பைக் ரேஸ் விபரீதம்!



காமெடி நடிகர்களை நாயகர்களாக நடிக்க வைப்பதுதான் இப்போது கோலிவுட்டின் சமீபத்திய  டிரெண்ட். அவ்வகையில் யோகிபாபு நாயகனுக்கான முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்கும் படம் ‘பட்டிபுலம்’. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ். இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராகப் பணியாற்றியவர். அவரிடம் படத்தைப் பற்றிக் கேட்டோம்.

‘‘இது கிரைம் கலந்த திரில்லர். காமெடியும் இருக்கும். பைக் ரேஸ்தான் கதைக்களம். பொதுவா பைக் ஓட்டு பவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அப்பாவி மக்கள்தான்  பாதிப்படைகிறார்கள். அப்படி இதில்  பைக் பந்தயத்தால் ஹீரோ பாதிக்கப்படுகிறார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கமர்ஷியலாக சொல்லி இருக்கேன்.

 யோகி பாபுவுக்கு டிராக்குக்காக வந்து போகும் வேடம் இல்லை. படத்தில் யோகி பாபு பேய் என்ற கேரக்டரில் ஒரு மணி நேரம் வருகிறார்.  இன்னொரு ஹீரோவாக வீரசம்மர் பண்ணியிருக்கிறார்.  நாயகி அமிதா ராவ் ஏற்கனவே ‘தற்காப்பு’ படம் பண்ணியவர். மன் தம்பி பிரபா மெயின் வில்லனா பண்ணியிருக்கிறார். இவர்களோடு சேரன்ராஜ், சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோரும் இருக்கிறார்கள்.

வல்லவன் இசையமைத்திருக்கிறார். இதுதான் முதல் படம். ஆனால் முதல் படம் என்று சொல்லமுடியாதளவுக்கு பாடல்களைக் கொடுத்துள்ளார். மாகாபா.ஆனந்த் பாடியுள்ள பாடல் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக வந்துள்ளது. ஆர்.கே.வர்மா ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். பைக் ரேஸ் காட்சியில் அவருடைய உழைப்பு பேசப்படும்.

சென்னை கிழக்கு கடற்கரை அருகில் உள்ள பட்டிபுலம் என்ற ஊரில் பைக் ரேஸ் பிரபலம். அதே ஊரில் படமாக்கியுள்ளோம். என்னுடைய முதல் படமான இதில் காதல் போன்ற எளிமையான கதையை கையில் எடுத்திருக்கலாம். ஆனால் பைக் ரேஸ் நடத்துவதால் ஏற்படும் ஆபத்தை இளைஞர்களிடம் எடுத்துச் சொல்வதற்காகவும், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் என்னுடைய முதல் படமாக இந்தக் கதையைத் தேர்வு செய்தேன்.

தயாரிப்பாளர் திருமுருகன் இந்தப் படத்துக்குப் பிறகு பைக் ரேஸ் நடத்தும் இளைஞர்களிடையே மனமாற்றம் நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.  படமும் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருக்கு’’ என்றார்.

- எஸ்