தவம்



தவத்துக்கு பலன் கிடைத்ததா?

சென்னையில் நல்ல வேலையில் இருக்கும் நாயகி பூஜாஸ்ரீ, தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை ஏதாவதொரு காரணம் சொல்லி தவிர்த்து வருகிறார். அதற்கான காரணம்,  கிராமத்து இளைனான வசி மீதான காதல். பூஜாஸ்ரீ- வசி காதலுக்கு வில்லனாக அவர்களது குழந்தைப்பருவ நண்பர் வருகிறார்.

காதலர்களின் முடிவைச் சொல்லவரும் காதல் கதையுடன், விவசாய நிலங்களை அபகரித்து மக்களுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் தொழிற்சாலை கட்ட நினைக்கும் கூட்டத்திற்கு எதிராகப் போராடும் சீமானின் கதையும் வருகிறது. இந்த இரண்டு கதைகளுக்கும் உள்ள தொடர்பும், காதல் ஜோடி சேர்ந்தார்களா,  இல்லையா, சீமான் தனது போராட்டத்தில் வெற்றிபெற்றாரா, இல்லையா  என்பதும்தான் படத்தின் மீதிக்கதை.

நாயகன் வசி நல்வரவு. கமர்ஷியல் பட நாயகனுக்குரிய எல்லா அம்சங்களோடும் இருக்கிறார். சண்டை மற்றும் நடனக்காட்சிகளில் தூள் கிளப்பு கிறார். நாயகி பூஜா நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் அங்க அசைவுகள் மூலம் உடல் அழகையும் காண்பித்து கவனிக்கவைக்கிறார். நகைச்சுவைக்கு பிளாக்பாண்டி, சிங்கம்புலி, தெனாலி, வெங்கல்ராவ் எனப் பலர் இருந்தும் காமெடி ஏரியா வீக்காக இருக்கிறது.  சிறிய வேடமாக இருந்தாலும் போஸ் வெங்கட் கவனிக்க வைக்கிறார்.

சீமான்தான் படத்தின் மிகப்பெரிய பலம். தொய்வு ஏற்படும் திரைக்கதையில் சீமானின் பகுதி நமக்கு உற்சாகம் கொடுப்பதோடு, படத்தை உன்னிப்பாக கவனிக்கவும் வைக்கிறது.

விவசாயிகளுக்காக மட்டுமின்றி விவசாயத்தின் பலம் தெரியாமல் இருக்கும் பொதுமக்களுக்காகவும் பேசும் சீமானின் அனைத்து வசனங்களும் வரவேற்புக்குரியவை.  அவருடைய நண்பராக நடித்திருக்கும் ஐகோ, மேகங்களை விரட்டிக் கொண்டு ஓடும் காட்சி, விவசாயிகளின் ஏக்கங்களைக் கண்முன் நிறுத்தி கண்களைக் கசிய வைக்கிறது.

படத்தின் இயக்குநர்கள் விஜயானந்த், சூரியன் ஆகிய இருவரும் படம் முழுக்க வருகிற வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகன் வசியின் மாமாவாக சூர்யனும், வில்லன் சிவண்ணாவாக விஜயானந்தும் நடித்திருக்கிறார்கள். காந்த் தேவாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. வேல்முருகனின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு இருக்கிறது.

நல்ல கதைக்களம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தவத்துக்கு முழுப் பலன் கிடைத்திருக்கும். இன்றைய காலகட்டத்தில் நம்பும்படியான கதையாக இல்லையென்றாலும் சமூகத்துக்கான படமாக எடுத்திருக்கும் விதத்தில் இயக்குநர்கள் விஜயானந்த்-சூரியன் முயற்சியைப் பாராட்டலாம்.