இவர்தான் மிஸஸ் இந்தியா!



லண்டனில் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் கை நிறைய சம்பளம், மனம் நிறைய சந்தோஷம் என்று வாழ்ந்து வந்தவர் தேவந்தி. இவர் இந்து என்ற பெயரில் ஏற்கனவே சினிமாவில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இப்போது தேவந்தி என்ற பெயரில் நடித்து வருகிறார்.

லண்டனிலிருந்து சினிமா மீதுள்ள மோகத்தால் சென்னை வந்து செட்டிலானவருக்கு ‘வீரசேகரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ‘என்றென்றும் புன்னகை’, ‘வெண்ணிலா வீடு', ‘அம்மாவின் கைப்பேசி’, ‘நினைத்தது யாரோ’, ‘காதலுக்கு கண்ணில்லை’, ‘கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன்’ உட்பட ஏராளமான படங்களில் அம்மா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார்.

சின்னத்திரையிலும் பிரபலமான வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் Mrs India International 2019 விருது வென்றுள்ளார். அவரிடம் பேசினோம்.‘‘நெகட்டிவான வேடங்களில் நடிப்பது என்றால் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

நல்ல கதாபாத்திரத்தைவிட கெட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அந்த கேரக்டர் மக்களிடம் நம்மை வெகு சீக்கிரம் கொண்டு சேர்க்கும். அதுமட்டுமில்ல, எனக்குள் ஒரு வில்லி இருப்பதால் தான் வில்லி வேடங்களில் என்னால் இயல்பாக நடிக்கமுடிகிறது. மற்றபடி உணர்வுபூர்வமான கேரக்டர்களில் நடித்து அழ வைக்கவும் தெரியும்.

பெரிய திரையாக இருந்தாலும் சின்னத்திரையாக இருந்தாலும் விளம்பரப் படமாக இருந்தாலும் அதில் என்னுடைய கேரக்டர் தனித்துவமாகப் பேசப்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.சினிமாவைப் பொறுத்தவரை ராதிகா மேடம் என்னுடைய ரோல் மாடல். நடிகை, தயாரிப்பாளர் என்று பல்லாண்டு காலமாக அவர் வெற்றி மீது வெற்றி காண்பது என்னைப் போன்ற இல்லத்தரசிகளுக்கும் சினிமாவில் சாதிக்கலாம் என்ற தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது.

சமீபத்தில் எனக்கு கிடைத்த ‘திருமதி இந்தியா’ டைட்டில் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. டாக்டர், என்ஜினியர்ஸ் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் நான் மட்டுமே கலைத் துறையில் இருந்து கலந்து கொண்டேன். அடுத்து இலங்கையில் நடைபெறவுள்ள யுனிவர்சல் போட்டிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

அழகிப் போட்டியில் கலந்து கொள்வதால் தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்வீர்களா? என்று கேட்கிறார்கள். உண்மையை சொல்லணும்னா ஜிம்முக்கு போகும் பழக்கம் எனக்கில்லை. உணவுக் கட்டுப்பாடு இருந்தாலே உடலை ஜம்முன்னு வைத்திருக்கலாம். ஐந்து வயது குழந்தை எவ்வளவு சாப்பிடுமோ அதுதான் என்னுடைய உணவு. மற்றபடி ஆரோக்கியம் என்பது உடற்பயிற்சியில் அல்ல; மனதில் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

- ரா