படிப்பது இந்தியாவில்... வேலை வெளிநாட்டிலா... கொந்தளிக்கும் பாராளுமன்ற நிலைக் குழு!



செய்திகள் வாசிப்பது டாக்டர்

இந்தியாவில் மருத்துவம் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நிலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது பாராளுமன்ற நிலைக்குழு.

தேசிய மருத்துவ ஆணைய மசோதா பற்றி ஆராய்வதற்கு, சுகாதாரம் குறித்த பாராளுமன்ற நிலைக்குழு, சமாஜ்வாடி எம்.பி. ராம்கோபால் யாதவ் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவின் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவில் வரி செலுத்துவோரின் பணத்தில் படித்து மருத்துவர் ஆனவர்கள், வாய்ப்பு கிடைத்தவுடன் வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, குறைந்தபட்சமாக குறிப்பிட்ட காலத்துக்கு அந்த மருத்துவர்கள் உள்நாட்டில் பணியாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று இந்த குழு சிபாரிசு செய்துள்ளது.

கிராமப்புறங்களில் தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்த பிறகு, அங்கே மருத்துவர்கள் ஓராண்டு பணிபுரிவதை கட்டாயமாக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்தில் நியமிக்கப்படுபவர்கள், தங்களது தொழில் மற்றும் வர்த்தக தொடர்புகளை வெளியிட வேண்டும். பல் மருத்துவ கவுன்சில், நர்சிங் கவுன்சில் போன்றவற்றுக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்றும் இந்தக் குழு சிபாரிசு செய்துள்ளது.

இது சட்டமாக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதை சரி செய்ய முடியும் என்று நம்பிக்கைக் குரல்
களும் இந்த சிபாரிசுக்குழுவுக்கு ஆதரவாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

- கௌதம்