யூத் டான்ஸ் மாஸ்டர் தினேஷ்



டைட்டில்ஸ் டாக்-134

யூத் பருவம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஸ்பெஷல். அந்தப் பருவம்தான் எதிர்காலத்தில் நாம் யார் என்பதை தீர்மானிக்கும் பருவம். சிலருக்கு இளைமைக் கால லட்சியங்கள் நிறைவேறாது. ஆனால் என் விஷயத்தில் இளம் வயது லட்சியத்தை அடைய முடிந்தது.
எனக்கு பூர்வீகம் அறந்தாங்கி. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. நாங்கள் மிகவும் சாதாரண குடும்பம். அப்பாவுக்கு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை. அம்மா இல்லத்தரசி. எனக்கு இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள்.

இளம் வயதில் எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருந்தார்கள். அதில் மறக்க முடியாத நண்பர்கள் கணேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன். அந்த நண்பர்கள்தான் யூத் பருவத்தில் என்னுடைய ஸ்கூல் ஃபீஸ், அவசரத் தேவைகள் என்று பல தேவைகளை சந்தித்தார்கள். அவர்களுடனான நட்பு இப்போதும் தொடர்வது மகிழ்ச்சி.

யூத் பருவத்தில் நான் கல்லூரிக்குச் செல்லவில்லை என்றாலும் கல்லூரி மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. சின்ன வயதிலிருந்தே எனக்கு டான்ஸ் மீது தீராத காதல்.என்னுடைய மூத்த அண்ணன் ரவிக்குமாரும் அண்ணனின் நண்பர் நாராயணன் அண்ணனும்தான் என்னை முதன் முதலாக மேடை ஏற்றியவர்கள். அவர்கள்தான் எங்கள் குடியிருப்புப் பகுதியில் நடந்த நவராத்திரி விழாவில் நடனம் ஆட வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்கள்.

நான் நடனமாடுவதைப் பார்த்துவிட்டு என்னுடைய மூத்த அண்ணன் நந்தனம் கல்லூரி மாணவர்களும் டான்ஸர்ஸுமான தீனா, கர்ணன் ஆகிய இரண்டு அண்ணன்களிடம் ‘என் தம்பி நல்லா டான்ஸ் ஆடுவான். அவனை உங்க குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள்’’ என்று அந்த நடனக் குழுவில் சேர்த்துவிட்டார். அந்தவகையில் நான் பிரபல டான்ஸ் மாஸ்டராக அறியப்படுகிறேன் என்றால் அதற்குக் காரணம் என் அண்ணன்.

இளம் வயதிலேயே நான் டான்ஸராக அறியப்படுவதற்கு இன்னொரு காரணமாக இருந்தவர் நடிகர் நாகேந்திரபிரசாத். கல்லூரிக் குழு மூலம் நாகுவின் நட்பு கிடைத்தது. அவர் மூலம் ராஜு மாஸ்டர், பிரபுதேவா மாஸ்டரின் அறிமுகம் கிடைத்தது. பல வருடங்கள் அவர்களின் மாணவனாக இளம் வயதிலேயே நடனம் கற்றுக்கொண்டேன்.

2001 ஆம் ஆண்டு என் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டில்தான் டான்ஸ் மாஸ்டராக புரோமோட்டானேன்.தெலுங்கில்தான் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானேன். தமிழில் ‘மனதை திருடிவிட்டாய்’ படத்தில்தான் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. நான் மாஸ்டராக பண்ணப் போகிறேன் என்றதும் பிரபு மாஸ்டர்தான் முதன் முதலாக வாய்ப்பு கொடுத்தார்.

‘ஷாஜகான்’ படத்தில் ‘மின்னலைப் பிடித்து... மின்னலைப் பிடித்து’ பாடலுக்கு நடனம் அமைத்திருந்தேன். அஜித் சாருடன் ‘ரெட்’ படத்தில் வேலை பார்த்துள்ளேன். இந்தப் படங்களுக்குப் பிறகு பண்ணிய படம்தான் ‘யூத்’.யூத் பருவத்தில் ‘யூத்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த விஜய் சாரை மறக்க முடியாது. அவர்தான் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ஒளிவிளக்கு.

அதன்பிறகு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அதனால் விஜய் சாருக்கு என்றும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். கடவுள் நேரில் வந்து உதவி செய்வதில்லை. விஜய் சாரை அந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.இப்போது நான் ‘பிகில்’ படத்திலும் ஒர்க் பண்ணியிருக்கிறேன். இன்றளவும் எனக்கு வாய்ப்பு வருகிறது அல்லது நான் இதே துறையில் பிஸியாக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் சம்பாதித்து வைத்துள்ள நல்ல பெயர். இதை தலைக்கனமாகச் சொல்லவில்லை.

நான் பண்புள்ளவனாக மாறக் காரணமாக இருந்தவர்கள் ராஜு மாஸ்டரும் பிரபுதேவா மாஸ்டரும். அவர்கள்தான் எனக்கு சினிமாவை முழுமையாக கற்றுக்கொடுத்த குருநாதர்கள். சினிமாவில் பழக்க வழக்கங்கள், மரியாதை  முக்கியம்.  அவர்கள்தான் எனக்கு அதை கற்றுக் கொடுத்தார்கள்.
யூத் பருவம் என்பது துள்ளிக் குதித்து விளையாட வேண்டிய பருவம்.

அந்த வயதில் மிதிவண்டி, பைக் என்று என்னுடைய எந்த ஒரு தேவையும் எனக்கு எளிதில் கிடைக்கவில்லை. எல்லாமே என் உழைப்பில் வாங்கியவை. சிறுகச் சிறுக பணம் சேர்த்து சீட்டு கட்டித்தான் என் ஆசைகளை அடைந்தேன்.

இளம் வயதிலேயே கார் வாங்கினேன். ‘யூத்’ ஹிட்டுக்குப் பிறகு கார் வாங்கினேன். கார் வாங்கியதும் முதன் முதலாக ராஜு மாஸ்டரிடம் காண்பித்தேன். அடுத்து விஜய் சாருக்கு காண்பித்தேன். அவர் வண்டியை ஓட்டிப் பார்த்து வாழ்த்து சொன்னார்.

சிலர் குடும்பச் சூழ்நிலையால் தங்கள் லட்சியத்தைவிட்டு பிழைப்புக்காக, கிடைக்கும் வேலையில் சேர்ந்துவிடுகிறார்கள். என்னுடைய மூத்த அண்ணன் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவார். டிவிஷன் அளவிலான போட்டிகளில் பின்னியெடுப்பார். தொடர்ந்து அவர் கிரிக்கெட் விளையாடியிருந்தால் ஸ்டேட், நேஷனல் என்று வளர்ந்திருப்பார். ஆனால் குடும்பச் சூழல் காரணமாக தன் லட்சியத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேலைக்குப் போய்விட்டார்.

இரண்டாவது அண்ணன் சிறந்த மோட்டார் மெக்கானிக். கார், புல்லட் போன்ற வாகனங்களின் வேகத்தை மாற்றி அமைக்கக்கூடியவர். தொடர்ந்து அவர் அந்தத் துறையில் இருந்திருந்தால் அவரிடம் நூறு பேர் வேலை பார்த்திருப்பார்கள். அவரும் குடும்பச் சூழ்நிலையால் வேறு வேலைக்குப் போய்விட்டார். இப்போது மீண்டும் அந்தத் துறைக்குத் திரும்பியதால் அவருக்குக் கீழே பத்து பேர் வேலை செய்கிறார்கள்.

நானும் எனது லட்சியத்திலிருந்து  தடம் மாறியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என்னை ஃபாரீன் வேலைக்கு அனுப்ப அம்மா பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து ரெடி பண்ணி வைத்திருந்தார்.அப்போது அம்மாவிடம் சின்னதாக ஒரு டீல் போட்டேன். ‘சினிமாவில் முயற்சி செய்கிறேன். க்ளிக் ஆனால் சினிமாவில் தொடர்கிறேன். இல்லை என்றால் வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறேன்’ என்றேன். நல்ல வேளை,  சினிமா எனக்கு கை கொடுத்தது. என்னுடைய திறமைக்கு அங்கீகாரமாக மாநில அரசு விருது, ‘ஆடுகளம்’  படத்தில் இடம் பெற்ற ‘ஒத்த சொல்லால’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

இன்றைய யூத் அனைவரும்  திறமைசாலிகள். அவர்களுக்குள் ஏராளமான திறமைகள்  ஒளிந்திருக்கிறது. அவர்கள் அந்தத் திறமை மீது நம்பிக்கை வைத்து கடைசி வரை அல்லது கிடைக்கும் வரை தொடரவேண்டும். சிலருக்கு வாய்ப்பு உடனே கிடைக்கும். சிலருக்கு தாமதமாகலாம். அதுவரை முயற்சியும் பொறுமையும் வேண்டும்.

சில சமயங்களில் நம்மைப் பார்த்து மனசுல ‘யூத்’ன்னு நினைப்பு என்று சொல்வார்கள். அது சிரிப்புக்காக சொல்கிறார்களா, சீரியஸாக சொல்கிறார்களா என்று தெரியவில்லை. உங்கள் மனதில் எப்போதும் யூத் என்றே உங்களை நினைத்துக் கொள்ளுங்கள் அல்லது அதுபோன்ற எண்ணங்கள் உள்ளவர்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். நான் இன்றளவிலும் யூத்தாக இருக்கக் காரணம் என் மனைவி. அவர்தான் நான் யூத் போல் செயல்படக் காரணம். மனைவிக்கு நன்றி.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)