அயோக்யா



தூக்குலே போடு!

அயோக்கியனான ஒரு போலீஸ் அதிகாரி, மனம் திருந்தி யோக்கியன் ஆனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதே இந்த ‘அயோக்யா’.கச்சிதமான உடற்கட்டு, மிடுக்கான நடை, அலட்சிய உடல்மொழி என அராத்து போலீஸ் அதிகாரி வேடத்துக்குக் கச்சிதமாக இருக்கிறார் விஷால். நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது என்று விஷாலுக்குத் தோன்றியிருக்கும் போல.

தொடக்கத்திலிருந்து பொய், பித்தலாட்டம், பகல் கொள்ளை என்று அனைத்து மோசடி வேலைகளையும் செய்கிறார். பிணத்தை வைத்து பணத்தை வாங்குவது, பார்த்திபனிடம் சண்டை போட்டுவிட்டு சரண் அடைவது என நடிப்பிலும் கவனிக்க வைக்கிறார். வாய்ஸ் மாடுலேஷன் சில இடங்களில் ‘ஃபிட்’டாகிறது. சில இடங்களில் அன்ஃபிட்.

நாயகி ராஷி கண்ணாவை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். அவர்தான் கதையின் திருப்புமுனை என்பதால் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.  கிளைமாக்ஸ் காட்சியில் அவரும் அழுது, ரசிகர்களையும் அழவைத்துவிடுகிறார்.

படத்தின் இரண்டாவது நாயகன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கே.எஸ்.ரவிக்குமாருக்கு முக்கியமான வேடம். தீதும் நன்றும் ஒரே இடத்தில் இருக்கின்றன என்று சொல்லப்படுவது போல எல்லாக் காட்சிகளிலும் விஷாலும் இவரும் ஒன்றாகவே வருகிறார்கள். உயரதிகாரி என்றபோதும் தலைமைப் பண்பு உள்ளவர்களுக்கே தலை வணங்குவேன் என்று சொல்லும் தலைமைக் காவலராக அவரது வேடம்,
பவர்ஃபுல்.

வில்லனாக வருகிற பார்த்திபன், இதெல்லாம் ‘உள்ளே வெளியே’விலேயே நான் செய்துவிட்டேன் என்கிற அலட்சியத்துடனே விஷாலை எதிர்கொள்கிறார். இருவருக்குமான நடிப்புப் போட்டியில் பார்த்திபன் முந்துகிறார். சந்தானபாரதி, யோகிபாபு ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பாதிக்கப்படும் பெண்ணின் பிரதிநிதியாய் குரல் கொடுக்கும் பூஜா தேவரியாவின் நடிப்பு சிறப்பு. ஒருசில காட்சிகள் என்றாலும் முத்திரை பதிக்கிறார் சோனியா அகர்வால்.

கார்த்திக்கின் ஒளிப் பதிவும், சாம்.சி.எஸ்.ஸின் இசையும் படத்துக்கு பலம். தெலுங்கில் வெற்றி பெற்ற ‘டெம்பர்’ கதையில் உள்ள டெம்போ குறையாமல் நம்முடைய சூழலுக்கு ஏற்ப கதை சொல்லிய விதத்தில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் வெங்கட்மோகன்.

குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை 24 மணி நேரத்தில் நிறைவேற்றுவது, வழக்கைத் தொடுத்த காவல் அதிகாரியே, அதே வழக்கில் நானும் குற்றவாளி என்று சொல்வதும், அதை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொள்வதும் அபத்தம். ஆனால், இந்த அபத்தத்தைக் கணக்கில் கொள்ளாமல் பொள்ளாச்சி சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி, நியாயத்தின்படி இதுபோன்ற தண்டை கிடைத்தால் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம்.