மிக மிக அவசரம்



Urgent please!

பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய பிரமுகர்கள் ஓரிடத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவதற்குப் பல மணி நேரங்கள் முன்பாக சாலையோரம் காவல் பணியில் காவலர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்தக் காட்சியை நாம் சாதாரணமாகக் கடந்து போவதுண்டு.

அந்த சமயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அழுத்தமாக பேசும்படம்தான் இந்த ‘மிக மிக அவசரம்’.

தனக்குக் கீழே பணிபுரியும் ஒரு பெண் காவலர் மீது உயரதி காரிக்குக் கோபம். அதனால் அந்தப் பெண் காவலரைப் பழிவாங்கும் விதமாக அதிகாரி செய்யும் செயலும், அதனால் என்ன நடக்கிறது  என்கிற சின்ன கதையை அடிப்படையாகவும் கொண்ட இந்தப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெண் காவலராக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா மிக இயல்பாக நடித்து கேரக்டருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். குடும்பச் சிக்கல், பணியிடச் சிக்கல் உள்ள பெண் காவலர்களின் நிலையை அந்தப்பாத்திரம் வெளிப்படுத்துகிறது. எல்லா சிக்கல்களையும் தாண்டி கடமை உணர்வோடு மக்களை விரட்ட குரல் உயர்த்தும் நேரத்தில் சட்டென அவர் காட்டும் வேறுபாடு பாராட்டத்தக்கது.

காவல் ஆய்வாளராக முத்துராமன், தனக்குக் கீழே உள்ள காவலரைக் குரூரமாக வதைக்க எண்ணும் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.
சக காவலர்களாக நடித்திருக்கும் ராமதாஸ், வீ.கே.சுந்தர் ஆகியோர் தங்கள் நடிப்பால் பரிதாபத்துக்குரிய காவலர்களைப் பிரதிபலிக்கிறார்கள். பிரியங்காவின் காதலராக நடித்திருக்கும் ஹரீஷ்குமார், சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்கவைக்கிறார்.

 ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்து எல்லோரையும் கவனிக்க வைத்த அரவிந்தன், இந்தப்படத்திலும் ஈழத்தமிழராக வருகிறார். அவர் பேசும் வசனங்கள் மட்டுமின்றி அவருடைய பார்வையும் நம்மைச் சுடுகிறது.காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கும் சீமான், அதற்குரிய கம்பீரத்தோடு இருக்கிறார். காவல்துறையில் நிரம்பி வழியும் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கி அவர் பேசும்போது காதுகளுக்கு இதமாக இருக்கிறது.

பாலபரணியின் ஒளிப்பதிவில் பவானி, மேட்டூர் ஆகிய பகுதிகள் ஃப்ரெஷ்ஷாகத் தெரிகின்றன. கதைக்குத் தேவையான இசையைக் கொடுத்து கவனிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் இஷான் தேவ்.காவல் துறையில் இருக்கும் குறையை, குறிப்பாக பெண் காவலர்களுக்கு இருக்கும் குறையை சுட்டிக் காட்டியிருக்கும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி, அத்துடன் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் அவல நிலையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.