என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா



வெட்டி ஆபீஸரின் வீரசபதம்!

நண்பர்களுடன் சேர்ந்து குட்டிச் சுவரில் உட்கார்ந்து டைம் பாஸ் பண்ணும் வெட்டி ஆபீஸர் நாயகன் விகாஷ். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய மகன் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதை எண்ணி வருத்தப்படுகிறார் அப்பா டெல்லி கணேஷ்.மகனைத் திருத்துவதற்கு ஒரே வழி காதல்தான் என்று எண்ணி  பெண் ஒருவர் கடிதம் எழுதுவது போல அடிக்கடி விகாஷுக்கு கடிதம் எழுதுகிறார்.

அந்தக் கடிதத்தை நாயகி மதுமிதாதான் எழுதுகிறார் என்று நினைக்கும் விகாஷ் அவரிடம் தனது காதலைச் சொல்கிறார். ஆனால் மதுமிதாவின் குடும்பத்தார் அவரை அடித்து விடுகிறார்கள். விஷயம் அறிந்து டெல்லி கணேஷ் உண்மையைச் சொல்லி மதுமிதா குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்கிறார். அதில் அவமானம்தான் மிஞ்சுகிறது.

இதனால் மனம் உடைந்து போகும் டெல்லி கணேஷ் கவலையில் இறந்துவிடுகிறார். தனது அப்பாவின் மரணத்திற்குக் காரணமான மதுமிதாவையே தனது மனைவியாக்குவேன் என்று சபதம் போடும் விகாஷ்  அந்த சபதத்தில் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

அறிமுக நாயகன் விகாஷ் முதல் படம் போல் இல்லாமல் பொறுப்புடன் நடித்திருக்கிறார். காதல், காமெடி, நடனம், சண்டை என அனைத்திலும் தேர்ச்சி பெற்று தன்னை முழு கமர்ஷியல் நாயகனாக முன்னிறுத்துகிறார்.

பக்கத்து வீட்டுப் பெண் போல எளிமையாகவும் அளவான அழகோடும் இருக்கிறார் மதுமிதா.  நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்குகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் சித்ரா, அம்மா வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். தன்னுடைய அனுபவ நடிப்பால் இன்றைய அப்பாக்களின் மன வருத்தத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். ராமர், ராகுல் தாத்தா, அம்பானி சங்கர் ஆகியோரின் காமெடி செம ரகளை.

இயக்குநர் நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எளிமையான லொக்கேஷன்கள் என்றாலும் அவற்றை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். எஸ்.ஆர்.ராம் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.

இரண்டு மணி நேரம் ரசிகர்களை ஜாலியான மூடில் வைத்திருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கும் இயக்குநர் நவீன் மணிகண்டன் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.