ரீல் அல்ல ரியல்!



ரீல்-விமர்சனம்

பெற்றோர் இல்லாத சூழ்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து சிறியளவில் திருடிப் பிழைப்பு நடத்துகிறார் நாயகன் உதய்ராஜ். குடும்பத்தை கரை சேர்க்க பிழைப்பு தேடி பட்டணம் வருகிறார் நாயகி அவந்திகா. ஆனால் வந்த இடத்தில் அவர் மீது கறைபடுகிறது.

இந்தச் சூழ்நிலையில் நாயகியைக் கண்டதும் நாயகனுக்கு காதல் மலர்கிறது. கூடவே வில்லங்கமும் வருகிறது. நாயகனும் நாயகியும் வாழ்க்கையில் ஒன்றிணைந்தார்களா என்பது மீதிக் கதை.உதய்ராஜ் நடிப்பில் ஓரளவு தேறுகிறார். அவந்திகா அழகு. ஆனால் நடிப்பு குறைவு. நண்பராக வரும் சரத், முதலாளியாக வரும் கருடு ஆகியோர் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

நாயகனும் நாயகியும் காதலை ஷேர் செய்யும் காட்சியில் டைரக்டரின் டச் பார்க்க முடிகிறது.  சந்தோஷ் சந்திரன் இசையில் பாடல்கள் ஓ.கே. ஒளிப்பதிவாளர் பிரேம் ரீல் பை ரீல் கலர்ஃபுல்லாக காண்பித்துள்ளார். அரதப் பழசான கதையாக இருந்தாலும் வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை சுட்டிக்காண்பித்து படைப்பாளியாக தன் கடமையை  நிறைவேற்றியிருக்கிறார் இயக்குநர் முனுசாமி.