17-ம் நூற்றாண்டு மருத்துவமனை



ரவுண்ட்ஸ்

சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்டான்லி மருத்துவமனை பல்வேறு பெருமைகளைக் கொண்டது. நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட அதே நேரத்தில், உறுப்பு மாற்று சிகிச்சைகள் உள்பட பல அதிநவீன சிகிச்சைகள் கொண்டதாகவும் விளங்குகிறது.

பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான பாலமாக செயல்பட்டு மருத்துவ சேவையை கடந்து 300 ஆண்டுகளாக வழங்கி வரும் இதன் சிறப்புகள் பற்றியும், மருத்துவமனையின் முக்கிய பிரச்னைகள் பற்றியும், நோயாளிகளின் எதிர்பார்ப்புகள் என்னவென்பதையும் அறிந்துகொள்ள ஒரு மதிய நேரத்தில் ரவுண்ட்ஸ் சென்றோம்…

ஸ்டான்லி மருத்துவ மனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி (Residential Medical officer) ரமேஷ், நம்மை வரவேற்று மருத்துவமனை பற்றிய முக்கியத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘மருத்துவரீதியான சேவை அளிப்பதற்காக 1740-ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனியால் தொடங்கப்பட்ட மருத்துவமனைதான் இப்போது ஸ்டான்லி என்ற மருத்துவமனையாக உருவெடுத்திருக்கிறது. அப்போது சென்னை மாகாண கவர்னராக பணிபுரிந்த ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி என்பவர் 1931-ம் ஆண்டு ஐந்தாண்டு பயிலும் மருத்துவ கல்லூரியை இங்கு நிறுவினார். இவரது பெயராலேயே இப்போது மருத்துவமனை அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கு வட சென்னை மக்கள் மட்டுமில்லாமல் ராயபுரத்தில் தொடங்கி கும்மிடிப்பூண்டி பகுதி வரை வசிப்போரும், ஆந்திராவைச் சேர்ந்த நெல்லூர், சித்தூர் ஆகிய ஊர்களில் இருந்தும் தினமும் 8 ஆயிரத்திலிருந்து 9 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இங்கு பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சைப்பிரிவு, கண் மற்றும் இதயம் என 44 சிறப்பு உட்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 2016-ம் ஆண்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கெனத் தனியாக சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இங்குதான் முற்றிலும் இலவசமாக செய்து தரப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இதற்கு சுமார் 40-லிருந்து 50 லட்சம் வரை செலவாகும்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இங்கு இருக்கின்றன. சமீபத்தில் 3 மாதங்களுக்கு முன்புகூட 2 கைகளையும் இழந்த ஒருவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து முன்பு இருந்ததைப் போலவே கைகளைப் பொருத்தினோம். தமிழகத்திலேயே முதல் தடவையாக ஸ்டான்லியில்தான் இச்சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கான தனி புறநோயாளி பிரிவு தமிழகத்தில் முதன்முதலாக இங்குதான் தொடங்கப்பட்டது. முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 635 விதமான நோய்களுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொள்ளும் வசதி உள்ளது. காப்பீடு திட்ட அட்டை இல்லாதவர்களுக்காக அதனைப் பெற்றுத் தரும் சேவையும் இங்கு உள்ளது. இதற்கு தமிழக அரசின் குடும்ப அட்டை, வருமான வரி சான்றிதழ் கொண்டு வந்தால் போதும்.

புறநோயாளிகளாக சிகிச்சை பெற வருபவர்கள் காலை 7.30 முதல் மதியம் 12 மணிவரை இலவசமாக சிகிச்சை தரப்படுகிறது. அதன் பின்னர் வருபவர்கள் 24 மணி நேரமும் செயல்படுகிற அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மருத்துவமனையின் சிறப்பான செயல்பாட்டுக்கு செவிலியர் ஆற்றுகிற பங்களிப்பும் முக்கியமானது. ஆண் செவிலியர் 25 பேர் உட்பட மொத்தம் 450 நர்ஸ்கள் இங்கு பணியில் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் 250 பேர் படிப்பை, பயிற்சியை முடித்து மருத்துவராக சேர்கின்றனர். மேலும், 200-லிருந்து 250 பேர் மருத்துவ மேற்படிப்புக்காக சேர்கின்றனர்.

முழு உடற்பரிசோதனையை 250 ரூபாய் கட்டணத்தில் மிகச் சிறப்பாக செய்து தருகிறோம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கேட்கும் திறனில் குறைபாடு இருந்தால், இலவசமாக முழுவதும் குணப்படுத்துகிறோம். இதற்கு தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது ரூ5 லட்சம் செலவாகும். தோல் வங்கி வசதியும் இங்கு உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஸ்டெம்செல் ஆய்வு வசதி இங்குதான் முதன்முதலாக நடைபெற்று வருகிறது.

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கும் இங்கு சிறப்பு பிரிவு உள்ளது’’ என்பவர் பொதுமக்களிடம் வைக்கும் கோரிக்கை இது.‘நோயாளிகளுடன் ஒருவர் மட்டும் அட்டெண்டராக வந்தால், மருத்துவமனை நிர்வாகத்துக்கு தொந்தரவு இருக்காது. ஆனால், 4,5 பேர் உடன் வருவதால் அவர்களைக் கட்டுப்படுத்துவதும், தேவையான வசதிகளைச் செய்வதுமே சிரமமாக உள்ளது. அதேபோல் நோயாளிகளைக் காண வருபவர்கள் பார்வையாளர் நேரத்தில் மட்டும்வருவதையும் பின்பற்ற வேண்டும்.’

RMO-விடம் பேசிவிட்டு வெளியே வந்த நாங்கள், துண்டிக்கப்பட்ட கை விரலைச் சரி செய்வதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட குணசேகரனிடம் பேசினோம்...‘‘நான் வேலை செய்கிற இடத்தில் எதிர்பாராதவிதமாக என்னுடைய கை கட்டை விரல் துண்டிக்கப்பட்டு விட்டது.

உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டேன். மருத்துவர்கள் என்னுடைய காலில் இருந்து ஒரு விரலை துண்டித்து கட்டை விரல் இருக்கும் இடத்தில் பொருத்தி இருக்கிறார்கள். இது எனக்கு முன்பு இருந்த கட்டை விரல் போல் இருக்கிறது, என்னால் அசைக்க முடிகிறது’’ என்றார்.

மாற்று மார்பகம் சிகிச்சை பெற்றிருக்கும் சென்னையைச் சேர்ந்த வள்ளியிடம் பேசும்போது, ‘‘எனக்கு சமீபத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த என்னுடைய இடது புற மார்பகத்தை அகற்றிவிட்டார்கள்.

இதற்குப் பதிலாக என்னுடைய வயிற்றிலிருந்து சதை பகுதியை எடுத்து எனக்கு முன்பு இருந்தது போலவே மார்பகம் பொருத்தியிருக்கிறார்கள் இது எனக்கு முன்பு இருந்த மார்பகம் போலவே இருக்கிறது’’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இவர்களைத் தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் ஜெயக்குமாரிடம் பேசினோம்...‘‘தமிழ்நாட்டிலேயே கடந்த 30 ஆண்டுகளாக ஸ்டான்லி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரியை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக செய்து வருகிறோம்.

கால் விரல்கள் துண்டிப்பு, கை விரல்கள் துண்டிப்பு, தீ, விபத்தால் முக பாதிப்பு, கால் சதை பகுதி பாதிப்பு, பெண்களின் மார்பகம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அகற்றியிருந்தால், அவர்
களுக்கு அவர்களின் உடலி–்ருந்து சதை எடுத்து இயல்பான மார்பகம் போலவே பொறுத்தும் சிகிச்சை போன்றவற்றை சிறப்பாக செய்து வருகிறோம்.

இதற்கு எல்லாம் தனியார் மருத்துவ மனைகளில் 2 முதல் 5 லட்சம் வரை செலவாகும். ஸ்டான்லியில் இலவசமாக சிகிச்சை அளிக்கிறோம்’’ என்கிறார்.கல்லீரல் மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜஸ்வந்த் கூறும்போது...

 ‘‘கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பநிலை சிகிச்சையிலிருந்து அறுவை சிகிச்சை வரை சிறப்பான மருத்துவம் செய்து வருகிறோம். அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தவுடன், ஆரோக்கியமான உணவு குறித்தும் மதுப்பழக்கத்தைக் கைவிடுவதற்கான ஆலோசனையும் வழங்கி அனுப்பி வைக்கிறோம். மேலும் குடல் மற்றும் கல்லீரல், பித்தப்பை பாதிப்புகள் இருந்தால் ஆரம்ப நிலையிலயே வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வலியுறுத்துகிறோம்’’ என்கிறார்.

தரம் உயர்த்தப்படுமா?

இத்தனை பெரிய சிறப்புகளும், பாரம்பரியமும் மிக்க ஸ்டான்லி மருத்துவமனையில் சரி செய்ய வேண்டிய முக்கிய பிரச்னைகளும் இருக்கின்றன. Clean india என்று பேசிக் கொண்டிருக்கிற நேரத்தில், சுகாதாரக் குறைவு கொண்டதாக பல இடங்களிலும் காட்சி அளிக்கிறது மருத்துவமனை. அதேபோல், பாதுகாப்பு வசதிகளும் கேள்விக்குறியதாக இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம், வெளியே செல்லலாம் என்கிற அளவுக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கின்றன. குழந்தைத் திருட்டு போன்ற பல குற்றச்செயல்களுக்கு இது வழிவகுக்கவும் வாய்ப்பு உண்டு.

அதேபோல், மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாகவும், மருந்துகளை வெளியிடங்களில் வாங்கிக் கொள்ளுமாறு சொல்வதாகவும் பல நோயாளிகள் நம்மிடம் குறை கூறியதையும் கேட்க முடிந்தது. இவற்றையும் சரி செய்துவிட்டால் இன்னும் கம்பீரமாக மருத்துவ சேவையை ஆற்றும் மகத்தான மருத்துவமனையாக மாறும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை!

- விஜயகுமார், க.இளஞ்சேரன்

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்