சிஐடி போலீஸாக பாக்யராஜ்!



தமிழ் சினிமாவில் ஒரு படம் இயக்குவதே இமாலய சாதனையாக இருக்கும்பட்சத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்ஷேவா. ‘டீக்கடை பெஞ்ச்’, ‘என் காதலி சீன் போடுறா’ போன்ற படங்களை அடுத்து இவர் இயக்கி வரும் படம் ‘என்னை சுடும் பனி’. படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்தவரிடம் பேசினோம்.

“டைட்டிலே இலக்கியம் மாதிரி இருக்கே?”

‘‘இது பக்கா கமர்ஷியல் படம். கதைன்னு பெரிசா கிடையாது. வெட்டியா ஊர் சுற்றும் நாயகனுக்கு நாயகியை கண்டதும் காதல் வருகிறது. நாயகியோ உழைப்பின் மகத்துவத்தை உணர்ந்தவராக சொந்தமாக பிசினஸ் பண்ணுகிறார். நாயகனையும் தன்னைப் போல் வொர்த்தான ஆளாக மாற்ற முயற்சிக்கிறார். இந்த நிலையில் காதலர்களிடையே பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனை என்ன, பிரச்சனைக்கான காரணம் என்ன, பிரச்சனையிலிருந்து காதலர்களால் வெளியே வர முடிந்ததா என்பதை ஆந்திரா, தமிழ் நாடு என்று எல்லா ஸ்டேட் மசாலாவையும் சேர்த்து திரைக்கதை பண்ணியிருக்கிறேன்.”

“ரொம்ப வித்தியாசமான கதை சார். ஹீரோ யாரு?”

“நாயகனாக வெற்றி பண்ணுகிறார். இவர் நான் இயக்கிய ‘டீக்கடை பெஞ்ச்’, ‘என் காதலி சீன் போடுறா ’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய பெர்ஃபாமன்ஸ் பிடித்திருந்ததால் இதில் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன். என் நம்பிக்கைக்கு உயிர் கொடுக்குமளவுக்கு பிரமாதப்படுத்தி நடித்தார். இந்தப் படத்துக்குப்  பிறகு அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கு. அந்தளவுக்கு திறமையான நடிகர்.”

“ஹீரோயின்?”

“உபாசனா. வட இந்தியப் பெண். ஏற்கனவே ‘டிராபிக் ராமசாமி’ உட்பட சில படங்கள் பண்ணியிருக்கிறார். சென்னையில் செட்டிலானவர் என்பதால் தமிழ் நல்லாத் தெரியும். லேங்வேஜ் ப்ராப்ளம் இல்லை என்பதால் எளிதாக வேலை வாங்க முடிந்தது. காதல் காட்சிகளில் நிஜ காதலர்களே தோற்குமளவுக்கு அற்புதமாக நடித்தார்கள். சமீப காலங்களில் வெளிவந்த காதல் படங்களில் இந்த ஜோடி மாதிரி எந்த ஜோடிக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகியிருக்காது.”

“மற்ற நட்சத்திரங்கள்?”


“இயக்குநர் கே.பாக்யராஜ் சார் சி.ஐ.டி. கேரக்டர் பண்ணியிருக்கிறார். சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவது எல்லாருக்கும் வாய்க்காது. சினிமாவுக்கு வரும் இளைஞர்களிடையே பாக்யராஜ் சாரின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும். ஏன்னா அவர் அளவுக்கு ஸ்கிரீன்ப்ளே அமைப்பது என்பது கடினம். அந்தவகையில் நான் வியந்து பார்த்த அவருடன் வேலை பார்த்தது அருமையான அனுபவம். படப்பிடிப்புக்கு சொன்ன நேரத்துக்கு முன்பே வந்துவிடுவார்.

அவர் கொடுக்கும் சின்னச் சின்ன  ஐடியா யூஸ்புல்லாக இருக்கும். முதல் நாள் படப்பிடப்பில் ஆஸ்பிட்டல் காட்சியை எடுத்தேன். கேரவன் நிறுத்துமளவுக்கு இட வசதி இல்லாத இடம். ஃபேன் வசதியும் இல்லை. ஆனால் சார் எதையும் பொருட்படுத்தாமல் பிரமாதமா பண்ணிக் கொடுத்தார். அதேபோல மனோபாலா, சிங்கம்புலி , சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், சுமா பூஜாரி உட்பட படத்தில் நடித்த அனைவரும் பெரிய ஒத்துழைப்பை கொடுத்தார்கள்.”

“டெக்னீஷியன்ஸ்?”

“அருள் தேவ் மியூசிக் பண்ணியிருக்கிறார். கானா சரண், வசந்த் ஆகியோருடன் நானும் பாடல்கள் எழுதியிருக்கிறேன். டேஞ்சர் மணி சண்டைக்காட்சி அமைத்திருக்கிறார். படத்துல மூணு ஃபைட். மூன்றுமே பேசப்படும்.  வெங்கட் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். விளம்பரப் படங்களைப் போல் கலர்ஃபுல்லாவும் கதைக்கு ஏற்றமாதிரியும் பண்ணியிருக்கிறார்.  இந்தப் படத்தை எல்லாத் தரப்பு ரசிகர்களும் பார்க்கும்படியாக பண்ணியிருப்பது தான் படத்தின் சிறப்பு’’“அடுத்து?”“விரைவில் சொல்லுகிறேன். அந்தப் படத்தோட மொத்தப் படப்பிடிப்பையும் வெளிநாட்டில் வைக்க திட்டமிட்டிருக்கோம்.”

- சுரேஷ்ராஜா