திங்கள் முதல் வெள்ளி வரை...



லன்ச் பாக்ஸ்

திரும்பத் திரும்ப சொல்லப்படும் மந்திர வாசகம் ஒன்றுதான்... உணவே மருந்து! ஆனால், மருந்தாகும் வகையில் நம் உணவு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினால், இல்லை’ என்று எல்லோருமே ஒருமித்த குரலில் ஒப்புக் கொள்வார்கள். கடமைக்கு என்ற பொருளிலும் மருந்து என்ற வார்த்தை பொருள்படுகிறது. அது போல மருந்துக்குத்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

காலையில் அவசர அவசரமாக கிடைத்ததை விழுங்கிக் கொண்டு ஓட்டம் பிடிப்பதிலேயே நம் கவனம் முழுவதும் நிரம்பியிருக்கிறது என்றால், மதிய உணவு அதைவிட மோசம் என்றே சொல்ல வேண்டும். காசுக்கும், கவுரவத்துக்கும் யோசித்துக் கொண்டு கண்ட இடங்களிலும் சாப்பிடுகிறோம் அல்லது போதுமான உணவினை எடுத்துக் கொள்வது இல்லை. எனவே, மதிய உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம்.

உணவியல் நிபுணர் திவ்யாவிடம் மதிய உணவை ஆரோக்கியமாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டோம்...


‘‘ஆரோக்கியமான மதிய உணவு என்றவுடனே, அதெல்லாம் பணக்காரர்களுக்குத்தான் என்று உடனே மனத்தடையை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். நாம் அன்றாடம் பின்பற்றி வரும் மதிய உணவுமுறையிலேயே சில மாற்றங்களை மேற்கொண்டால் போதும். முதலில் மனதுக்குள்ளோ அல்லது காகிதத்தாலோ மதிய உணவு பற்றி ஒரு திட்டம் வைத்துக் கொள்ள வேண்டும். திங்கள் முதல் வெள்ளி வரையில் 5 நாட்கள் என்றால் 5 விதமான மதிய உணவு என்று பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.

வாய்ப்பு இருப்பவர்கள் மதிய உணவு தயார் செய்யும்போது சாதத்திற்கு சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி, குதிரைவாலி, சாமை போன்ற பல்வேறு அரிசி வகைகளை தேர்ந்தெடுக்கலாம். முடியாத பட்சத்தில் புழுங்கல் அரிசியே சிறப்புதான். இதில் புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம் இதுபோல் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு உணவு என்று பிரித்துக் கொள்ள வேண்டும்.

உணவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அதனுடன் இரு மடங்கு காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாம்பாராக இருந்தால் அதில் பருப்பு அதிகமாக இருக்க வேண்டும். கீரை வகைகள் எந்த கீரையாக வேண்டுமானாலும் இருக்கலாம். வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தினமும் தயிர் அல்லது மோர் எடுத்துச் செல்ல வேண்டும்.

அசைவ பிரியர்கள் மதிய உணவுக்கு அதிகம் எண்ணெயில் பொரித்த உணவை எடுத்துச் செல்லக் கூடாது. அதற்குப் பதிலாக குழம்பாகவோ அல்லது கிரேவியாகவோ எடுத்துச் செல்லலாம். அவித்த முட்டை, ஆம்லேட் எடுத்துச் செல்லலாம்.முட்டை சாதம், கேரட் சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி, கறிவேப்பிலை சாதம், கொத்தமல்லி சாதம், தயிர் சாதம், அது மட்டும் இல்லாமல் சிறுதானியங்கள், கைக்குத்தல் அரிசி, சிவப்பரிசி போன்றவற்றில் உணவு தயாரித்து எடுத்துக் கொள்ளலாம்’’ என்கிற திவ்யா, மதிய வேளையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றியும் கூறுகிறார்.

‘‘துரித உணவுகளான பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் உப்பு அதிகமாகக் கொண்டு தயாரிக்கப்படும் அப்பளம், ஊறுகாய், சிப்ஸ் போன்ற உணவுகள், சோடியம் அதிகமாக இருக்கும் உணவுகளான பிஸ்கட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மதிய உணவு வகைகளை வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது. மதிய உணவு எடுத்துக் கொள்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, வாரத்திற்கு 5 நாளும் தினமும் ஒரு பழ வகையாக என எடுத்துக் கொள்ள வேண்டும். பப்பாளி, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்கள் மதிய உணவுக்கு முந்தைய சரியான பழங்களாக இருக்கும்.’’

- க.இளஞ்சேரன்