பழைய சுஹாசினியா வாங்க மிஸஸ் மணிரத்னம்!



மின்னுவதெல்லாம் பொன்தான்-60

பல திரைக் கலைஞர்களுக்குள்  திரைத்துறையின் வேறுபல திறமைகளும் இருக்கும். ஆனால் அவர்கள் தங்களுக்கு சவுகரியமான ஒரு பிரிவில் செட் ஆகிவிட்டால் அதிலிருந்து அவர்கள் வெளிவரத் தயக்கம் காட்டுவார்கள். அதற்கு பல உதாரணங்கள் உண்டு.

தமிழ் சினிமாவின் பக்கா கமர்ஷியல் இயக்குநர் யார் தெரியுமா?

எம்.ஜி.ஆர். அவர் இயக்கிய  ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படங்கள் வெள்ளி விழா கண்டவை. தொடர்ந்து அவர் படம் இயக்கவில்லை. காரணம், நடிப்பது அவருக்கு இன்னும் சவுகரியமாக இருந்தது. அதேபோலத்தான்  சிவாஜியும். அவருக்கு தெரியாத சினிமா நுணுக்கம் இல்லை. ஆனால், அவர் படம் இயக்கவில்லை.

இந்த வரிசையில் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில்  ஒருவர் சுஹாசினி மணிரத்னம்.நடிகைகள் இயக்குநராவது மிகவும் அபூர்வம். அப்படியே  அவர்கள் இயக்குநரானாலும் குழந்தைகள் படம், காமெடிப் படம், குடும்பப் படம் என்று ஒரு சில படங்களை இயக்கி விட்டு ஒதுங்கி விடுவார்கள். ஆனால், ஒரே படம் இயக்கினாலும் அதை பக்கா சமூகப் பார்வை கொண்ட படமாக இயக்கினார் சுஹாசினி மணிரத்னம். அந்தப் படம் ‘இந்திரா.’

சுஹாசினி ஏதோ ஒரு ஆசைக்கு இயக்குநர் ஆனவர் இல்லை. அவர் சினிமாவுக்குள் வந்ததே ஒரு டெக்னீஷியனாகத்தான். ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராக சேர்ந்தார். ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘மெட்டி’ போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகத்தான் பணியாற்றினார்.

தன் படங்களில் தொடர்ந்து பணிபுரிந்த சுஹாசினியை கவனித்த மகேந்திரன், ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் அவரை ஹீரோயின் ஆக்கிவிட்டார். அதன்பிறகுதான் சுஹாசினிக்குள் இருந்த டெக்னீஷியன் மறைந்து நடிகை வெளிப்பட்டார். என்றாலும் அவருக்குள் ஒரு இயக்குநர் இருந்து கொண்டே இருந்தார்.  அதுதான் ‘இந்திரா’வில்  வெளிப்பட்டது.

‘இந்திரா’வில் அவரின் சித்தப்பா மகள் அனு ஹாசன்தான் ஹீரோயின். அரவிந்த்சாமி ஹீரோ. கிராமியப் பின்னணி கொண்ட கதையில். கிராமத்தில் புரையோடிக் கிடக்கிற ஜாதீய வன்மங்களை இளையதலைமுறை மாற்றி அமைப்பது மாதிரியான கதை. இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன், எடிட்டிங் லெனின் என பெரிய பேக்கேஜோடுதான் வெளிவந்தது. படம் பெரிய வெற்றி பெறவில்லைதான். ஆனாலும் படத்தை யாரும் குறை சொல்லவில்லை. ஒரு தரமான நல்ல இயக்குநர் கிடைத்தார் என்றே மீடியாக்கள் சொன்னது.

ஆனால்  அதன் பிறகு சுஹாசினி படம் இயக்கவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. என்றாலும் ‘ராவணன்’, ‘திருடா திருடி’, ‘உயிரே’, ‘இருவர்’ போன்ற படங்களுக்கு  வசனம் எழுதி தனக்குள் இருந்த படைப்பாளியை வெளிக் கொண்டு வந்தார்.

சுஹாசினி தனது சித்தப்பா கமல்ஹாசன் போன்று முற்போக்கு சிந்தனையாளர், மனதில் தோன்றியதை துணிச்சலாக பேசக்கூடியவர். அப்படிப்பட்டவர் படம் இயக்கினால். அந்தப் படம் உண்மையை பேசும். அது சினிமாவுக்கு நல்லது. இப்போதும் கெட்டுவிடவில்லை. கணவர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

சின்ன படம் பெரிய படம் என பல படங்களை தயாரித்து வருகிறது. இயக்குனர் சுஹாசினிக்கான வாசல்  கதவு விரிய திறந்தே இருக்கிறது.  வாருங்கள் இயக்குனரே…

(மின்னுவோம்)

●பைம்பொழில் மீரான்