்துக் கொடுக்கலாம் என்று சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டால், யாருமே போனைச் கூட எடுக்கவில்லை. அறிமுகமாக இருந்த முதல் படமே நின்றுவிட்டது. இவரை நம் படத்தில் நடிக்கவைத்தால் நாமும் காலிதான் என்று
‘சென்டிமென்ட்’ பார்த்தார்கள் தயாரிப்பாளர்கள்.

“எனக்கு திறமை இருக்கிறது. நிரூபிக்க ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று கதறினார் வித்யா. இவரது கதறல் மேற்குத் தொடர்ச்சி மலைகளைத் தாண்டி பல நூறு கிலோமீட்டர் பயணித்து சென்னை கோடம்பாக்கத்தில் எதிரொலித்தது.

லிங்குசாமி, மாதவனை வைத்து ‘ரன்’ படம் இயக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தார். தமிழ் ரசிகர்களுக்கு ஃப்ரெஷ்ஷான கேரள ஹீரோயினைத்தான் அறிமுகப்படுத்துவேன் என்று சபதம் எடுத்திருந்தாரோ என்னவோ, வித்யாபாலனை ஹீரோயினாகத் தேர்ந்தெடுத்தார்.படப்பிடிப்பின் முதல் ஷெட்யூலில் இவர்தான் நடித்தார். யார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. வித்யா வேலைக்கு ஆகமாட்டார் என்று திடீரென நீக்கப்பட்டார்.

இவருக்கு பதிலாகத்தான் மீரா ஜாஸ்மின் அந்தப் படத்தில் நடித்தார்.ஒப்பந்தமாகியிருந்த இன்னொரு தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பும் இவருக்கு கசப்பாகவே அமைந்தது. கர்ச்சீப்பை எல்லாம் உடையாகக் கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். ‘ஒரு மாதிரியான’ படம் என்று தெரிந்ததுமே இவராகவே விலகி விட்டார்.

இத்தனை களேபரங்கள் நடந்ததால், ‘ராசியில்லாத நடிகை’ முத்திரை அழுத்தமாகவே இவர் மீது விழுந்தது.ஆனாலும்-இந்த சென்டிமென்டுகளில் நம்பிக்கையில்லாத பகுத்தறிவுள்ள மலையாளத் தயாரிப்பாளர் ஒருவர் முகேஷுக்கு ஜோடியாக இவரை வைத்து எடுத்த படம் ‘களரி விக்ரமன்’. வித்யா அய்யர் என்று விளம்பரங்களில் இவரது பெயர் இடம்பெற்றது. கொடுமை என்னவென்றால், இன்றுவரை அந்தப் படம் தியேட்டரில் வெளியாகவே இல்லை.

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் காந்த் நாயகனாக நடித்த ‘மனசெல்லாம்’ திரைப்படத்துக்கு முதலில் ஒப்பந்தமானவர் வித்யா பாலன்தான். படப்பிடிப்பில் இவர் சரியாக நடிக்கவில்லை என்று இயக்குனர் புகார் தெரிவித்ததால், ஆஸ்கர் ரவிச்சந்திரன் இவரை நீக்கிவிட்டு திரிஷாவை நாயகி ஆக்கினார்.

மூன்று ஆண்டுகள். கிட்டத்தட்ட பதினைந்து படங்களில் ஒப்பந்தமானார். சொல்லி வைத்தாற்போல அத்தனை படங்களிலிருந்தும் வேறு வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டார். முழுமையாக நடித்து முடித்த ஒரே படமும் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்கிற நிலை. பார்ப்பவர்கள் எல்லாம் வித்யாவை பரிதாபமாக விசாரிக்கத் தொடங்கினார்கள்.

இதற்கு மேல் தாங்க முடியாது என்று தென்னிந்தியாவுக்கு நடுவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு கொல்கத்தாவுக்கு விமானம் ஏறினார் வித்யாபாலன். அங்கே அவர் நடிப்பில் வெளிவந்த ‘பாலோ தேகோ’ நிறைய விருதுகளை வென்றது. மூன்று தேசிய விருதுகள். ஆனால், அடுத்த படத்துக்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் காணவேயில்லை. ஒருவாறாக அவர் நடிப்பில் ஒரே ஒரு படமாவது வெளிவந்ததே என்று திருப்திப்பட்டார்.

வித்யாவை விளம்பர உலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. டிவி கமர்ஷியல்களில் நடிக்கத் தொடங்கினார். சர்ஃப் எக்ஸெல் விளம்பரம் இவரது முகத்தை இந்தியாவின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. ஐம்பதுக்கும் மேற்பட்ட டிவி விளம்பரங்களில் நடித்துவிட்டார். ஆனாலும், வித்யாவுக்கு திருப்தியில்லை. நாரிமன் பாயிண்டிலிருந்து பாந்த்ராவுக்கு இப்படியும், அப்படியுமாக நடந்துகொண்டே சிந்திப்பாராம். “எப்போது என் முகத்தை மீண்டும் சினிமா திரையில் பார்ப்பேன்?”

காலம் அப்படியேவா இருக்கும்?

வித்யாவை வைத்து பெரும்பாலான விளம்பரங்களை இயக்கிய பிரதீப் சர்க்காருக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. சரத் சந்திராவின் ‘பரிணீத்தா’ நாவலைப் படமாக்க வேண்டும். பிரதீப் சர்க்கார், வித்யாதான் ஹீரோயின் என்பதில் உறுதியாக இருந்தார்.தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா ஆச்சரியமாக அவரைப் பார்த்தார். “அந்தப் பொண்ணு சினிமாவுக்கு அவ்வளவு ராசியில்லேன்னு மெட்ராசுலே சொல்லுறாங்கப்பா. நீ வேற ஐம்பது வயசுலேதான் முதன்முதலா படம் டைரக்ட் பண்ணப்போறே. பார்த்துக்கோ.”

பிரதீப் சர்க்கார் சொன்ன விடைதான் வித்யாவின் இருளில் விளக்கேற்றியது.“ஐம்பது வயசுலே முதன்முதலா படம் இயக்கிடலாம் சார். ஆனால், ஒரு திறமையான நடிகைக்கு ஐம்பது வயசுலேதான் வாய்ப்பு கிடைக்குதுன்னா, அது அந்த நடிகைக்கு மட்டுமில்லே, நம்ம எல்லாருக்குமே நஷ்டம்தான்!”
பிரதீப், வித்யா மீது வைத்த விந்தியமலை உயர நம்பிக்கையை சுமந்தார். பரிணீத்தாவுக்காக உயிரைக் கொடுத்து உழைத்தார்.
படம் சூப்பர்ஹிட். வித்யாவைப் பாராட்டாத வாயே இல்லை.

“எனக்குத் தெரியும். நான் பிறவி நடிகை. என்னுடைய பிரச்சினை, என் திறமை குடத்திலிட்ட விளக்காக இருந்ததுதான். பரிணீத்தா அதை குன்றில் ஏற்றினாள்” என்று கொஞ்சம் அடக்கமாகவும், அதே நேரம் யாருக்கும் தன் நடிப்பு சளைத்ததில்லை என்கிற தன்னம்பிக்கையோடும் சொன்னார் வித்யா.

பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘லகே ரகோ முன்னா பாய்’ படத்தில் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் நடித்தார். ஓவர்நைட் ட்ரீம் கேர்ளாக உயர்ந்தார். ‘சந்திரமுகி’யின் இந்தி ரீமேக்கில் ஜோதிகா வேடத்தில் நடித்தது வித்யாதான். பால்கி இயக்கிய ‘பா’, வித்யாவின் திறமைக்கு மேலும் பெருமை சேர்த்தது.

எல்லாவற்றுக்கும் உச்சம் ‘தி டர்ட்டி பிக்சர்’. சிலுக்கின் வாழ்க்கையை வைத்து எழுதப்பட்ட கதை. கவர்ச்சி என்கிற எல்லையை மீறி ஆபாசமாகவும் நடித்தாக வேண்டிய கட்டாயத்தைக் கோரும் பாத்திரம். எல்லா இமேஜையும் தூக்கி கடாசிவிட்டு டர்ட்டி பிக்சருக்காக சில நாட்கள் சிலுக்காகவே வாழ்ந்தார். மெய்வருத்தம் கூலி தரும். ரேஷ்மா என்கிற அந்த பாத்திரத்தில் நடித்த வித்யாவுக்கு தேசிய விருது கிடைத்தது. அடுத்த படமே ‘கஹானி’. ஹீரோயினிஸத்தின் உச்சம்.

ஹீரோயின் ஆக லாயக்கில்லாத நடிகை, ராசி இல்லாதவர் என்றெல்லாம் ஒரு காலத்தில் முத்திரை குத்தப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்ட வித்யா இன்று ஐந்து ஃபிலிம்பேர் விருதுகள், ஐந்து ஸ்க்ரீன் விருதுகள், ஒரு தேசிய விருது பெற்று இந்தியாவின் இணையற்ற நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். இருபத்தைந்து படங்களுக்கு மேலே நடித்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம’யும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் சித்தார்த்ராய் கபூரை 2012ஆம் ஆண்டு மணந்தார்.வித்யாவின் கதையில் இடையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல மறந்துவிட்டோம்.
இந்தியாவின் ஒவ்வொரு நடிகையின் கனவுமே காதல் இளவரசன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிப்பதுதான். ‘தசாவதாரம்’ படத்தில் அசின் நடித்திருக்கும் பாத்திரத்தின் வாய்ப்பு இவரை வீடு தேடி வந்தது.

படத்தை தயாரிப்பது ‘ஆஸ்கர் பிலிம்ஸ்’ என்கிற ஒரே காரணத்தால் அந்த வாய்ப்பினை கம்பீரமாக மறுத்தார். காரணம், இவர் முன்பு நிராகரிக்கப்பட்ட ‘மனசெல்லாம்’ படத்தை அந்த நிறுவனம்தானே தயாரித்தது?

தமிழே வேண்டாமென்று விரதம் இருந்தவர், இப்போது தமிழில் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றால், அதற்கு ஒரே காரணம் அஜித். அவருக்கு ஜோடியாக நடிக்க யாருக்குத்தான் கசக்கும்?‘நேர்கொண்ட பார்வை’யில் ‘மிஸஸ் தல’ இவர்தான்!

- யுவகிருஷ்ணா