நம்பியார் சாமிக்கு சொந்தக்காரரா?



“எம்பேரு கோபாலகிருஷ் ணன் சார். இண்டஸ்ட்ரி ஆளுங்க ஜாலியா நம்பியாருன்னு கூப்பிட ஆரம்பிச்சி, அதுவே அடையாளமாகவும் ஆயிடிச்சி. இப்போ கருப்பு நம்பியாருன்னுதான் டைட்டிலிலேயே பேரு போடறாங்க.
அந்தப் பேரிலேயே தொடர்ந்து நடிக்கலாம்னு இருக்கேன். எங்கேயாவது பப்ளிக்கில் ரசிகர்கள் அடையாளம் கண்டுபிடிச்சி, ‘நீங்க நம்பியார் சாமிக்கு சொந்தக்காரரா?’ன்னு கேட்கிறாங்க” என்று அடக்கத்தோடு பேச ஆரம்பிக்கும் கருப்பு நம்பியாரை ‘சேதுபதி’, ‘காலா’ போன்ற படங்களில் கண்டிருப்பீர்கள்.

“உங்க பின்னணி என்ன சார்?”

‘‘எனக்கு சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம். எங்க ஊர்க்காரங்க சிலர் சினிமாவுல இருக்காங்க. அவங்கதான் நான் சினிமாவுக்கு வருவதற்கு வழிகாட்டினார்கள். இயக்குநர் புகழேந்தி, ‘பற’ கீரா, பாலா சார் உதவியாளர் சம்பத் ஆகியோரெல்லாம் கூட எங்க ஊரைச் சேர்ந்தவர்கள்தான்.

சினிமா மோகம் எனக்குள் அதிகமாகக் காரணம் கமல், ரஜினி போன்ற ஆளுமைகளை சொல்லலாம். தொண்ணூறுகளில் வெளிவந்த அனைத்து நடிகர்களின் படங்களையும் பார்ப்பேன். அதில் கமல் சார் கொஞ்சம் ஸ்பெஷல். கமல் நடித்த ‘நாயகன்’, ‘இந்திரன் சந்திரன்’, ‘குணா’ போன்ற படங்களில் கமல் பின்னியெடுத்திருப்பார். ‘குணா’ வெளிவந்த சமயத்தில் எங்கு சென்றாலும் ‘குணா’ பனியனுடன்தான் செல்வேன். என்னுடைய ஃபிரெண்ட்ஸ் ‘தளபதி’ பனியனோடு வருவாங்க.

சின்ன வயசுலேர்ந்து சினிமா ஆசை இருந்தது. அப்பா ஸ்கூல் டீச்சர் என்பதால் என்னை நல்லா படிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால் நான் சினிமாவுக்குத்தான் போவேன் என்று முரண்டு பிடித்தேன். அப்போது எனக்கும் அப்பாவுக்குமிடையே ஒரு டீல் உருவானது. அதன்படி நான் டிகிரி வாங்கி அப்பாவிடம் கொடுத்துவிட்டு சினிமாவுக்கு போகலாம் என்பதுதான்.

நல்ல படியா என்ஜினியரிங் முடித்தேன். அப்பாவிடம் சர்டிபிக்கேட்டை கொடுத்து விட்டு சென்னைக்கு வந்துவிட்டேன்.‘அது ஒரு கனாக் காலம்’ படத்தில் ஜெயில் வார்டன் கேரக்டர், ‘பருத்திவீரன்’ படத்தில் போலீஸ் கேரக்டர், ‘மாத்தியோசி’யில் பிச்சைக்காரன் கேரக்டர். ‘புதுமுகங்கள் தேவை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கவண்’, அம்மணி’, ‘சேதுபதி’, ‘காலா’ உட்பட சுமார் இருபது படங்களில் இதுவரை நடிச்சிருக்கேன்.”
‘‘கருப்பு நம்பியார் என்ற பெயர் எப்படி கிடைத்தது?’’

‘‘எல்லாரும் அப்படி கூப்பிடறாங்களேன்னு, இது நானாக எனக்கு வைத்துக்கொண்ட பெயர்தான். ‘முப்பரிமாணம்’ படத்தை இயக்கிய அதிரூபன் என்னுடைய நண்பர். அவர்தான் பெயர் மாற்றத்துக்கான ஆலோசனையைக் கொடுத்தார். அப்போது செட்டிக்குளம் கோபால், கிருஷ்ணன் ஜி என்கிற பெயர்களில் எல்லாம் நடிச்சு வந்தேன். அந்தப் பேர்களில் எல்லாம் ஏராளமானவர்கள் இருந்ததால், புதுப்பெயர் யோசித்தோம். அதிரூபனின் நிஜப்பெயர் தியாகு. அவரும் தன்னுடைய பெயரை அதிரூபன் என்று மாற்றுவதாகவும், எனக்கும் வித்தியாசமான பெயரைச் சூட்டுவதாகவும் சொன்னார்.

அது விஜயகாந்த் அரசியலுக்கு வந்த காலம். சுவர்களில் எங்கு பார்த்தாலும் ‘கருப்பு எம்.ஜி.ஆர்’ என்று எழுதப்பட்டிருக்கும். சுவர் விளம்பரம் ஈர்த்ததாலும் ‘முப்பரிமாணம்’ படத்தில் நம்பியார் என்ற கேரக்டர் வருவதாலும் நம்பியார் என்ற பெயர் அதிரூபனுக்கு பிடித்திருந்தது. நானும் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று கருப்பு நம்பியார் என்ற பெயரில் நடிக்க ஆரம்பிச்சேன். கருப்பு நம்பியார் என்ற பெயரில் தான் யூனியன் கார்டும் வெச்சிருக்கேன்.’’

‘‘சினிமா... சுலபமாக இருந்ததா?’’

‘‘என்னுடைய ஊர்க்காரர்களின் வழிகாட்டுதல் இருந்ததால் சென்னை வாழ்க்கையை பக்குவமாகக் கையாள முடிந்தது. அவர்கள் உதவி இல்லை என்றால் பத்து வருடம் வீணாகி இருக்கும். வாய்ப்பு தேடும் போது கல்யாண கேட்டரிங் வேலை, பொருட்காட்சிகளில் பேனா விற்பனை உட்பட சில வேலைகளை செய்திருக்கிறேன்.

கல்யாண வேலை இல்லாத சமயத்தில் மதிய வேளைகளில் அருகில் உள்ள கோயில்களில் கொடுக்கப்படும் அன்னதானத்தை வாங்கிச் சாப்பிடுவேன். ரூம் வாடகை போன்ற பிரச்சனைகளைச் சமாளிக்க என்னுடைய அக்கா மாதாமாதம் பணம் அனுப்புவார். அது பெரிய உதவி. இப்போது நானும் நாலு காசு சம்பாதிக்கிறேன். அதிலிருந்து கொஞ்சம் வீட்டுக்கும் அனுப்புகிறேன்.’’

“உங்க சின்ன வயசுலே ரஜினி படமெல்லாம் பார்ப்பீங்கன்னு சொன்னீங்க. அவரோடவே நடிச்ச அனுபவம்?”

‘‘சினிமாவில் கமல், ரஜினியுடன் சேர்ந்து நடிக்க விரும்பாதவர்கள் இருக்க முடியாது. நான் பிரமித்த நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது கனவிலும் நினைக்காதது. அப்படித்தான் ‘காலா’ வாய்ப்பு வந்ததும் எதிர்பார்ப்பு இல்லாமல் போனேன். இயக்குநர் ரஞ்சித் ‘சென்னை-28’ படத்தில் உதவியாளராக இருக்கும் போதே நல்ல பழக்கம். நேரம் வரும் போது வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தார். அப்படி அவராக அழைத்து கொடுத்த வாய்ப்புதான் ‘காலா’. அதில் எனக்கு வக்கீல் கேரக்டர்.

ரஜினி சாரிடம் நான் பார்த்து வியந்த விஷயம் அவருடைய தொழில் பக்தி. தன்னால் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். எல்லாக் காட்சியையும் ஒரே டேக்கில் முடிப்பார். படப்பிடிப்புக்கு எக்காரணத்தைக் கொண்டும் லேட்டா வரமாட்டார். தன்னுடைய சீன்லேயே கவனமா இருப்பார். டேக் முடியும் வரை ஸ்பாட்டில் இருப்பார். சீன் முடிந்ததும் எல்லோரிடமும் குழந்தை மாதிரி ஜாலியாக சிரித்துப் பேசுவார். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களைப் பற்றி தெரிந்துகொள்வார்.

அவர்கள் ஊர் அருகில் இருக்கும் கோயில்களைப் பற்றி கேட்டு தெரிந்துகொள்வார். ரஜினி சார் அவருடைய உடல்நிலைக்கு ஏற்ற மாதிரிதான் உணவு சாப்பிடுவார். லைட் மீல்ஸ்தான் பெரும்பாலும் இருக்கும். ஸ்நாக்ஸ் வகைகளில் வேர்க்கடலை பிடிக்கும். அதை சக நடிகர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பார். ரஜினி சாருடன் செல்ஃபி எடுத்திருக்கிறேன். அந்த அனுமதியே ரஜினி சார் கொடுத்த பெரிய பரிசாகக் கருதுகிறேன். தொழில் மீது அவருக்கு இருக்கும் பக்திதான் அவரை இவ்வளவு உயரத்தில் வைத்துள்ளது.’’

‘‘நீங்க ஹீரோவா நடிச்சீங்களாமே?’’

‘‘ஆர்யா தயாரித்த ‘படித்துறை’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். சுகா இயக்கியிருக்கிறார். படம் முடிந்துவிட்டது. அந்தப் படம் எப்போது வந்தாலும் பேசப்படும் படமாக இருக்கும். மற்றபடி ஹீரோவாக நடிக்கணும் என்ற ஆசை இல்லை. பணம், புகழ் கடந்து சவாலான கேரக்டர்ல அடிச்சி நொறுக்கணும். காமெடி, வில்லன் என்று வெரைட்டியா பண்ணி பேர் வாங்கணும், தனிப்பட்ட முத்திரை விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.’’

“சினிமாவில் உங்களுக்கு வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?”

“எனக்கு என்ன கிடைக்கணுமோ அது கிடைக்குது. ‘சேதுபதி’ படம்தான் எனக்கு திருப்புமுனை கொடுத்தது. நம் முகம் பரிச்சயமாகி வாய்ப்பு தேடும் போதுதான் படங்கள் கிடைக்கும். டிஸ்கஷன் பண்ணும்போதே கருப்பு நம்பியாருக்கு இந்த ரோல் கொடுக்கலாம் என்று இயக்குநர் சொல்லுமளவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன். அந்த இடத்துக்கு வந்ததால்தான் ‘காலா’ போன்ற படங்களைப் பண்ண முடிந்தது. ஏன்னா, அந்த மாதிரி படங்களில் நடிக்கிறவர்கள் மிகப் பெரிய நடிகர்கள். அவர்களுக்கு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சமாவது தகுதி வேண்டும். முயற்சியும் திறமையும் இருந்தால் வாய்ப்பு நிச்சயம்.’’

‘‘அடுத்து?’’

‘‘அமலா பால் நடிக்கும் ‘ஆடை’. ‘மேயாத மான்’ ரத்னகுமார் இயக்குகிறார். படத்துல எனக்கு ஆடை இருக்கா, இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. தினேஷ் ஹீரோவா நடிக்கிறார். சமூகத்துக்கான கருத்துக்களை உள்ளடக்கிய அந்தப் படம் பெரிய கவனத்தைப் பெறும். தவிர, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வெப்சீரிஸ் பண்றேன். ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். சீரிஸ் முழுதும் வரக்கூடிய பெரிய ரோல்.’’

‘‘நடிப்பு தவிர வேற என்ன பண்றீங்க?’’

‘‘படப்பிடிப்பு இல்லாத நாட்களில் டப்பிங் பேசுவேன். ‘பர்கர்’ உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறேன். காமெடி கேரக்டர்களுக்கு அதிகம் பேசுவேன். தமிழில் ‘உத்தம வில்லன்’, ‘போக்கிரி ராஜா’ உட்பட சில படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறேன்.’’

‘‘சினிமாவில் உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்களா?’’

‘‘காளிவெங்கட், முனீஸ்காந்த்னு சிலர் இருக்காங்க. நாங்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வாய்ப்பு தேடி இருக்கிறோம். படக்கம்பெனி, வாய்ப்பு போன்ற விவரங்களை ஷேர் பண்ணிக் கொள்வோம். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெயர் காரணமா, தொழில் காரணமானு தெரியலை யாரும் பொண்ணு தரமாட்டேன்கிறார்கள்.’’

- சுரேஷ்ராஜா