மாணவர்களின் மன உறுதியைத் தகர்க்கும் கட்டாயத் தேர்ச்சி!



*சர்ச்சை

பொதுத் தேர்வு எழுதிவிட்டு காத்திருக்கும் பிளஸ் 2 மாணவர்களில் சிலர் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அந்தச் செய்தி ஒவ்வொரு வருடமும் கேட்டு பழகிப்போன செய்திகளில் ஒன்றாக மாறிப்போய்விட்டது. அரசின் தவறான கொள்கை நிலைப்பாட்டால் தான், இந்த மாணவர் தற்கொலைகள் அரங்கேறுகின்றன என்றால் நம்பமுடிகிறதா? நம்புங்கள். உண்மை நிலவரத்தை அலசி ஆராய்ந்தால் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.



ஆங்கிலத்தில் கேஸ்கேடிங் எஃபெக்ட்(Cascading Effect) என்றொரு பதம் உள்ளது. இதன்படி இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்தும் சங்கிலித்தொடர் நிகழ்வுகள். சீட்டுக்கட்டால் கட்டப்பட்ட கோபுரத்தின் கீழ்வரிசையில் உள்ள ஒரு சீட்டை எடுத்தால் மொத்த கோபுரமும் இடிந்துவிடும். அதுபோன்ற ஒரு தவறான நிலைப்பாட்டால் ஏற்பட்ட சங்கிலித்தொடர் நிகழ்வுகளின் முடிவே மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள்.

ஒரு புறம் மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் அரசு, பள்ளி மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க, மருத்துவ ஆலோசனைக்கு தன்னுடைய சுகாதாரத்துறை சார்பில் 104 என்ற டோல் ஃப்ரீ தொலைபேசி எண்ணை அறிவித்து, அந்த சேவையும் சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. 104 டோல் ஃப்ரீ எண்ணில் பணியாற்றும் மனநல டாக்டர்கள், மனநல ஆலோசகர்கள் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவருக்கு மனநல ஆலோசனை வழங்குகிறார்கள்.

அப்படியென்றால் அரசு எப்படி மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமானது என்று கேட்கத் தோன்றும். அதையும் பார்ப்போம். சமீபத்தில் பி.எட் முடித்துவிட்டு, பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்துள்ள இளம் ஆசிரியர் ஒருவரைச் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்ன தகவல்கள், கட்டாயத்தேர்ச்சி தொடர்பான அரசின் கொள்கை நிலைப்பாடு தவறு என்று உணர்த்தியது.

பி.எட் படிப்பின் முடிவில் ஆசிரியராகப் போகிறவர் ஒரு பள்ளிக்குச் சென்று சில மாதங்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். அந்த வகையில் குறிப்பிட்ட இளம் ஆசிரியர் ஒரு பள்ளியில் 9ம் வகுப்புக்குப் பாடம் நடத்த சென்றிருக்கிறார். பருவத் தேர்வு ஒன்றின் விடைத்தாள்களை குறிப்பிட்ட இளம் ஆசிரியரே திருத்துமாறும், அதை தான் சரிபார்த்துக்கொள்வதாக வகுப்பாசிரியர் சொல்லியுள்ளார்.

தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த இளம் ஆசிரியர் எடுத்து திருத்திய ஒரு மாணவரின் விடைத்தாளில் தமிழில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் இருந்துள்ளன. குறிப்பிட்ட அந்த மாணவருக்கு 100க்கு 9 மதிப்பெண் மட்டுமே வழங்கியுள்ளார். அதற்கு அந்த வகுப்பாசிரியர், ‘‘சார் இப்படி திருத்தினீர்கள் என்றால் யாரும் பாஸ் ஆக மாட்டார்கள். எச்எம், சிஇஓ-வுக்கு (முதன்மைக் கல்வி அதிகாரி) பதில் சொல்ல முடியாது. என் மேல் பிளாக் மார்க் வந்துவிடும். 100 சதவீத தேர்ச்சி என்பதே நம் இலக்கு’’ என்று சொல்லி இளம் ஆசிரியரை அடுத்தடுத்த விடைத்தாள்களை திருத்த அனுமதிக்கவில்லை. நானே திருத்திக்கொள்கிறேன் என்று சொல்லி விடைத்தாள்களை வாங்கிச் சென்றுவிட்டாராம்.

மேற்கண்ட நிகழ்வின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. 100 சதவீத தேர்ச்சி என்பதை மாணவர்களை நன்றாக படிக்க வைத்துக் கொண்டு வருவதற்கு பதிலாக, விடைத்தாளை எளிதாக திருத்தி ஒற்றை இலக்க மதிப்பெண் பெறும் மாணவனை பாஸ் ஆக்கிவிடுகிறார்கள். அதற்கு ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதில் 8ம் வகுப்பு வரை படிப்பே வராவிட்டாலும் கட்டாயத் தேர்ச்சி வேறு. கட்டாயத் தேர்ச்சி முறை அமலுக்கு வருவதற்கு முன், தம்பியை விட 2 அல்லது 3 ஆண்டுகள் மூத்த அண்ணன் சரியாக படிப்பு வராதநிலையில் ஃபெயிலாகி, ஃபெயிலாகி தம்பியுடன் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்த நிலை இருந்ததை மறந்துவிட முடியாது.


அப்போது மாணவர்கள் அதற்கு வருத்தப்படவில்லை. காரணம் ஃபெயில் ஆனால் திரும்ப அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்பது நடைமுறை. பல மாணவர்கள் அவ்வாறு படித்தார்கள். இதைச் சரி என்று நியாயப்படுத்தவில்லை. ஆனால், மாணவர்கள் விரைவில் மனம் உடைபவர்களாக இல்லை.மேலும் பள்ளிக் கல்வித்துறை தெரிந்தோ தெரியாமலோ மாணவர்களுக்கு சில தோல்விகளை தாங்கிக்கொள்ள கற்றுக்கொடுத்தது. ஆனால், இன்று நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.

சமூகத்தில் உள்ள பிரச்னைகளை எதிர்கொண்டு அவற்றுடன் போராடி வெற்றிபெற்று சிறப்பான வாழ்கை வாழ்வதற்கான தகுதிகள் உள்ள மாணவர்களைத் தான் அரசு உருவாக்க வேண்டும். அதை இலக்காக வைத்து செயல்பட வேண்டிய பள்ளிக் கல்வித்துறை, சிறப்பாக செயல்படுவதாக காட்டிக்கொள்ள 100 சதவீத தேர்ச்சியை இலக்காக வைத்து உழைக்கிறது. 100 சதவீத தேர்ச்சியை மாணவர்களை தயார்படுத்தி பெறாமல் தேர்வுத்தாளை எளிதாக திருத்துவதன் மூலம் தேர்ச்சியடையவைக்கிறது.

இப்படி 9ம் வகுப்பு வரை எந்தவிதமான தோல்விகளுக்கும் பழக்கப்படாத மாணவன் திடீரென்று 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் பாஸ் ஆகவில்லை என்பது கடும் மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது. பெற்றோரும் தங்களின் எதிர்பார்ப்புகளை மாணவர்களின் மீது திணித்து சிறுவயதிலேயே அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். மாணவர்களும் உறவினர்கள், அண்டை, அயலாரின் பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்பதால் ‘‘Social Stigma’’வால் தற்கொலைக்குச் செல்கின்றனர்.

மாணவர்கள் தற்கொலையை தடுக்க வேண்டுமானால் உண்மையிலேயே நல்ல முறையில் பாடம் நடத்தி திறன் மிக்கவர்களாக்கி தேர்சியடைய வைக்க வேண்டும். அப்படி செய்யமுடியாதபட்சத்தில் அரசுத் தரப்பில் கட்டாயத் தேர்ச்சி என்று சொல்லிக்கொண்டு மன உறுதியற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்க்குவதை நிறுத்த வேண்டும். சில தோல்விகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பிரச்னைகளை எதிர்கொண்டு வாழக்கூடிய மனநிலையை மாணவர்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பதே அரசுக்கான நம் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

- சுந்தர் பார்த்தசாரதி