சர்வதேச விருதுகளை குவிக்கும் சிவரஞ்சனி!



இயக்குநர் வசந்த் இப்போது வசந்த் எஸ்.சாய். அவரது படங்களில் ஏதாவது ஒரு புதுமை இருக்கும். கதையில், திரைக்கதையில், நடிப்பவர்களில், பாடல்களில் இப்படி ஏதோ ஒன்று.
இப்போது அவரே தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’. பொதுவாக எழுத்தாளர்களின் நாவல், அல்லது சிறுகதைகள் படமாகும். ஆனால் இதில் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூன்று எழுத்தாளர்களின் கதைகளை ஒரே திரைக்கதையாக்கித் தருகிறார் வசந்த் சாய்.

“இது புதுமையா, முதன் முறையா என்பதெல்லாம் தெரியாது. இப்படிச் செய்தால் எப்படி இருக்கும் என்று எழுந்த என் கேள்வியின் பதில்தான் இந்த முயற்சி. மூன்று பேருமே நான் மதிக்கும் எழுத்தாளர்கள். இந்த சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளும் அதை சவாலாக அவர்கள் ஏற்று வெற்றி பெறுகிறதையும் இந்த மூன்று எழுத்தாளர்களின் கதையும் பேசுகிறது. அவைகள் வெவ்வேறு பெண்கள், வெவ்வெறு களங்கள். அவற்றை திரைக்கதையின் மூலம் ஒருங்கிணைத்திருக்கிறேன்.

என் குருநாதர் கே.பாலச்சந்தர் ஆளுமை நிறைந்த பெண்களை திரையின் வழியாக இந்த சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அந்த பாணியில்தான் இந்த படமும் வடிவைமைக்கப்பட்டிருக்கிறது. பார்வதி திருவோத்து, காளீஸ்வரி னிவாசன், லட்சுமிப்ரியா சந்திரமவுலி என நடித்திருக்கும் நடிகைகளும் ஆளுமை நிறைந்தவர்களாக இருந்தது எனது பணியை இன்னும் எளிமை ஆக்கியது” என்கிறார் வசந்த் சாய்.

பாடல்கள் இல்லாத படங்கள் நிறைய உண்டு. ஆனால் இதில் பின்னணி இசையே இல்லை என்பதும் புதுமையா எனக் கேட்டால், “புதுமையாக எதையாவது செய்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்யவில்லை.

நம் நிஜ வாழ்வின் எந்த நிகழ்வும் பின்னணி இசையோடு நடப்பதில்லை என்பதே யதார்த்தம். கதையோடு ஆடியன்சை இன்னும் நெருக்கமாக்க வேண்டும் என்பதற்காகத்தான் பின்னணி இசையை தவிர்த்தேன். இயல்பான ஒலிகளே படத்தின் பின்னணி இசையாக ஒலிக்கும்” என உறுதியாக சொல்கிறார் வசந்த் சாய்.

படம் தமிழ்நாட்டில் இன்னும் ரிலீசாகவில்லை. உலக பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. ‘முதலில் இங்குதானே காட்டியிருக்க வேண்டும்?’ என்றால் புன்முறுவலோடு பேசுகிறார்.

“ஒரு தமிழ்ப்படம் உலகத் தளத்தில் துணிச்சலுடன் வலம் வருகிறதென்றால் அதற்கு காரணம் அது பேசும் மனிதம், பெண்ணியம், பேரன்பு. நம் மக்கள் குழந்தை நன்றாக இருந்தால் தூக்கி தாலாட்டி கொஞ்சி மகிழ்வார்கள். சிவரஞ்சனியையும் கொஞ்சுவார்கள். அதற்கு முன்னால் அவளை உலகின் முன்னால் அறிமுகப்படுத்துகிற முயற்சிதான் இது.

இப்போது உலகின் மூலை முடுக்கெல்லாம் சிவரஞ்சனி அறிமுகம். ஜப்பானில் படம் திரையிடப்பட்டபோது 72 வயது ஜப்பானிய பெண் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘நானும் சிவரஞ்சனிதான்’ என்று சொன்னபோது நல்ல படம் கொடுத்த இயக்குநராய் என்னால் கர்வம் கொள்ள முடிந்தது.

சிவரஞ்சனியிடம் என் தாயை கண்டேன், என் சகோதரியை கண்டேன் என பெண்கள் உருகி நின்றபோது சிவரஞ்சனி ஜெயித்து நின்றாள்.தமிழ் மக்களுக்கு எப்போ சிவரஞ்சனியை காட்டப்போறீங்க? என்றால் ‘மிக விரைவில்’ என்று ஒற்றை வரியில் சொல்லி சிரிக்கிறார் வசந்த் சாய்.

- மீரான்