எப்படி இருக்கிறார் புன்னகை அரசி?



நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு சினிமாவில் கோலோச்சி, ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படுபவர் கே.ஆர்.விஜயா. ‘கற்பகம்’ படத்தின் மூலம் தன்னுடைய கலைப் பயணத்தை துவக்கிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நீண்ட காலம் கதாநாயகியாகவே நடித்த பெருமைக்குரியவர். தாய்மொழி மலையாளம் என்றாலும், மிக அழகாகத் தமிழ் பேசி நடித்தார்.

‘கற்பகம்’, ‘கந்தன் கருணை’, ‘சரஸ்வதி சபதம்’, ‘இதயக்கமலம்’, ‘நம்ம வீட்டு தெய்வம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘கல்தூண்’, ‘மிருதங்க சக்ரவர்த்தி’, ‘வாயாடி’, ‘திருடி’, ‘ரோஷக்காரி’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘கந்தன் கருணை’ போன்ற படங்கள் இவரது நடிப்பில் முத்திரை பதித்த படங்களாகும். ‘சர்வர் சுந்தரம்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘நம்ம வீட்டு தெய்வம்’ போன்ற படங்கள் இவருக்கு நிறைய ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்த படங்களாக அமைந்தன.

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்னும் இரண்டு ஜாம்பவான்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை இரண்டு முறை பெற்றவர். இன்றும் உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கும் கே.ஆர்.விஜயாவிடம் பேசினோம்.

“உங்கள் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி?”

“எங்களுடையது பெரிய ஆச்சாரமான குடும்பம். நான் பிறந்த ஊர் திருச்சூர். அம்மா கல்யாணி. அப்பா ராமச்சந்திரன். அம்மா குடும்பத்துல எல்லோரும் மிலிட்டரியில் இருந்தார்கள். அப்பாவும் சில காலம் மிலிட்டரியில் இருந்தார். இரண்டாவது உலகப் போர் முடிந்ததும் அப்பாவுக்கு கல்யாணம் நடந்தது. அதன் பிறகு அப்பா சித்தூர்ல நகைக்கடை வைத்து இருந்தார். சித்தூர்ல எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் சித்தூர் நாகையா. நான் குழந்தையாக இருந்தபோது நாகையாவின் மனைவி என்னை கொஞ்சியது ஞாபகம் இருக்கு.

சினிமாவில் நடிக்கும் வரை நான் சினிமாவே பார்த்ததில்லை. அப்பாவுக்கு நாடகத்துறையில் ஆர்வம் இருந்ததால் என்னை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒருகட்டத்தில் குடும்பம் பழநிக்கு ஷிப்ட்டானது. மனோரமா நடித்த ‘மகளே உன் சமர்த்து’ உட்பட சில படங்களில் சின்ன ரோலில் நடித்து இருக்கிறேன். அப்போது என் பெயர் தெய்வ நாயகி.

ராதா அண்ணன்தான் சுருக்கமா அம்மா, அப்பா பெயரை சேர்த்து கே.ஆர்.விஜயா என்று பெயர் வைத்தார். அப்போது நிறைய நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். சிம்சன் சாக்லெட் டப்பா மற்றும் காலண்டர் விளம்பரத்தில் என் போட்டோ இடம் பெற்றது. அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு இயக்குநர் கே.எஸ்.கோபலகிருஷ்ணன் நடிக்க அழைத்தார். முதல் சந்திப்பிலேயே ஒரு டயலாக் கொடுத்து பேசச் சொன்னார். பிறகு மேக்கப் டெஸ்ட் எடுத்ததும் நான்தான் நாயகி என்று முடிவு செய்தார். அந்தப் படம் ‘கற்பகம்’. நான் கனவிலும் எதிர்பாராத வாய்ப்பு. நான் இன்றளவும் பேசப்படுகிறேன் என்றால் அந்த பெருமை ‘கற்பகம்’ படத்துக்கும் இயக்குநர் கே.எஸ்.ஜி.க்கும்தான் சேரும்.”

“உங்களுக்கு ‘புன்னகை அரசி’ பட்டம் எப்படி கிடைத்தது?”

“அநேகமாக 1973 அல்லது 1974ம் ஆண்டாக இருக்கலாம். திருச்சியில் நீதிபதி ஒருவர் தலைமையில் நடந்த ஒரு பாராட்டு விழாவில் ‘புன்னகை அரசி’ என்ற பட்டத்தை கொடுத்தார்கள்.”“நீங்கள் ஜோடியாக நடித்த சக நடிகர்கள் பற்றி?”

“பொது வாழ்க்கையில் இருக்க வேண்டிய விதத்தை குறித்து எம்.ஜி.ஆர்.சொல்லிக் கொடுத்துள்ளார். நடிகர், நடிகை என்றாலே மக்கள் மத்தி யில் மாறுபட்ட கருத்து இருக்கும். சிலர் உயர்வாக நினைப்பார்கள். சிலர் கேவலமாக நினைப்பார்கள். மக்கள் நம்மை மதிக்குமளவுக்கு நாம் நடந்து கொள்ள வேண்டும். நம் நடவடிக்கைகள் மரியாதைக்குரியதாக இருக்கணும். சிலர் ஒரு கையால் வணக்கம் தெரிவித்தாலும் நாம் இரண்டு கையால் வணக்கம் சொல்லணும். பெண்களை கண்ணியமா நடத்துமளவுக்கு நம் நடவடிக்கை இருக்கணும் என்று நல்ல பழக்க வழக்கங்களை சொல்வார்.

சிவாஜி சாரிடம் மேக்கப், நடிப்பு, டைமிங் போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். நடிப்பு தவிர வேறு எதையும் பேசமாட்டார். அதனால் தான் நடிகர் திலகம் என்று அவரால் பெயர் வாங்க முடிந்தது.

ஜெமினி பட்டும் படாமல் இருப்பார். முத்துராமன் ஊமைக் குசும்பு உள்ளவர். அவருக்கு வணக்கம் வைத்தால் பின்னாடி என்னைவிட பெரிய மனிதர் யாராவது வருகிறார்களா என்று கேட்டு கலாட்டா பண்ணுவார். டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சோ, நாகேஷ் என்று எல்லோருடனும் பழகி இருக்கிறேன். சந்திரபாபுவிடம் எப்போதும் நகைச்சுவை கொப்பளிக்கும். அவருடைய இயக்கத்தில் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ படம் பண்ணியிருக்கிறேன்.”

“இப்போதுள்ள சினிமாவில் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?”

“இப்போது மெஷின் முன்னே போய்விட்டது. ஆர்ட்டிஸ்ட் பின்னாடி போய்விட்டார்கள். அப்போது டப்பிங்கில் சில போர்ஷன்தான் ஸ்டூடியோவில் நடக்கும். மீதி அனைத்துக்கும் நேரடியாக டப்பிங் பேச வேண்டும். அது சாதரண விஷயம் அல்ல. திறமை முக்கியம். ஒரு நீண்ட மைக் இருக்கும். ஆர்ட்டிஸ்ட் நகர்ந்தால் மைக்கும் சேர்ந்தே நகரவேண்டும். மைக் நிழல் ப்ரேமில் வரக்கூடாது. இது எல்லாமே மேன்பவரால் நடக்கும் வேலை. ரொம்பக் கவனமா செய்யணும். ரிக்கார்டிங் பண்ணும் போது உச்சரிப்பு சரியாக இருக்கணும். என்னுடைய நூறாவது படம் வரை நேரடியாக பேசி நடித்தேன்.

நடிப்பைப் பொறுத்தவரை யதார்த்தமான நடிப்பு, சினிமாத்தனம் என்று பிரித்துப் பார்க்கத்தேவையில்லை. சினிமா என்பது மிகைப்படுத்தப்பட்டது. அதில் கொஞ்சம் மிகை இருந்தால் சுவாரஸ்யம் இருக்கும். ராஜா, ராணி என்று வரும்போது அந்த கெட்டப்பை மாற்றிக் காட்டணும். சாதாரணமா பண்ணும் போது ரசிகர்களை ஈர்க்கமுடியாது.

எங்க காலத்தில் நேர நிர்வாகத்தில் சரியாக இருப்பார்கள். அப்போது கோடம்பாக்கத்துல ரயில்வே கேட் இருக்கும். அதையும் ஞாபகம் வைத்துதான் முன்கூட்டியே கிளம்புவோம். இன்று அப்படி இல்லை. குறித்த நேரத்தை விட்டுவிட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வருவது, அல்லது அரை நாள் தாமதமாக வருவது சர்வசாதாரணமாகிவிட்டது. நேர நிர்வாக விஷயத்தில் நாம் நிர்ணயம் செய்த நேரத்துக்கு நாம் மரியாதை கொடுக்கணும்.

நேரம் எல்லாருக்கும் ஒன்றுதான். இந்த உலகத்தில் ஒரு நிமிடத்துல வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் இருக்கிறார்கள். ஓட்டப் பந்தயத்தில் மைக்ரோ செகண்ட்ல வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. நேர விஷயத்தில் முடிந்தளவுக்கு மெயிண்டெயின் பண்ணணும். எங்க காலத்துல லேட்டா வந்தா கேவலமா பார்ப்பாங்க.

இப்போதுள்ளவர்களுடன் அதிகம் வேலை செய்யாததால் இந்தக் காலத்துல எப்படி இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. செட்டுக்குள் வந்தால் கதை, கேரக்டர் பற்றிதான் சிந்தனை இருக்கும். அரசியல் உட்பட எதையும் பேச மாட்டோம். செட்டைவிட்டு எழுந்தால் தான் சொந்தக் கதை சோகக் கதையை பேசுவோம்.”

“உங்க காலத்துல ‘மீ டூ’ பிரச்சனை இருந்ததா?”

“பாதிப்பு எல்லா சமயத்திலும் எல்லா இடங்களிலும் இருக்கு. அதில் பல விஷயங்கள் உள்ளடங்கியிருக்கும். இன்று எல்லாமே டேக் இட் ஈஸி ஆகிவிட்டது. அன்று அப்படி அல்ல. நடிகைகள் பொதுவெளிக்கு அவ்வளவாக வர மாட்டாங்க. பேசவும் மாட்டாங்க.  மீ டூ விவகாரங்களில் கருத்து சொல்வது அவரவர் நிலைப்பாடு.”

“சினிமா - குடும்பம் எப்படி பேலன்ஸ் பண்ணுகிறீர்கள்?”

“சினிமாவோ குடும்பமோ என் வேலையை நான் தான் பார்க்க வேண்டும். திருமணத்துக்குப் பிறகு நானே கடைக்கு போவேன். அரிசி, காய்கறி  என்ன விலை? என்று எனக்குத் தெரியும். மேக்கப் கலைந்ததும் வீட்டைப் பற்றியும் வீட்டிலிருந்து புறப்பட்டதும் சினிமாவைப் பற்றியும் யோசிப்பேன். இரண்டையும் இணைத்து குழப்பம் அடையமாட்டேன். என்னுடைய வெற்றியில் கணவர் வேலாயுதம் பக்க பலமாக இருந்தார்.

தமிழ் சினிமாவில் திருமணத்துக்குப் பிறகு ரீ-என்ட்ரியை முதன் முதலாக நான்தான் ஆரம்பித்தேன். குழந்தை பிறந்தபிறகு முழு நேர இல்லத்தரசியாக மாறிய நிலையில் தேவர் பிலிம்ஸிலிருந்து வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை நான் தவிர்த்துவிடலாம் என்ற முடிவில் இருந்தேன். கணவர் கொடுத்த உற்சாகத்தால் நடிக்க ஆரம்பித்தேன். திருமணத்துக்குப் பிறகு நடித்த படம் ‘அக்கா தங்கை’. அந்தப் படத்துக்குப் பிறகு ஏராளமான படங்கள் பண்ணினேன்.”

“நீங்கள் நடிக்க முடியாமல் போன வேடம்?”

“அப்படித் தோன்றவில்லை. ஏறத்தாழ எல்லா வேடங்களிலும் நடித்து இருக்கிறேன். நான் என்ன வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதை இயக்குநர்களே தீர்மானிக்கிறார்கள். ‘குறத்தி மகள்’, ‘வாயாடி’, ‘திருடி’ போன்ற படங்களெல்லாம் நானே எதிர்பார்க்காத தாறுமாறு வேடங்கள். நான் அதிகம் பேசமாட்டேன். ஆனால் ‘வாயாடி’ படம் பண்ணினேன். அம்மன் வேடங்களில் நடிக்கும் போது அழுகையா வரும்.

வெயில் நேரத்தில் கிலோ கணக்கில் நகைகளை சுமந்து நடிக்க வேண்டும். அந்த வேதனை கொஞ்ச நேரம் தான் நீடிக்கும். ரஷ் பார்த்தவுடன் இரண்டு செயின் எக்ஸ்ட்ரா போட்டிருந்தால் நல்லா இருந்திருக்குமே என்று தோன்றும். அந்த வகையில் நான் நடித்த ஒவ்வொரு படமும் சவால் நிறைந்ததாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.”

“உங்களைப் பற்றிய வதந்திகளை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?”

“கெட்டது நடந்தால் தான் நல்லதின் அருமை புரியும். என்னைப் பற்றி வரும் வதந்தி என்னை புண்படுத்தாது. என்னைப் பற்றி வதந்தி பரப்பியவர்களுக்கு சிறிது நேரம் சந்தோஷம் கிடைத்திருக்கலாம். அப்படி சந்தோஷம் கிடைத்தால்  அனுபவிக்கட்டும். இறைவன் அருளால் நான் நல்லாத்தான் இருக்கிறேன். நம்மைப் பற்றிய எதிர்மறையான விஷயங்கள் ஆயிரம் நடக்கும்.

அதில் கவனம் செலுத்தினால் நிம்மதி போய்விடும். சில விஷயங்களை ஒரு காதில் வாங்கி மறு காதில் வெளியேற்றிவிட வேண்டும். இந்த நாட்டுல ராமனையும் குற்றம் சொல்கிறார்கள். காந்தியையும் குற்றம் சொல்கிறார்கள். மகான்கள் மீதே குற்றம் சுமத்தும் போது நான் எம்மாத்திரம்?”
“வெற்றி தோல்வியை எப்படி எடுத்து கொள்வீர்கள்?”

“வெற்றி சந்தோஷத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதுகாக என்னால் தான் வெற்றி என்ற மமதையில் இருக்கமாட்டேன். ஒரு படம் ஓடாத போது தயாரிப்பாளரின் நிலையைக் குறித்தான கவலைதான் எனக்கு இருக்கும்.”

“இப்போது உங்களுக்கு வாய்ப்பு வருகிறதா?”

“நிறையப் பேர் வருகிறார்கள். ஆனால் இப்போதுள்ள கதைகளில் எனக்கான வாய்ப்பு இருக்கிற மாதிரி தெரியவில்லை. ஆனால் நடிப்புக்கு முழுக்கு போடமாட்டேன். எந்தக் கட்டத்திலும் சினிமாவை விட்டு என்னை பிரித்துப் பார்க்க முடியாது.”

“உங்க காலத்து நடிகைகள் சொந்தமாக படம் தயாரித்துள்ளார்கள். உங்களுக்கு அந்த எண்ணம் ஏற்படவில்லையா?”

“என் கவனம் முழுவதும் நடிப்பில் மட்டுமே. தயாரிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. இப்போ தூங்க ஆரம்பித்தால் நல்லா தூக்கம் வருது. அது கெட வேண்டாம் என்று நினைக்கிறேன்.”

“உங்கள் ஆரோக்யத்தின் ரகசியம்?”

“கவலைகள் இல்லை. பழசை நினைக்கமாட்டேன். எதிர்காலத்தைக் குறித்து யோசிக்கமாட்டேன். இருப்பதை தக்க வைப்பதுதான் வாழ்க்கை. நான் பிஸியாக இருந்தபோது இந்தியில் ‘தங்கப்பதக்கம்’ உட்பட சில வாய்ப்பு வந்தது. மொழி தெரியாத ஊரில் பத்தோடு
பதினொன்றாக இருப்பதற்கு பதில் நம்மூரில் ராணியாக இருந்தால் போதும் என்று நினைத்திருக்கிறேன். சாப்பாடு விஷயத்திலும் மனசுக்கு பிடித்ததை சாப்பிடுகிறேன்.”

“நிறைவேறாத ஆசை?”

“பள்ளிக்கூடம் போய் படிக்காததுதான் என் வாழ்க்கையில் உள்ள ஒரே குறை. நானும் கம்ப்யூட்டர், ஆங்கிலம் என்று சில விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி பண்ணினேன். ஆனால் எதுவும் சொல்லும்படி இல்லை. ஆனால் எந்த ஊருக்கு போனாலும் மேனேஜ் பண்ற அளவுக்கு நாலெட்ஜ் இருக்கு.’’

- சுரேஷ்ராஜா