கொரில்லா



அரசியல் பேசும் வங்கிக் கொள்ளையர்!

காலையில் மாநகரப் பேருந்துகளில் திருட்டு, பகலில் மருந்துக்கடையில் வேலை, மாலையில் மருத்துவர் தொழில் என்று இருக்கும் நாயகன் ஜீவா, வேலை இழந்த சதீஷ், சினிமா நடிகர் ஆசையில் இருக்கும் விவேக் பிரசன்னா, வறுமையில் தற்கொலை முடிவுக்குச் சென்று திரும்பிய விவசாயி மதன்குமார் ஆகியோரோடு நாயகன் ஜீவாவின் குழந்தை போல இருக்கும் ‘காங்’ என்று அழைக்கப்படுகிற சிம்பன்சி...

இவர்கள் ஐவரும் சேர்ந்து,  பெரிய அளவில் பணம் வேண்டி ஒரு வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு திருடச் செல்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு திரும்பும்போது சிம்பன்சியின் சுட்டித்தனத்தால் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். பிறகு, போலீசிடம் இருந்து தப்பித்தார்களா, இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

ஜீவா ரெகுலராக நடிக்கும் ‘மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்’ என்பது போன்ற சாதாரண கதாபாத்திரத்தில், எப்போதும் போல நடித்திருக்கிறார். சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் சிரிப்பு மூட்டுகிறார்கள். யோகிபாபு வந்தவுடன் அது இன்னும் அதிகமாகிறது. பிரியாணிக் காட்சி வயிறு வலிக்க வைக்கிறது. நாயகி ஷாலினி பாண்டேவுக்கு பெரிதாக வேலையில்லை.

ஜீவாவுடன் நடித்திருக்கும் சிம்பன்சி, ஒரு உதவியாளர் போலவே எல்லா வேலைகளையும் செய்கிறது. அது பாசத்தோடு ஜீவாவை அணைத்துக் கொள்வதும், வங்கியில் யோகிபாபுவுடன் ஒட்டிக் கொள்வதும் ரசிக்கத்தக்க காட்சிகள்.வங்கிக் காட்சிகளை வித்தியாசமான கோணங்களில் காண்பித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓ.கே.
ஏனோதானோவென்று போய்க்கொண்டிருக்கும் படம் வங்கிக்குள் நுழைந்தவுடன் வேகம் பிடிக்கிறது.

எவ்வித நம்பகத்தன்மையுமில்லாத வங்கிக் கொள்ளைக் காட்சிகள், விவசாயக் கடன் தள்ளுபடி என்கிற கோரிக்கை வந்ததும் வேறு வடிவம் எடுக்கிறது. அதோடு, இந்தித் திணிப்பு உள்ளிட்ட சமகால அரசியல் விமர்சனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. விவசாயிகளின் அவல நிலையை நகைச்சுவை கலந்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்த இயக்குநர் டான் சாண்டியின் எண்ணம் போற்றுதலுக்குரியது. மொத்தத்தில் இந்த கொரில்லா ஜீவாவின் மதிப்பை உயர்த்தும் படமாக வந்துள்ளது.