செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

பொறியியல் கல்லூரி ஆசிரியர் பணிக்கு தகுதி பெற புதிய சான்றிதழ் படிப்பு!

பொறியியல் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், பொறியியல் கல்லூரி ஆசிரியர் பணிக்கு கட்டாயச் சான்றிதழ் படிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பணியில் இருக்கும் பேராசிரியர்களும் இந்தச் சான்றிதழ் படிப்பை முடித்து தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்துவருகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கை இதற்கு முக்கியக் காரணம் என்றபோதும், பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள் தரமற்ற கல்வியை வழங்குவதால் பிற வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பொறியியல் பட்ட மாணவர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

மேலும் அலுவலக துப்புரவாளர், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. பொறியியல் கல்வியின் இந்த மோசமான நிலையை மாற்றி, தரமான மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய வகையிலான கல்வி வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஏ.ஐ.சி.டி.இ. எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொறியியல் கல்லூரி ஆசிரியர் பணிக்கு கட்டாய சான்றிதழ் படிப்பை ஏ.ஐ.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள், இந்தச் சான்றிதழ் படிப்பை கட்டாயம் முடித்தாக வேண்டும்.

 ஏற்கெனவே பணியில் இருப்பவர்களும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், இந்த சான்றிதழ் படிப்பில் தகுதி பெற்றுவிட வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பொறியியல் பாடத் திட்டத்தை எவ்வாறு மேம்படுத்துவது, கற்பித்தலில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தச் சான்றிதழ் படிப்பில் இடம்பெற்றிருக்கும்.

தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது!

ஆண்டுதோறும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் இருந்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு தேசிய அளவில் 350 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 45 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒருவருக்கு மட்டுமே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், கோவையைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸதிக்கு மட்டுமே இந்த ஆண்டு விருது வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் சில்வர் மெடல் ஆகியவை ஆசிரியை ஸதிக்கு வழங்கப்படும்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவசப் பயிற்சி!

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கிவருகிறது. இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை, மெயின் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு மூலமாக தகுதியுள்ள மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் முதன்மை தேர்வுக்குப் பயிற்சி இலவசம். அந்தவகையில், 2019-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு இலவசப் பயிற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவ-மாணவிகளை தேர்வு செய்வதற்கான நுழைவுத்தேர்வு வரும் ஜனவரி(2019) மாதம் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் முற்பகல் 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த நுழைவுத்தேர்வு எழுத விரும்புவோர்  செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழுநேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய மருத்துவ முறைகளுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்!

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கு தனியே ஆயுஷ் என்ற மத்திய அரசுத்துறை செயல்படுகிறது. இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையிலேயே இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக சுகாதார துறையின்கீழ் செயல்படும் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவமுறைப் படிப்புகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதன்படி 6 அரசுக் கல்லூரிகள் மற்றும் 23 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள இந்த மருத்துவப் பாடப்பிரிவுகளுக்கு மொத்தம் 1,312 இடங்கள் உள்ளன. இதில் அரசுக் கல்லூரியில் 396 இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில் 916 இடங்களும் உள்ளன.

இந்த இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய இடங்களிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை செப்டம்பர் 5-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.