நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு



டைட்டில்ஸ் டாக்-122

இந்த உலகத்தில் துணைவி இல்லாமல் கூட சிலர் இருக்கலாம். ஆனால் நட்பின்  துணை இல்லாமல் யாருமே இல்லை எனலாம். எனக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி. என்னுடையது கொஞ்சம் பெரிய குடும்பம்.
ஐந்து தாய் மாமாக்கள், பெரியப்பா, சித்தப்பா என்று உறவுகள் அதிகம். உறவுகளாக இருந்தாலும் குடும்பத்தில் என் வயதுள்ளவர்கள் அதிகமாக இருந்ததால்,  எல்லோரும் நண்பர்களாகவே பழகுவோம். குடும்பத்திலேயே நண்பர்கள் இருந்ததால் வெளி உலகில் நண்பர்களைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

அந்த வகையில் எனக்கு வெளி நண்பர்கள் மிகவும் குறைவு. வெளி உலகில் அதிகமாக நட்போடு சுந்தர கணேஷ் என்ற நண்பனிடம் பழகியிருக்கிறேன். அவன்தான் என்னுடன் அதிகமாக டிராவல் பண்ணியிருக்கிறான். இவனைத் தவிர தர், சங்கர், பாஷா, சைமன் ஜேசுராஜ், ஜெயராமன் என்று இன்னும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும்போது ஆரம்பித்த எங்கள் நட்பு இன்றும் தொடர்கிறது.

முப்பது வருடங்கள் கடந்தும் நண்பர்களாக நாங்கள் பழகி வருகிறோம். இன்று எல்லோரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். சிலர் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார்கள்.பாண்டிச்சேரி என்றதும் உங்களுக்கு அந்த ஞாபகம்தான் வரும். ஆனால் உண்மையைச் சொல்வதாக இருந்தால் நாங்க யாருமே சரக்கு அடிக்கமாட்டோம். மற்றபடி அராத்துன்னு பார்த்தால் அதுவும் இருக்காது.

நாங்கள் எந்த விஷயம் பண்ணினாலும் உடனே வீட்டுக்கு தகவல் போய்விடும். அதனாலேயே பாதி அராத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டோம். கல்லூரி படிக்கும்போதுதான் கொஞ்சம் சுதந்திரமாக இருந்தோம்.என்னிடமும் என் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளிடமும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்ததற்கு சில காரணங்கள் இருக்கு. என்னுடைய அப்பா பாண்டிச்சேரி சாராய ஆலையில் சூப்பர்வைசராக வேலைபார்த்தார். அப்பாவுக்கு மதுப் பழக்கம் கிடையாது. அப்பாவுடன் வேலை செய்தவர்களில் பலர் மதுவுக்கு அடிமையாகி இளம் வயதில் இறந்ததை நாங்கள் நேரில் பார்த்துள்ளோம்.  

பஸ் ஸ்டாண்டில் இருந்து  என்னுடைய பள்ளிக்குச் செல்வதாக இருந்தால் ஏழு பார்களை கிராஸ் பண்ணியாக வேண்டும். சில நூறு மீட்டர் தொலைவில் ஏழெட்டு கடைகள் இருக்கும். பார் வாசலில் கல்யாணத்துக்கு வந்தவர்களில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையோடு ஒன்று இரண்டு பேராவது கீழே வீழ்ந்திருப்பார்கள். இந்தக் காட்சிகளை அடிக்கடி பார்க்கும்போது எனக்கு மட்டுமில்ல, யாருக்கும் கண்டிப்பாக குடிக்கத் தோன்றாது. அதுமட்டுமில்ல, குடித்தால் என்ன நடக்கும் என்பதை நேரில் பார்க்கும்போது குடிக்கத் தோன்றாது.

என்னுடைய நட்பு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்றால், என் நண்பனுடைய அப்பாவின் மரணம். அவர் பெயர் சண்முகம். நண்பன் கல்லூரியில் சேரும்போது அப்பா-மகனுக்கிடையே எந்தப் பிரிவில் சேருவது என்ற பிரச்சனை வந்தது. நண்பனின் அப்பா சொன்ன பாடப்பிரிவில் நண்பன் சேராததால் அவனுடைய அப்பா தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் அவர் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு கோழையானவர் அல்ல. மிலிட்டரியில் பணிபுரிந்தவர். நண்பனின் அப்பா மரணம் என்னைப் பாதித்ததால்தான் ‘நட்பே துணை’ படத்தில் ஹாக்கி கோச் கேரக்டருக்கு சண்முகம் என்று பெயர் வைத்தேன். எப்போதும் ஜாலியாக இருந்த என் நண்பன் தந்தையின் மரணத்துக்குப் பிறகு அமைதியாகிவிட்டான்.

என்னுடைய அப்பா கண்டிப்பானவர். அடிக்கிற மாதிரி தெரியும் ஆனால் அடிக்கமாட்டார். பதினைந்து வருடங்களுக்கு முன் சினிமாவுக்கு போறேன் என்றால் என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னை சென்னைக்கு அனுப்பாமல் இருந்ததற்கு காரணம் நான் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்தார் அப்பா.

அன்று என் அக்காவின் நினைவு நாள். அந்த நாளில் அப்பா அன்னதானம் போன்ற தர்ம காரியங்கள் பண்ணுவார். அதுதான் சமயம் என்று என்னுடைய ஆசையை அப்பாவின் நண்பர் வேல்முருகன் என்ற அங்கிளிடம் தெரிவித்து அப்பாவிடம் சொல்லச் சொன்னேன்.

அப்பா என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அவரே சென்னைக்கு வந்து ரூம் எடுத்துக் கொடுத்ததோடு மாதாமாதம் பணமும் அனுப்பி வைத்து என் லட்சியத்துக்கு துணை நின்றார். அந்த இடத்தில் என்னுடைய அப்பா ஒரு நண்பனாக மாறியதை மறக்க முடியாது.

சென்னையில் சிவக்குமார் என்ற குறும்பட இயக்குநரிடம்தான் என்னுடைய சினிமா வாழ்க்கை ஆரம்பித்தது. அடுத்து ராஜேஷ், ‘மான் கராத்தே’ இயக்குநர் திருக்குமரன், ‘பொன்மாலைப் பொழுது’ இயக்குநர் ஏ.சி.துரை ஆகியோரின் நட்பு கிடைத்தது. வெற்றி பெற்ற பிறகு ஆயிரம் சொல்லலாம். ஆனால், நான் சொல்வது உண்மை.

சினிமாவில் சிபாரிசு இல்லை என்றால் முன்னேறுவது கடினம். நண்பரும் இயக்குநருமான திருக்குமரன் எனக்கு பலவிதத்தில் உதவியாக இருந்தார். அப்புறம், நண்பரும் இயக்குநருமான ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணனையும் மறக்க முடியாது. அவருடைய நட்பும் போற்றுதலுக்குரியது. ‘ரெமோ’ வில் வேலை செய்யும்போது என்னை மதித்து முழுச் சுதந்திரம் கொடுத்தார்.

என் முதல் பட நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி ப்ரோவைப் பற்றி எப்படி சொல்லாமல் இருக்க முடியும்? நான் படம் பண்ண நினைத்தபோது கதை எழுதினேன். எழுதி முடித்ததும் ஆதி ப்ரோதான் நினைவுக்கு வந்தார். அவரிடம் கால்ஷீட் கேட்டேன். ஆனால் அவர் யோசித்தார். அப்போது அவர் ‘மீசைய முறுக்கு’ என்ற ஒரே படத்தில் நடித்திருந்ததால் மியூசிக்கில் கவனம் செலுத்தப் போவதாகச் சொன்னார்.

எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க என்றார். பிறகு ஒரு நாள் அழைத்து கதை கேட்டுவிட்டு, நான் நடிக்கிறேன் என்றார். இரண்டு பேரும் சேர்ந்து தயாரிப்பாளரைத் தேடினோம். ‘மீசைய முறுக்கு’ படம் ஜெயித்ததால் சுந்தர்.சியிடம் அழைத்துச் சென்றார். சுந்தர்.சி. சார் சொன்னதைவிட அதிகம் செலவு பண்ணினார். சுந்தர்.சி சார் எந்த ஒரு விஷயத்திலும் புண்படும்படியாக கண்டிக்க மாட்டார். நட்பாகச் சொல்வார்.

எனக்கு சினிமாவுக்கு வெளியே ஒரு தோழி இருக்கிறார். அவரும் நானும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். அவருடைய குடும்பமும் எங்கள் குடும்பமும் இப்போதும் நட்போடு பழகி வருகிறோம். நண்பர்களே, ஒரு மாணவன் பிடிக்காத ஸ்கூலுக்கு போகிறான் என்றால் அதற்குக் காரணம் நண்பர்கள். உண்மையான நண்பன் நம்முடன் இருந்தால் எவ்வளவு பெரிய கஷ்டமும் கண்ணுக்குத் தெரியாது. நல்ல நண்பர் கிடைக்க நாம்  ஆசைப் படுவது போல் நாமும் பிறருக்கு நண்பனாக இருந்தால் வாழ்க்கை இனிக்கும்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)