தேசிய திறந்தநிலைப் பள்ளியின் பாடத்திட்டங்கள்!



ஆலோசனை

பொருளாதாரப் பின்னடைவு, உடல்நலக் குறைவு, பள்ளி சென்று நேரம் வீணாவதைத் தடுக்க, நேர மேலாண்மையை விரும்புதல், பணியாற்றிக்கொண்டே படித்தல், விரும்பிய அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்கள் பள்ளிகளில் இடம் கிடைக்காத நிலையில் அந்தப் பாடங்களைப் படித்தல், முன்னர் வேறு பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பள்ளிப்படிப்பை தொடர்தல் போன்ற தேவைகள் உள்ளவர்களுக்குத் தேசிய திறந்தநிலைப் பள்ளி (NIOS - National institute of open schooling) பெரிதும் பயன்படுகிறது.

பள்ளி செல்லாமல், அதற்கு இணையான படிப்பை, விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்து படிக்க உதவும் முறையாகும். 1989 ஆம் ஆண்டு முதல் செயலாற்றி வரும் இந்த அமைப்பு 1986 ஆம் ஆண்டின் கல்விக் கொள்கையின்படி, மத்திய அரசின் மனிதவளத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த அமைப்பின் சிறப்பம்சங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இம்முறையில் வழங்கப்படும் படிப்புகள் பாடத்திட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

NIOS  படிப்புகள்

1) OBE (Open Basic Education Programe) என்ற திறந்தவெளி அடிப்படைத் தொடக்கப் படிப்புகள் 6 முதல் 14 வயதிற்குள் உள்ளவர்களுக்காக வரையறுக்கப்பட்டுள்ளது.
a) OBE - A - மூன்றாம் வகுப்பிற்கு இணையானது
b) OBE - B - ஐந்தாம் வகுப்பிற்கு இணையானது
c) OBE - C - எட்டாம் வகுப்பிற்கு இணையானது
2) செகண்டரி படிப்புகள்
3) சீனியர் செகண்டரி படிப்புகள்.

வயதுத் தகுதி:செகண்டரி படிப்புகளுக்குக் குறைந்தபட்ச வயது 14 எனவும், சீனியர்
செகண்டரி படிப்புகளுக்கு 15 ஆகும். உச்ச வயது வரம்பு இல்லை.
என்ன மொழி ஊடகங்களில் படிக்கலாம்?

செகண்டரி படிப்புகளுக்கு ஹிந்தி, ஆங்கிலம், உருது, மராத்தி, தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், தமிழ், ஒடியா, ஊடகங்களிலும், சீனியர் செகண்டரி நிலையில் ஹிந்தி, ஆங்கிலம், உருது, பெங்காளி, குஜராத்தி, ஒடியா, ஊடகங்களில் படிப்புகள் தரப்படுகின்றன.

என்ன பாடங்கள்? எவ்வாறு பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்?
செகண்டரி நிலையில், ஹிந்தி, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், பெங்காளி, மராத்தி, தெலுங்கு,  குஜராத்தி, கனடா, பஞ்சாபி, அசாமிஸ், நேபாளி, மலையாளம், ஒடியா, அரபி, பெர்சியன், தமிழ் என்பவை குரூப் Aயில் உள்ள மொழிப் பாடங்கள். குரூப் Bயில் கணிதம் (Mathematics), Science and Technology (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்), சமூக அறிவியல் (Social Science) பொருளாதாரம் (Economics), ஹோம் சயின்ஸ் (Home Science) உளவியல் (Psychology), இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் (Indian culture and Heritage), கணக்கியல் (Accountancy), ஓவியம் (Painting), டேட்டா என்ட்ரி ஆபரேஷன் (Data Entry Operation) என்ற பாடங்கள் உள்ளன.

குரூப்-A-யிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மொழிப் பாடங்களுடன் மீதி குரூப்-B-யிலிருந்து தேர்வு செய்துகொள்ளலாம். மொத்தம் 5 பாடங்கள் கட்டாயமாகும். இவை தவிர ஏதேனும் இரண்டு பாடங்களையும் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளலாம்.

இவை தவிர விருப்பமிருப்பின் தட்டச்சு (ஹிந்தி,தமிழ்,உருசு), ஜுட் புரொடக்ஷன், தச்சுப்பணி (Corpentary), சூரிய ஆற்றல் தொழில்நுட்பம் (Solar Energy Technician), உயர் வாயுத் தொழில்நுட்பம் (Bio Gas Technician), சலவை சேவை (Laundry Service), பேக்கரி அண்ட் கன்ஃபெக்சனரி (Bakery’s Confectionary) பற்றவைப்பு தொழில்நுட்பம் (Welding Technology) ஆகிய பாடங்களிலிருந்து, ஏதேனும் ஒரு பாடத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இவற்றில் கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஹோம் சயின்ஸ், பெயின்டிங், டேட்டா என்ட்ரி ஆப்பரேஷன் இவற்றிற்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் உண்டு.

சீனியர் செகண்டரிக்கு குரூப்-A-யில் ஹிந்தி, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், குஜராத்தி, பெங்காளி, தமிழ், ஒடியா, பஞ்சாபி என்ற மொழிப் பாடங்களும், குரூப்-B-யில் கணிதம், ஹோம் சயின்ஸ் (Home Science), உளவியல் (Psychology), புவியியல் (Geography), பொருளாதாரம், வணிக படிப்புகள் (Business Studies), பெயின்டிங் (Painting), டேட்டா என்ட்ரி ஆபரேஷன் (Data Entry Operation) என்ற பாடங்கள் உள்ளன.

குரூப்-Cயில் இயற்பியல், வரலாறு, நூலகம் மற்றும் செய்தி அறிவியல் (Library and Information Science) என்ற பாடங்களும், குரூப்-Dயில் வேதியியல், அரசியல் அறிவியல், பொதுத் தொடர்பு (Mass Communication).குரூப்-Eயில் உயிரியல், கணக்கியல், சட்டம் என்ற பாடங்களும், குரூப்-Fயில் - கணினி அறிவியல், சமூகவியல், சுற்றுப்புற அறிவியல் (Environmental Science) என்ற பாடங்களும் தரப்பட்டுள்ளன.

இவற்றில் ஹோம் சயின்ஸ், புவியியல், பெயின்டிங், டேட்டா என்ட்ரி ஆபரேஷன், இயற்பியல், லைப்ரரி அண்டு இன்ஃபர்மேஷன் சயின்ஸ், வேதியியல், மாஸ் கம்யூனிகேஷன், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், என்வரோன்மென்ட் சயின்ஸ் இவற்றிற்கு எழுத்துத் தேர்வுடன் செய்முறைத் தேர்வும் உண்டு.

இவற்றில் குரூப்-Aயிலும் ஒன்று அல்லது இரண்டு பாடங்கள் குரூப்-B, C, D, E, F இவற்றிலிருந்து ஒவ்வொரு குரூப்பில் ஒன்று மட்டும் என்று மீதம் பாடங்கள் எடுத்து மொத்தம் 5 பாடங்கள் எடுக்க வேண்டும். இவை தவிர இரண்டு அடிப்படையான பாடங்களையும் C, D, E, A என்ற குரூப்களிலிருந்து ஒன்று என்றவாறு எடுக்கலாம்.

விருப்பமிருப்பின், டைப்ரைட்டிங், செக்ரட்டேரியல் பிராக்டிஸ், ஸ்டெனோகிராபி, தாவரப் பாதுகாப்பு, நீர்மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, காளான் உற்பத்தி, பர்னிச்சர் மற்றும் கேபினட் மேக்கிங், மின் முலாம், ஹவுஸ்கீப்பிங், உணவு மேலாண்மை, உணவு பதப்படுத்தல், விளையாட்டு மையம் மேலாண்மை, கோழிப்பண்ணை, மண் மற்றும் உரம் மேலாண்மை, பழம், காய்கறி, பாதுகாப்பு போன்றவற்றில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.

செகண்டரி, சீனியர் செகண்டரி வகுப்புகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு மொழிப் பாடங்கள் உள்ளடக்கி குறைந்தது 5 பாடங்கள் தேர்ச்சி பெற வேண்டும். குறைந்தது ஒரு மொழிப் பாடம் அதிகப்படியாக இரண்டு மொழிப் பாடங்கள். உபரி பாடங்கள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 7 பாடங்கள் எடுத்துக்கொள்ளலாம்.தேசிய திறந்தநிலைப் பள்ளியில் சேர்வதற்கான வழிமுறை, கட்டண விவரம், தொடர்பு முகவரி உள்ளிட்ட தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.     
           

 தொடரும்